இயற்கையோடு  வாழத்தான் நமக்கு ஆசை!

""பணம் கொடுப்பது, கடனை அடைப்பது  மட்டுமே விவசாயிக்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காது.
இயற்கையோடு  வாழத்தான் நமக்கு ஆசை!

""பணம் கொடுப்பது, கடனை அடைப்பது  மட்டுமே விவசாயிக்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காது. மாட்டு வண்டியில் விவசாயம் செய்கிறவனுக்கு தச்சன், டிராக்டரில் உழுறவனுக்கு டிராக்டர், பயிரைப் பாதுகாக்க மருந்து, விதை.. இப்படி விவசாயிக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. இது தவிர, கந்துவட்டிப் பிரச்னைகள் வேறு. இதையெல்லாம் தாண்டி ஒருவர் விவசாயம் செய்ய நினைத்தால், நாட்டு விதைகளை வைத்து விவசாயம் செய்த காலம் போய், இப்போது எல்லாமே மரபணு விவசாயமாக மாறிவிட்டது. சாதாரண மனிதனுக்குக் கிடைக்கிற அடிப்படை வசதிகள்கூட இப்போது இருக்கிற கிராமங்களில் கிடைப்பதில்லை. சுருக்கமாக சொன்னால், சினிமாவில் காட்டுகிற மாதிரியான கிராமங்கள் இப்போது இல்லை'' அமைதியாக பேசத் தொடங்குகிறார் இயக்குநர் மணிகண்டன். "காக்கா முட்டை' படத்தின்  மூலம் கவனம் ஈர்த்தவர். 

இப்போது "கடைசி விவசாயி' பட வாயிலாக வருகிறார்.

கதைக்கான ஆரம்ப புள்ளி எப்படி உருவானது....

"காக்கா முட்டை'யைத் திரைப்பட விழாவுக்கு அனுப்பும்போதுதான் "கடைசி விவசாயி' கதையை எழுதினேன். தென்தமிழகத்தில் ஒரு விவசாயிக்கு நடந்த ஒரு சின்ன சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால், அந்தச் சமயத்தில் விவசாயப் பிரச்னையைப் பற்றி எந்த மீடியாவும் பெரிதாக  பேசவில்லை. அதனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. தவிர, நான் சொன்ன பட்ஜெட்டுக்கு எந்தத் தயாரிப்பாளரும் உடன்படவில்லை. ஓகே சொன்ன தயாரிப்பாளர்களும், "அந்த விவசாயி கதாபாத்திரத்தில் பெரிய ஹீரோவை வயதான தோற்றத்தில் நடிக்க வைக்கலாம்' என்று சொன்னார்கள்.  இப்படிச் சில காரணங்களால் படம் தள்ளிப் போனது. நடுவில் "குற்றமே தண்டனை', "ஆண்டவன் கட்டளை' படங்களை முடித்தேன். இப்படித்தான் "கடைசி விவசாயி' கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கலைத்தன்மையுடன் படம் செய்வது உங்களது வழக்கம்...

கமர்ஷியலுடன் கலையும் இருக்க வேண்டும். அதுதான் என் பாணி. இப்போது இருக்கிற கிராம சூழல் எப்படி என்பதை தெரிந்து கொள்ள உசிலம்பட்டியைச் சுற்றி இருக்கிற 150 ஊர்களுக்குப் போனேன். அந்தத் தேடலில் நிறைய தெரிந்து கொண்டேன். அதைக் கதையிலும் கொண்டுவர நினைத்தேன். விவசாயப் பிரச்னை தீர்ந்து விட்டால்,  தமிழ்நாடு நன்றாக  இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், இப்போது இருக்கிற சூழலில் அதைத் தாண்டிப் பல பிரச்னைகள் இருக்கின்றன. வானம் பார்த்து மழை வந்தபிறகு கண்மாய் நிரம்பியதும் பழைமையான முறையில் விவசாயம் நடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த அந்த ஊர் மக்களையே படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் தவிர, நடித்த எல்லோருமே கிராமத்து மனிதர்கள்தான். டப்பிங் கிடையாது. எல்லாமே லைவ் ரெக்கார்டிங். கிராமங்களிலேயே தங்கி ரொம்பப் பொறுமையாக படப்பிடிப்பு  நடத்தினேன். இதுவரை நான் இயக்கிய படங்களில், இதுதான் பெரிய பட்ஜெட்.

இன்னும் ஏதும் சுவாரஸ்யம்  திரைக்கதையில் இருக்கிறதா?

பொதுவாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குலதெய்வம், அதை வழிபடுவதற்காக ஒரு முறை இருக்கும். ஒரு மரக்கால் நெல்லைப் படைத்து சாமி கும்பிட வேண்டும். அந்த நெல்லை அந்தக் குடும்பத்தைச் சார்ந்த மூத்த விவசாயிதான் எடுத்துக் கொடுக்க வேண்டும். அந்தச் சமயத்தில்தான் ஊர் மக்களுக்கு விவசாயம் பற்றியும், மொத்த ஊரிலேயும் 75 வயது முதியவர் ஒருவர் மட்டும்தான் விவசாயம் செய்து வருகிறார் என்று  தெரிய வருகிறது. அவர்தான் முக்கிய கதாபாத்திரம். தண்ணியே இல்லையென்றாலும் கொஞ்சமாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறவர். இந்த மாதிரியான சூழலில் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் கதை. தவிர ஒரு கிராமம், அங்கே இருக்கிற மனிதர்கள், அவர்களுடைய நம்பிக்கைகளும் கதையோடு வரும். நகரங்களில் நாம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், கிராமங்களில் இயற்கையோடு ஒன்றி வாழத்தான் நமக்கு ஆசை இருக்கும். அதுதான் இது.

விஜய்சேதுபதிக்கு என்ன ரோல்...?

விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லாண்டி என்பவருக்கு முக்கிய வேடம். இயல்பாக  நடித்திருக்கிறார். 

அந்தப் பெரியவரின் சொந்தக்கார பையனாக வருகிறவர் விஜய் சேதுபதி. பெரியவர் பெயர் மாயாண்டி, விஜய் சேதுபதி பெயர் ராமையா. ரொம்பச் சின்ன கேரக்டர்தான் அவருக்கு. கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டு இருக்கிற முருக பக்தர். நெடுஞ்சாலையில பயணிக்கும்போது கண்டிப்பாக இந்த மாதிரியான ஆள்களைப் பார்த்திருப்பீங்க. மனநிலை பாதிக்கப்பட்டவர் மாதிரி கண்டிப்பாக, பேசும்படியான கேரக்டர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com