மனித நேயமுள்ள மனிதர்!

தினந்தோறும்  முருகன் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இட்லி அவிக்க ஆரம்பித்து விடுவார்.
மனித நேயமுள்ள மனிதர்!

தினந்தோறும் முருகன் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இட்லி அவிக்க ஆரம்பித்து விடுவார். உதவிக்கு மனைவியும், மூன்று உதவியாளர்களும் உண்டு. ஆறரை மணிக்கு அவித்த இட்லிகளைப் பொட்டலம் கட்டுவார்கள். இந்த இட்லிப் பொட்டலங்கள் விற்பனைக்கு அல்ல.
கோவை தெருக்களின் ஓரங்களில் தூங்கி எழுந்து பிறரின் உதவியை எதிர்பார்த்து வசிக்கும் நலிந்தவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கவே இந்த இட்லிப் பொட்டலங்கள். சுமார் இருநூறு பேர்களுக்கு இட்லிகளை தினமும் முருகன் விநியோகம் செய்து வருகிறார்.
"பிளஸ் டூ தேர்வில் தோற்று போனதினால் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். பிறகு வீட்டைவிட்டு கிளம்பி சிறுமுகைக்கு 1992-இல் வந்து சேர்ந்தேன்.வேலை கிடைக்காமல் உயிர் வாழ பிச்சை எடுக்கத் தொடங்கினேன். பிச்சைக்காரர்களுடனே தங்கினேன். அப்போது அவர்கள் படும் கஷ்டங்களை நானும் அனுபவித்தேன். ஒருவேளை நல்ல நிலைக்கு வந்தால் தெரு ஓரம் வாழும் பிச்சைக்காரர்களுக்கு உதவவேண்டும் என்று முடிவு செய்தேன்.
கருப்பன் என்ற நல்ல மனிதர் என்னை ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த படியாக ஆட்டோ ஓட்டுநராக மாறினேன். மாதம் மூவாயிரம் வருமானம் கிடைத்தது. 1998-இல் மேட்டுப்பாளையம் சாலையில் வசிக்கும் 25 பிச்சைக்காரர்களுக்கு நானே சமைத்து உணவு வழங்க ஆரம்பித்தேன். இதை அறிந்த நண்பர்கள், எனது முதலாளி எனக்கு மேலும் உதவ பண உதவி செய்தார்கள். பலர் அரிசி, காய்கறி, எண்ணெய் என்று பொருளாக வழங்கினார்கள்.
பிறகு "நிழல் மையம்' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். தன்னார்வத் தொண்டர்களும் எனது முயற்சியில் இணைந்தார்கள். இப்போது தினமும் 200 பேர்களுக்கு இலவச உணவு வழங்கிவருகிறோம்.
எனது தொழில் இலைகளால் தயாரிக்கப்பட்ட தட்டுகளை உணவுவிடுதிகளுக்கு விநியோகிப்பது. கரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர்களுக்கு உணவு வழங்கியிருக்கிறோம்'' என்கிறார் முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com