உயிர் காக்கும் தோழர்

சென்னை மண்ணடிச் சேர்ந்தவர் சதக்கத்துல்லா. 50 தடவைக்குமேல் ரத்த தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றுவதற்குக் காரணமாக இருந்தவர்.
உயிர் காக்கும் தோழர்

சென்னை மண்ணடிச் சேர்ந்தவர் சதக்கத்துல்லா. 50 தடவைக்குமேல் ரத்த தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றுவதற்குக் காரணமாக இருந்தவர். மத நல்லிணக்கம்  மேம்பட வேண்டும்  என்பதற்காக இந்தச்  சேவையை 29 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். ரத்த தானம் செய்யும் எண்ணம் உருவானது எப்படி? அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்:


""எனது சொந்த ஊர்  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம். சென்னையில் கட்டட பராமரிப்பாளர் ஆகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு சமூகப்பணியில் ஆர்வம் அதிகம். 

1990-ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் அமெச்சூர் ரேடியோ (ஹாம் ரேடியோ) பற்றி நாளிதழில் செய்தி வெளியானது. 

பேனா நண்பர்கள் போன்று அமெச்சூர் ரேடியோ நண்பர்கள் என ஒரு நட்பு வட்டம் உருவானது .

நேரில் சந்திக்காத நாங்கள் அனைவரும் ரேடியோ மூலம் காலை 7 மணிக்கு ஒன்றுகூடி பேசத் தொடங்குவோம். 

இதில் பிறந்த நாள்- திருமண நாள் வாழ்த்துகளைப் பகிர்வோம். அப்போது மருத்துவ அவசரம் என்று பகிர்ந்து கொள்வார்கள்.  அப்படி என்னுடைய ரேடியோ தோழி ஹேமா என்பவர் பெரம்பூர் ரயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரத்தம் தேவை என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.  

இதைக் கேட்ட நான்  1993- ஆம் ஆண்டு முதல் முறையாக ரத்த தானம் செய்யச் சென்றேன் . முதலில் ரத்தத் தானம் கொடுப்பதற்குப் பயமாகத்தான் இருந்தது.  அதன் பிறகுதான் இதனை ஓர் சேவையாக உணர்ந்தேன். 

நாட்டின் மத நல்லிணக்கம் மேம்பட இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதுபோக என்னுடைய ரத்தம் அரிய வகைச் சார்ந்தது ஏ பி நெகட்டிவ் உலகத்திலே 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் பேர்தான் இந்த ரத்த வகையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

அதனால் ரத்ததான முகாமில்  கூட இந்த வகை ரத்தத்தை எடுக்கமாட்டார்கள். ஆபரேஷன் போன்ற அவசர தேவைகளுக்கு மட்டும் தான் என்னுடைய ரத்தம் தேவைப்படும். 

இதுவரை 53 தடவை ரத்த தானம் செய்துள்ளேன். எனக்குத் தற்போது 52 வயதாகிறது.  


ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால் தொடர்ந்து தானம் செய்ய முடியவில்லை.  ஆனால் 65 வரை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்பவர்களுக்கு உடலில் எந்த நோயும் இருக்கக்கூடாது. 

ரத்த தானம் செய்வதற்குக் குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையைக் கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம். ஆனால் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய முடியும்.

கர்ப்பிணி பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்துத் தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்குக் கர்ப்ப காலங்களில் லேசான ரத்த சோகை ஏற்படுவதாலும் அவர்கள் ரத்த தானம் செய்வதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனவே அவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகே ரத்த தானம் செய்யும் தகுதியை பெறுகின்றனர்.

சில மருந்துகளை உட்கொள்பவர்கள் தற்காலிகமாக ரத்த தானம் செய்யும் தகுதியை இழக்கின்றனர் அவர்களை எடுத்துக்கொள்ளும் மருந்தை பொருத்துக் காலம் மாறுப்படும். 

ரத்த தானம் செய்தவற்கு பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றதா?

உங்கள் ரத்த தானத்திற்கு முன்பு ஏராளமான அளவில் தண்ணீர் குடிக்கவும். அசைவம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஏனெனில் உடலில் புதிய அணுக்களை உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்துத் தேவைப்படுகிறது.

ரத்த தானத்திற்கு முன்பு மது அருந்தக் கூடாது. அது உடலை நீரிழக்க செய்கிறது. வறுத்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.  ஏனெனில் அதிக கொழுப்பு ரத்தத்தில் இருக்கும்போது நோய்த்தொற்றைக் கண்டறிய முடியாது.

ரத்த தானம் செய்யும்போது தற்காலிகமாகச் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையானது குறைகிறது. எனவே இரும்பு சத்து தொடர்பான மருந்துகளை அப்போது எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக ரத்த தானம் செய்த பிறகு உங்கள் உடலுக்கு அதிக ஊக்கம் தேவைப்படுகிறது. எனவே இதற்காக வைட்டமின் சி நிறைந்த உணவுகள் பழங்கள், சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை உண்ணலாம். இவை இரும்பு சத்துக்குச் சிறந்த மூலங்களாக உள்ளன. நீங்கள் இழந்த சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை சகஜ நிலையை அடைய எட்டு வாரங்கள் ஆகும். 

ஆண்களை பொருத்தவரை ஆண்டுக்கு 3 தடவை ரத்தத்தைத் தானமாக வழங்கலாம்.  பெண்களைப் பொருத்தவரை ஆண்டு 2 முறை தானமாக கொடுக்கலாம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ரத்தத்தைத் தானமாக வழங்கக்கூடாது. 

எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் என்னைப் போன்று இதுவரை 12 முறை ரத்த தானம்  செய்துள்ளான். அவருக்கும் இதே ரத்த குரூப் தான். 

என்னுடைய சேவையைப் பாராட்டி சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், நடராஜ் ஐ.பி.எஸ், முன்னாள் கவர்னர்  ரோசையா ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். முடியும் வரை என்னுடைய ரத்த தான சேவை தொடரும்''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com