மரம் ஒரு வரம்

கேரள மாநிலம் பாலக்காடு தேன்குறிச்சியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான  ஷாம் குமார் (52). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  சாலையோரங்களில் 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்துள்ளார்.
மரம் ஒரு வரம்

கேரள மாநிலம் பாலக்காடு தேன்குறிச்சியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான ஷாம் குமார் (52). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்துள்ளார்.

மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் குறித்து அப்பகுதியில் உள்ள குழந்தைகளையும் ஊக்குவித்து ஆர்வத்தை தூண்டுகிறார். இவரது ஆட்டோவில் " மரம் ஒரு வரம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் கத்தி, கடப்பாரை, மண் வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும், தண்ணீர் வாலிகளும் இருப்பதை கண்டு சில சமயம் பயணிகள் இவரது ஆட்டோவில் ஏறுவதற்கு தயங்குவதும் உண்டு.

இவர் வசிக்கும் தேன்குறிச்சி கிராமத்தை அடுத்த கொடுவாயூர், பெருவம்பூ கிராமங்களில் சாலையின் இருப்புறங்களிலும் இவரால் நடப்பட்டு பராமரிக்கப்பட்ட மரக்கன்றுகள் நிழற்சாலையாய் காண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

80 சதவீதம் மா, பனை, முந்திரி, ஆலம், நாவல், வேப்பம், வெப்பத்தை தணிக்கும் மருத்துவ குணமுள்ள வாகை, மணிமருது, கரிமருது, பொங்கு, கனிக்கொன்னா நடுவது மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைகிறது.

இவரது அரும்பணியை பாராட்டி கேரள அரசு வனமித்ரா, பிரக்ருதி மித்ரா, தேசிய இயற்கை திருவிழா பி.வி.தம்பி உள்ளிட்டவையும் தனியார் தொண்டு அமைப்புகள் 15 க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரக்கன்று நட்டு பராமரிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூராக பள்ளம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது, தன்னால் முடிந்தால் தானே அப்பணியை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு மனைவி சஜிதா, சாயூஜ் 9 ஆம் வகுப்பு, சஞ்சனா 6 -ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் உள்ளனர்.

சமூகப் பணிக்கு மனைவி, குழந்தைகளும் துணையாக உள்ளதாக பெருமிதத்தோடு கூறுகிறார் ஷாம்.

அப்துல் கலாம் இறந்த அன்று முந்திரி மரக்கன்றுகளை நட்டார். தற்பொழுது மரமாக காய்த்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கேரள கொல்லங்கோடில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பூவரசம் மரங்களை நட்டதையும் நினைவுகூறுகிறார்.

இயற்கையை நேசித்து வாழ்வது புது சுகம் தான். கேரள பாலக்காடு வனத்துறைக்கு கடந்த 2 ஆண்டுகளாக பல ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதியில் மரம் வளர்க்க விரும்புவோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி ஊக்குவிக்கிறார் ஷாம் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com