பறவைகள் சூழ் உலகம்!

பயணம் என்றாலே குதூகலம்தான். பயணம் என்றால் பலருக்குமே பிடிக்கும், ஆனால் பயணப்பட நேரமும், வாய்ப்பும் இல்லை என்ற ஏக்கம் இருக்கும்.
பறவைகள் சூழ் உலகம்!

பயணம் என்றாலே குதூகலம்தான். பயணம் என்றால் பலருக்குமே பிடிக்கும், ஆனால் பயணப்பட நேரமும், வாய்ப்பும் இல்லை என்ற ஏக்கம் இருக்கும். ஆனால் திருப்பத்தூர் அருகேயுள்ள ஆண்டியப்பனூரில் மருத்துவராக பணியாற்றும் விக்ரம்குமார் ஓர் பயண விரும்பி. பறவை ஆர்வலர். "எந்தத் துறையாக இருந்தாலும் உங்கள் பணி பாதிக்காமல் பயணங்களை அவ்வப்போது நீங்கள் திட்டமிட்டுக்கொண்டால் உங்கள் பணியோடு சேர்த்து வாழ்வும் அழகாகும்' என்கிறார் விக்ரம் குமார். 

பயணத்தின் மீது ஆர்வம் எப்போது, எப்படி?

விவரம் தெரிந்த நாள் முதலே பயணம் என்றால் உள்ளுக்குள் மகிழ்ச்சி முதல் நாளே எனக்குள் உருவெடுப்பதை உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தொலைதூரம் பயணித்து சூழலை அனுபவிக்கும் வாய்ப்பெல்லாம் எனக்கு கிடைத்ததில்லை. அருகிலிருக்கும் கிராமத்திற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ பேருந்தில் செல்வதும் சிறப்பான பயண அனுபவம் தான்! அதிலும் பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளிக்காற்றை சுவாசித்துக்கொண்டே பயணிப்பது அலாதியான அனுபவம். பேருந்தின் ஜன்னலோரம் எனது 
இப்போதைய பயணத்திற்கான ஊற்றாக சொல்லலாம். 

பள்ளியின் மூலம் செல்லும் சுற்றுலா,  குடும்பத்துடன் செல்லும் சுற்றுலா, இவை அனைத்தும் என்னுள் நிறைய பயணம் செய்ய வேண்டும் என தூண்டிய காரணிகள். சேலத்தில் வாழ்ந்ததால் அருகிலிருக்கும் ஏற்காட்டிற்கு அடிக்கடி தந்தையோடு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது! மலைகளை ரசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதற்கான காரணமாக அந்த பசுமையான இரு சக்கர வாகன மலையேற்றதை சொல்லமுடியும். அம்மா மற்றும் பாட்டியுடன் செல்லும் பயணங்களும் எனக்குள் பயணத்தை விதைத்த காரணிகள்!

ஒவ்வொரு பயணத்தின் போதும், புதுப்புது இடங்களைப் பார்க்க போகிறோம் என்ற மனத்திருப்தி கொடுக்கும் உணர்விற்கு ஈடில்லை! நாளடைவில்,செல்லும் இடங்களில் இருக்கும் மக்களின் உணவுப்பழக்கம், கலாசாரம், வாழ்வியல் முறைகள் போன்ற விஷயங்களை கவனித்தேன். சமீப வருடங்களாக சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை பயணங்களின் மூலம் என்னுள் புதியதாகப் பிறப்பெடுத்திருக்கிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதற்கான அட்சய பாத்திரமாக பயணங்கள் எனக்கு பெருமளவில் உதவுகிறது. 

பயண ஆர்வம் இயற்கை மீதா, பறவைகள் மீதா, விலங்குகள் மீதா?

மூன்றும்தான், உற்று நோக்கினால் அனைத்தையும் இயற்கைக்குள் அடக்கிவிடலாம். பல இயற்கை சூழந்த பகுதிகளில் நிச்சயம் ஏதாவது ஒரு பறவையை நாம் தரிசிக்கமுடியும். சிலநேரங்களில் கேரளத்தில் இருக்கும் தட்டக்காடு போன்ற பறவைகள் நிறைத்த பகுதிக்கும் செல்வதுண்டு! விலங்குகளை அதன் இருப்பிடங்களிலேயே பார்த்து ரசிக்கும் வனவிலங்குப் பயணங்களும் சுவாரஸ்யமானவை. இவை தவிர்த்து, இயற்கை எழில் சூழந்த மலைப்பயணங்கள், காடுகளுக்குள் நடைவழிப் பயணங்கள், காடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்குவது, அனைத்துமே நமக்குள் ஆனந்த உணர்வை ஊற்றெடுக்கச் செய்பவை. பறவைகள் குறித்தும், விலங்குகள் குறித்தும் நாம் தெரிந்துக்கொண்டால் பயணங்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். பறவைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் பயணங்கள் என்னை தூண்டின! பறவைகள் உலகத்திற்குள் என்னை நுழைத்த எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன் மறக்க முடியாத நபர். 

பயணங்கள் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?

இயற்கைக்கு மீறிய சக்தி எதுவுமில்லை! இயற்கையை விட்டு விலக நினைத்தால், உடல் மற்றும் மனதளவில் மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும் என்பதை பயணங்கள் கற்றுக்கொடுக்கும்.

பயணங்களின் போது இயற்கையும் அதனோடு இயைந்த நமது வாழ்க்கை முறையும் எவ்வளவு அழகானது என்று தோன்றும். பல நேரங்களில் நகர வாழ்க்கையை விட்டு விலகி, பயணம் செல்லும் புது இடங்களிலேயே தங்கிவிடலாமா என்றும் தோன்றுவதுண்டு! 

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அதை நான் உணர்ந்தும் இருக்கிறேன். ஒரு பயணம் முடித்து திரும்பும் போது, புது சிந்தனையும் அளவில்லா உற்சாகமும் உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் உணர முடியும். மனம் புத்துணர்வுப் பெற்றுதுள்ளல் உற்சாகத்துடன் அடுத்த பல மாதங்களுக்கான எரிபொருளைப் பயணங்கள் வழங்கும். பல புதிய மனிதர்களின் அறிமுகமும் நட்பும் கிடைப்பதுடன் அவர்
களின் அனுபவமும் உங்களுக்கு கைக்கொடுக்கும். 

மருத்துவப் பணிக்கு பயணம் இடையூறாக இல்லையா?

நிச்சயம் இல்லை. மருத்துவம் முதன்மை பணி! பயணங்கள் வாய்ப்பு இருக்கும் போது நம்மைமெருகேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு. வார ஓய்வு நாளில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில நாட்கள், என பயணங்களைத் திட்டமிடுவதுண்டு. நான் சித்த மருத்துவர் என்பதால் பயணம் செல்லும் கிராமங்களில், காடுகளில், மலைகளில், உள்ள மூலிகை அறிவு குறித்தும் பாரம்பரிய மருத்துவம் குறித்தும் தெரிந்துக் கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்குவேன். 

அந்த அனுபவம் எனது மருத்துவப் பணிக்கும் பேருதவி புரிகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் உங்கள் பணி பாதிக்காமல் பயணங்களை அவ்வப்போது நீங்கள் திட்டமிட்டுக்கொண்டால் உங்கள் பணியோடு சேர்த்து 
வாழ்வும் அழகாகும். 

மறக்க முடியாத பயண அனுபவங்கள்?

பறவைகள் இல்லாத உலகமில்லை. ஆனால் நமக்கு பறவைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. காடுகளில் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்வதும், அவற்றின் சத்தங்களை கேட்டு புத்துணர்வு பெறுவதும் அலாதி பிரியம். தட்டக்காட்டில் புதுப்புது பறவைகளை ஆசை தீர ரசித்த முதல் பறவைப் பயண அனுபவம், வனவிலங்கு சரணாலயங்களில் செல்லும் இரவுப்பயணங்கள், காடுகளில் செல்லும் நடைவழிப் பயணங்கள், கர்நாடக காடுகளின் அழகு, 
கருநாகத்தை தேடிய இரவுப்பயணம், தமிழக கிராமங்களின் பாரம்பரிய பயணம், கேரளத்தின் கடற்கரைப் பயணம், என சுவாரஸ்யமான பயணங்கள் இன்னும் நிறையவே உண்டு!... 

பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வேன். காடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது குழுவாக தான் செல்வோம். இரவு காடுகளில் தங்குவது திகிலாக இருக்கும். 

அதிகம் பயணம் செய்வது மிகவும் நல்லது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டமிடலுக்கு அது வழிவகுக்கும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு அதாவது அடுத்த தலைமுறைக்கும் நிறைய பயணம் செய்ய கற்றுக்கொடுங்கள், சிறுவயதில் பயணங்களை நீங்கள் விதைத்துவிட்டால், எதிர்காலத்தில் வன்மமற்ற, பாகுபாடற்ற, பொறாமையில்லாத, காழ்ப்புணர்ச்சி இல்லாத அழகான சமுதாயம் உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com