ஏழைகளின் அரண்மனை

சென்னையில் ஏழைகளின் அரண்மனை என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால் வாசகர்கள் திகைக்கலாம்.
ஏழைகளின் அரண்மனை


சென்னையில் ஏழைகளின் அரண்மனை என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால் வாசகர்கள் திகைக்கலாம்.  ஆனால்,  மயிலாப்பூர்வாசிகளுக்கு அது சட்டென்று புரிந்துவிடும்.  அதுதான் விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல உறைவிட உயர்நிலைப்பள்ளி. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது. ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வியும், உறைவிடமும், உணவும் இங்கே வழங்கப்பட்டு வருகிறது.  ஏழை மாணவர்கள் இங்கு எல்லா வசதிகளுடன் வளர்க்கப்படுவதால் இந்த மாணவர் இல்லத்துக்கு இப்படி பொருத்தமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

""அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்,
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்''

என்று இந்தவிதக் கல்விப் பணியையே மகாகவி பாரதியாரும் எடுத்துச் சொன்னார்.  இதே நோக்கத்துடன்தான் மாணவர் இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரான சுவாமி விவேகானந்தரின் ஆலோசனையை ஏற்று அவருடைய சகோதரத் துறவியும், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் இன்னொரு நேரடிச் சீடரான சுவாமி ராமகிருஷ்ணாநந்தாவும், தென் இந்தியாவில் ராமகிருஷ்ண மடத்தின் கிளைகளை ஆரம்பிக்க 1897-ஆம் வருடம் சென்னைக்கு வந்தார்கள். ராமகிருஷ்ண மடத்தின் கிளையை மயிலாப்பூரில் நிறுவினார்கள்.

அதேசமயத்தில் ஆந்திரா,  மைசூர் மாநிலங்களில் இருந்து வந்த ஆதரவற்ற சிறுவர்களுக்கு 1905- ஆவது ஆண்டு ராமஸ்வாமி அய்யங்காரின்(ராமு) உதவியுடன் மயிலாப்பூரில் ஒரு சிறிய இடத்தை வாங்கி கல்வியுடன் உணவும் உறைவிடமும் தருவதற்கு மாணவர் இல்லத்தைத் தொடங்கினார். இந்த மாணவர் இல்லம் 17.2.1905-இல் கேசவப் பெருமாள் கோயில் தெருவில் இருந்த ஈழ். நஞ்சுண்டராவ் என்ற பிரபல மருத்துவரின் வீட்டிலிருந்து இயங்கியது. நஞ்சுண்டராவ் மடத்தின் பக்தர். பொதுப்பணியில் ஆர்வம் கொண்டு பலவிதமான உதவிகளைச் செய்து வந்தவர்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக வாரிசும் மற்றொரு நேரடிச் சீடருமான சுவாமி பிரம்மானந்தா  சென்னைக்கு வந்தபோது ராமஸ்வாமி அய்யங்காரை நன்றாக ஊக்குவித்தார். இந்த மாணவர் இல்லம் வளரக்கூடியது. இதற்கு விஸ்தாரமான இடம் தேவை என்பதை உணர்ந்துகொண்டார்.

மாவட்ட நீதிபதியாக இருந்த ந.எ. ஸ்ரீனிவாசாச்சாரியார் 1915-ஆம் ஆண்டு தன் வீட்டு மனையான 15 கிரவுண்டு நிலத்தை மாணவர் இல்லத்துக்குத் தானமாக அளித்தார். அடுத்து இதன் அருகில் இருந்த 11 கிரவுண்டு மனையும் வாங்கப்பட்டது. 

சுவாமி பிரம்மானந்தர் 6.5.1917-இல் புத்த பூர்ணிமா தினத்தன்று புதிய வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். சுவாமி பிரம்மானந்தரின் அருளாசியுடன், ராமசாமி ஐயங்காரின் அயராத உழைப்பு,  பலருடைய உதவியினாலும் மாணவர்கள் தங்குவதற்கு 36 அறைகள், பெரிய வரவேற்பறை, பிரார்த்தனைக் கூடம், மாணவர்கள் நோய்வாய்பட்டால் தங்குவதற்கு தனி அறை, மற்றும் சமையற்கூடம் கூடிய புதிய கட்டடத் திட்டம் போடப்பட்டது.  பின்னர் 10.5.1921-இல்அக்ஷய திருதியை அன்று சுவாமி பிரம்மானந்தரால் மாணவர் இல்லத்தின் புதிய வளாகம் திறந்துவைக்கப்பட்டது.

ராமஸ்வாமி அய்யங்கார் 1905 முதல் 1932-இல் காலமாகும் வரை செயலாளராக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அதற்குப் பிறகு அவருக்கு உதவியாக இருந்த ராமானுஜாசாரியார் செயலாளர் பதவியை ஏற்று 1956-ஆம் ஆண்டு வரை திறமையாகப் பணிபுரிந்தார். இந்த இருவரின் நிர்வாகத்தில் மாணவர் இல்லம் வெகு சிறப்பாக வளர்ந்தது. மாணவர்கள் தங்குவதற்கு இடம்,  உணவு கொடுத்தது தவிர நமது நாட்டின் கலாசாரம்,  கலை நிகழ்ச்சிகளுடன் அறிமுகமாகிறது. மாணவர் இல்லத்தில் ஆண்டுதோறும் விவேகானந்தர் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள்கள் சங்கீதம், நடனம், நாடகம், நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெற்றுவருகின்றன. 

அத்துடன் விஞ்ஞானத்தைத் தழுவிய திறமையான கல்வி பயிற்சியும் தரப்பட்டு வருகிறது. 

இல்லத்தின் அற்புதமான வளர்ச்சிக்கு ராமஸ்வாமி அய்யங்கார்,  ராமானுஜாசாரியார் இருவருக்கும் கணிசமான பங்குண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக இல்லம் தொழிற்சார்ந்த கல்வியில் முன்னோடியாக விளங்குகிறது. இல்லத்தை நடத்தி வருபவர்கள் ஏழைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பினை உருவாக்க தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டிருக்கின்றனர். கல்வித் தகுதியுடன் அவரவர் திறமைக்கேற்றபடி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்,.  இதன் விளைவாக 1925-இல் இருந்து மாணவர்களுக்கு தச்சு, பிரம்பு வேலை, துணி நெய்தல் முதலிய தொழிற்சார் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.

1930-ஆம் ஆண்டு இல்லத்தின் வெள்ளி விழாவில்  அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-இல் தொழில்நுட்ப கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் முதன் முறையாக ஐந்து வருட ஆட்டோமொபைல் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டது. 1949இல் அரசு பொறியியல் படிப்பை சீர் செய்து, பட்டயப் படிப்பை மூன்று வருடமாக ஆக்கியது. மூன்று வருட டி.எம்.இ படிப்பு 1959-இல் ஆரம்பிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆட்டோமொபைல் மற்றும் கம்ப்யூட்டர் என இரண்டு டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட்டன. பயிற்சி பட்டறையும் மற்றும் பரிசோதனை கூடமும் நவீனமயமானவை. இதற்கான எல்லா செலவினங்களையும் இல்லமே ஏற்கிறது. மொத்தம் 384 மாணவர்கள் இங்கே படித்து வருகிறார்கள். இங்குள்ள ஆசிரியர்கள் எல்லோரும் அனுபவம் வாய்ந்தவர்கள்.  மாணவர்கள் மீது அக்கறைக் கொண்டவர்கள். இல்லம் என்பதால் எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழகிவருகின்றனர்.

மாணவர் இல்லத்தில் மாணவர்களின் படிப்பு நிறைவு பெற்றவுடன் சிறந்த நிறுவனங்களில் உடனடியாக வேலை கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் கற்றுக் கொண்ட கல்வி, பெற்ற கட்டுப்பாடு, சேவை மனப்பான்மை ஆகியவை.

ஆக, இங்கே ஏழை மாணவர்கள் பொதுக் கல்வி அறிவு, தொழிலகப் பயிற்சி, வாழ்க்கைக்கு முதன்மையான ஒழுக்கம் ஆகியவற்றை முழுமையாக பெறுகிறார்கள். ஒரு நல்ல சமுதாயத்தின் சிறப்பான உறுப்பினர்களாக இந்த மாணவர்கள் வளர்வதற்கு ராமகிருஷ்ண மிஷன் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது, ஒழுக்கத்துடன் கல்வி என்ற உயரிய நோக்கத்துடன்.

ஒரு விளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றும் என்பார்கள். அதுபோல் இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு மாணவரும் பல விளக்குகளை ஏற்றும் ஒரு விளக்கு. அப்படியாக சுவாமி விவேகானந்தரின் நோக்கம் இங்கே நிறைவேறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com