தோனியின் புது முயற்சி

"கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்த்தை அனிமேஷன் கதாபாத்திரமாக ரஜினியின் மகள் செளந்தர்யா காட்சிப்படுத்தியிருந்தார்.
தோனியின் புது முயற்சி


"கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்த்தை அனிமேஷன் கதாபாத்திரமாக ரஜினியின் மகள் செளந்தர்யா காட்சிப்படுத்தியிருந்தார். ..'கோச்சடையான்' தோல்விப் படமாகியது. பொருளாதார ரீதியாக செளந்தர்யாவுக்கும் பல பிரச்னைகளை உருவாக்கியது. பிரபல நடிகர் அனிமேஷன் யுக்தியில் அகலத்திரையில் காட்டப்பட்டால் அவரது ரசிகர்களே பார்க்கமாட்டார்கள் என்று தெரியவந்ததினால் இந்த முயற்சியில் வேறு யாரும் ஈடுபடவில்லை.

நீண்ட இடைவெளிவிட்டு, அனிமேஷன் யுக்தி மீண்டும் இந்தியாவில் கையாளப்படுகிறது. "அதர்வா - மூலம் ‘ படத்தில் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி அனிமேஷன் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார். ரமேஷ் தமிழ்மணி எழுதிய புராணமும், அறிவியல் மாயமும் கலந்த கிராபிக்ஸ் நாவலின் அடிப்படையில் இந்த அனிமேஷன் படம் தயாராகிறது. தயாரிப்பதும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். அதாவது தோனி - தோனியின் மனைவி சாக்ஷி சேர்ந்து நடத்தும் நிறுவனம்.!

நீண்ட தலை முடியுடன், சிக்ஸ் பேக் தசைகளைக் அரக்கர்களிடமும், பயங்கர மிருகங்களுடனும் போரிடுவதாகக் காட்டியுள்ளார்கள். 2019-இல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் தோனி புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டிவருகிறார். கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த தோனி இப்போது எல்லா வித ரசிகர்களையும் கிராபிக்ஸ் கலந்த அனிமேஷன் படம் மூலம் மகிழ்விக்கலாம் என்று முதல் காலடியை தோனி எடுத்து வைத்துள்ளார்.

2019-ஆண்டில் இருந்து டிஸ்னி-ஹாட் ஸ்டார் சானலுக்காக சில தொடர்களை தோனி-சாக்ஷி தயாரித்து வழங்கியுள்ளார்கள். இப்போது நேரடியாகவே தோனி களத்தில் இறங்கியிருக்கிறார்...!

நனவாகிறது எம்ஜிஆரின் கனவு

ஒரு பக்கம் வெள்ளித்திரையில் காண்பிக்க, மணிரத்னம் "பொன்னியின் செல்வன்' படத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து முன்னணி நடிகர்கள் நடிகைகளை வைத்துத் தயாரிக்க... மறுபுறம் சின்னத்திரைக்காக "பொன்னியின் செல்வன்' அனிமேஷன் யுக்தியில் தயாராகி வருகிறது.

கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாகத் தயாரிக்க எம்ஜிஆர் பெரிதும் முயன்றார். கடைசிவரையில், அவரது கனவு கனவாகவே இருந்துவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசனும் "பொன்னியின் செல்வன்' படத்தைத் தயாரிக்க ஆர்வம் காட்டினார். அதுவும் நிறைவேறவில்லை.

அனிமேஷன் "பொன்னியின் செல்வன்' படத்தில் எம்ஜிஆரின் கனவு நனவாகிறது. ஆம்..! எம்ஜிஆர் மீண்டும் நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடங்களில். "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான வந்தியத் தேவன், அருள் மொழி வர்மனாக எம்.ஜி.ஆர் நடிக்கிறார். அனிமேஷன் "பொன்னியின் செல்வன்' படத்தில் இதர பாத்திரங்களில் மறைந்த நடிகர்கள், நடிகைகள் அனிமேஷன் உருவங்களில் தோன்றலாம்..! அப்படி செய்வது பார்வையாளர்களை ஈர்க்கும்.

முதல் பாகம் தயாரிக்கப்பட்டுவிட்ட நிலையில் அனிமேஷன் "பொன்னியின் செல்வன்', "4 கே' ஒளிபரப்பு துல்லிய தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. "கோச்சடையான்' தோல்வி தந்த எச்சரிக்கை காரணமாக, பாண்டிச்சேரியைச் சேர்ந்த எட்டு கணினித்துறை பேராசியர்கள், அனிமேஷன் துறையில் பெயர் சொல்கிற மாதிரி சாதனை செய்ய வேண்டும் என்று பெரிதாக முதலீடு செய்திருக்கிறார்களாம். யோசித்து யோசித்து அனிமேஷன் "பொன்னியின் செல்வன்' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அமைத்திருக்கிறார்களாம். சின்னத்திரையில், அனிமேஷன் "பொன்னியின் செல்வன்' தொடராக வெளியாகும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com