கரோனா மூன்றாம் அலை... சந்திக்கும் சவால்கள்

2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் துவங்கிய கரோனா எனும் வைரஸ் கிருமியின் தொற்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்து இன்னமும் முடியாத தொடராக சென்று கொண்டிருக்கின்றது.
கரோனா மூன்றாம் அலை... சந்திக்கும் சவால்கள்

2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் துவங்கிய கரோனா எனும் வைரஸ் கிருமியின் தொற்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்து இன்னமும் முடியாத தொடராக சென்று கொண்டிருக்கின்றது. பெருந்தொற்று உலக அளவில் முதல் அலையில் பெரிய உயிரிழப்புகளை சந்திக்காத போதிலும். இரண்டாவது அலையில் டெல்டா வைரஸ் எதிர்பாராத அளவில் உயிர் சேதம் விளைவித்து உலக நாடுகளை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் போன்ற பல மாறுபாடுகளை பெற்று கரோனா வைரஸ் கிருமியும் உருமாற்றம் அடைந்து கொண்டே தான் செல்கிறது.

ஓமைக்ரான் என்ற அதிவேகமாக பரவும் கரோனா கிருமியின் உருமாற்றம் இதுவரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத போதும், பரவும் வேகத்தால் பெரும் சவாலாக உள்ளது. தடுப்பூசியின் பலன் ஒருபுறமிருக்க, இக்கட்டான சூழலை கடந்து தொற்றுக் காலத்தில் நம்மை காத்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாம் அலை உயிர் பயத்தை ஏற்படுத்த வில்லையென்றாலும், உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய். இருதய நோய், இருமல் என பல சிக்கல்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆளாகியுள்ளனர். இது பற்றி மருத்துவர்கள் சிலரின் அனுபவத்தை கேட்டோம்:

வி.எஸ்,நடராஜன்
முதியோர் நல மருத்துவர்

""முதல் அலை, இரண்டாவது அலையை தொடர்ந்து தற்போது மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை பொருத்தவரை கரோனா பற்றி புரிதல் மருத்துவர்களுக்கு இல்லாமல் இருந்தது. தடுப்பூசி இல்லை. இதனால் மரணம் அதிகமானது. வயதானவர்கள் இணை நோய் இல்லாதவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இரண்டாவது அலையில் தடுப்பூசி வந்தது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்தார்கள். திருமணம், இறப்பு போன்றவற்றில் அளவுக்கு அதிகமானோர் கூடியதால் கிராமங்களை கூட கரோனா விட்டு வைக்கவில்லை. இதனால் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால் அப்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது.

மூன்றாவது அலையில் ஓமைக்ரான் பற்றி பயம் இருந்தது. தடுப்பூசி மக்களை காப்பாற்றும் ஆயுதமாக செயல்பட்டதால் உயிரிழப்புகள் மிகவும் குறைந்தது.ஓமைக்ரான் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தது. அதனால் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டது. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, காய்ச்சல், தொண்டை வலி மட்டுமே இருந்தது. நுரையீரலை பாதிக்கவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மூன்று நாள்கள் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தேவையான மருந்து மற்றும் கப சுர குடிநீர் எடுத்து கொண்டு ஓய்வில் இருந்தாலே சரியாகிவிடுகிறது.

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்படுவதாக கருத்து நிலவுகிறது. இதற்கு காரணம் கரோனாவுக்கான மருந்து எடுத்து கொள்பவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதனால் இணை நோய்களுக்கான மருந்து எடுக்காததன் காரணமாக பாதிப்பு அதிகமாகிறது.

இப்போது கரோனா டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. இனி எத்தனை வைரஸ்கள் வந்தாலும் தடுப்பு முறை என்பது நம்முடைய கையில் தான் உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு காய்ச்சல் கூட வருவதில்லை. அதனால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் கரோனா உடன் வாழ பழகி கொள்ள வேண்டும். அதாவது முகக்கவசம் கட்டாயம் நமது வாழ்வின் ஒரு அங்கமாகவிடும். தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். வெந்நீர் மட்டுமே அருந்த வேண்டும். அத்துடன் நமது உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டு வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டும். அதாவது வைட்டமின் சி மாத்திரையாக இல்லாமல் நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரெஞ்சு பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். காலைமாலை நடைப்பயிற்சி அவசியம். அத்துடன் காற்றோட்டமான இடத்தில் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இது போன்ற விஷயங்களால் கரோனா நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம்'' என்றார்.

மரு.சோ.தில்லைவாணன்
அரசு சித்த மருத்துவர்

""நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புசக்திக்கு காரணமான, பாரம்பரிய மருத்துவ, உணவு முறைகளும் தான்.கிருமியின் உருமாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளும் பாரம்பரிய மருத்துவத்தை நாட துவங்கியுள்ளது.

முதல் இரண்டு அலையில் குறிகுணங்களுடன் கூடிய நோய் தொற்றில் கபசுர குடிநீரும், அதனுடன் அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகள் முதல் நிலை ஆய்வில் நல்ல பலன் தருவதாகவும், மற்றொரு ஆய்வில் ஆங்கில மருந்துகளுடன் கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வசந்த குசுமாகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம் சேர்ந்த சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது நல்ல பலன் தருவதாக அறியப்பட்டதும் சித்த மருத்துவத்தின் பலனை வெளிப்படுத்துகிறது. கபசுர குடிநீர் பற்றிய ஆய்வுக்கூட சோதனை மற்றும் பிணைய மருந்தியல் சோதனையில் கரோனா வைரஸின் டெல்டா மற்றும் ஓமைக்ரான் உருமாற்றத்திலும் நல்ல பலன் தருவதாக வந்த முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது.

நோய் தொற்றின் பல்வேறு குறிகுணங்களுக்கும், தொற்றின் பிந்தைய பதிப்பிற்கும் பல்வேறு சித்த மருந்துகள் நல்ல பலன் தருவதாக உள்ளது. அதில் உடல்வலி, உடல்அசதி இவற்றிற்கு மரமஞ்சள் குடிநீர், அமுக்கரா மாத்திரை போன்ற சித்தமருந்துகள் நல்ல பலன் தரும். தசை வலியால் அவதிப்படுபவர்களுக்கு நொச்சி இலை நல்ல பலன் தரும். அதில் உள்ள "லிக்னேன்' வகை வேதிப்பொருள் வலி, வீக்கத்தை ஏற்படுத்தும் "காக்ஸ்2 நொதியின்' செயல்பாட்டை தடுத்து இயற்கையாக உடல்வலியை குறைக்கும். இவர்கள் நொச்சி இலையை நீரிலிட்டு காய்ச்சி குளிக்கலாம். அல்லது நொச்சி, மிளகு, பூண்டு, லவங்கம் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்காத மூலிகைகளை சேர்த்து கசாயமிட்டு குடிக்க உடல் வலியோடு, மூச்சு குழல் வீக்கத்தை சரி செய்து ஆஸ்துமா, மூச்சு திணறல் ஏற்படாமல் தடுக்கும்.

வறட்டு இருமலால் அவதிப்படும் நபர்கள் ஆடாதோடை குடிநீர் எடுக்கலாம். இதில் சேரும் அதிமதுரம் வறட்டு இருமலை போக்குவதோடு, அதில் உள்ள "கிலிசிரிஸின்' என்னும் முக்கிய மூலக்கூறு "சார்ஸ் 2' வகை வைரஸ் தொற்றில் பலன் தருவதாக, கரோனா கிருமியின் தாய்நாடாகிய சீன நாட்டின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றது. ஆடாதோடையில் உள்ள "ப்ரோம்ஹெக்ஸின்' , "அம்ப்ராக்சால்' போன்ற செயல் மூலக்கூறுகள் மூச்சு குழல் பாதை வீக்கத்தை குறைப்பதோடு இருமலை குறைக்கும் தன்மை உடையது.

நோயிலிருந்து மீண்ட இணை நோயுடன் கூடியவர்கள் சீந்தில் எனும் சித்த மருத்துவ மூலிகையினை எடுத்துக்கொள்ளலாம். அமிர்தவல்லி என்று அகத்தியரால் அழைக்கப்படும் சீந்திலில் உள்ள "டினோஸ்போரின்' என்ற உயிரிமூலக்கூறு கரோனா வைரஸ் தாக்கத்தால், இணை நோய்களை அதிகரிக்கவிடாமல் செய்யும். கரோனா நோய் தொற்றுக்கு பின் பலருக்கும் நீரிழிவு ஏற்படுவதாக பெரிய வருத்தம் உள்ளது. அதை தடுக்க இந்த சீந்தில் பெரிதும் உதவும்.

நுரையீரலை வன்மைப்படுத்த "திப்பிலி ரசாயனம்' என்ற சித்த மருந்தினை எடுக்கலாம். எளிமையாக சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூர்ணம் என்ற சித்த மருந்தை கூட எடுக்கலாம். இதற்கு ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உடையதால் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை காக்கும். கபத்தை நீக்கும். வைரஸ் சார்ந்த கழிச்சலால் பாதிக்கபட்டவர்கள் தயிர்ச்சுண்டி சூர்ணம்,ஏலாதி சூர்ணம்,நாக பற்பம் போன்ற எளிய தீதில்லாத சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள பயனளிக்கும்.

ஓமைக்ரான் தொற்றின் பிந்தைய பாதிப்பான முதுகு வலிக்கு நொச்சி இலை ஒற்றடமிடலாம். முதுகு, மூட்டு வலிக்கு, அமுக்கரா சூரண மாத்திரை எடுத்துக்கொள்ள வலியை குறைக்கும். அதே போல் தொற்றுக்கு பின் விளைவாக வரும் சிறுநீரக பாதிப்பிற்கு தனி நிலவேம்பும், நெருஞ்சில் மூலிகையும் நல்ல பலன் தரும்.

இன்னும் எத்தனை தொற்றுக்கள் வந்தாலும் நம்மை காக்க கூடியதாக இருப்பது நம் பாரம்பரிய வாழ்வியல் முறைகளும், உணவு முறைகளும் தான். நவீன கலாசார வாழ்வில் துரித உணவும், உடல்பயிற்சி இன்மையும் , சர்க்கரை வியாதி போன்ற தொற்றா நோய்களுக்கு மட்டுமில்லாமல் தொற்று நோய்களுக்கும் வழி வகை செய்யும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com