ஆனி பிராங்கின் டைரி

பதினைந்து வயதுச் சிறுமிதான் ஆனி பிராங்க்.  அவள் எழுதி வைத்துவிட்டுப் போன நாள்குறிப்புதான் அவளை உலகறியச் செய்தது!  யார் அந்தச் சிறுமி? அவளது நாள்குறிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது?
ஆனி பிராங்கின் டைரி


பதினைந்து வயதுச் சிறுமிதான் ஆனி பிராங்க். அவள் எழுதி வைத்துவிட்டுப் போன நாள்குறிப்புதான் அவளை உலகறியச் செய்தது! யார் அந்தச் சிறுமி? அவளது நாள்குறிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஆனி பிராங்க் ஒரு யூதப் பெண் பதினைந்து வயது கூட நிறையாத அவள் எழுதிவைத்த நாள்குறிப்புகள் ஜெர்மானிய நாஜிகளின் கொடுமையை, கள்ளங்கபடமில்லாத சிற்றிளம் பருவத்தின் பார்வையில் எளிதாகச் சொல்கிறது.
யூதப் பெண்ணான "ஆனி பிராங்கின் டைரி' என்ற நூல் மகத்தான படைப்பு; வாழ்க்கை இலக்கியம், வரலாற்று பொன்னேடு; பைபிளுக்கு அடுத்தபடியாக மேலைநாடுகள் இந்த நூலைப் போற்றி வருகின்றன.
"ஆனி பிராங்கின் டைரி' தமிழ் உள்பட 18-க்கும் மேற்பட்ட மொழிகளில் 22 லட்சம் பிரதிகளுக்கு மேல் இது விற்பனையாகியுள்ளது. இந்த நூல் நாடகமாகவும் நடிக்கப்பட்டு மிக உயர்ந்த "புலிட்சர் பரிசையும்' பெற்றுள்ளது.
"பீனிக்ஸ்' நாடக அரங்கில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்றது. பின்னர், புகழ்பெற்ற "20-ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ் கம்பெனியார் ‘ இதைத் திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டுப் புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

டைரியும், வரலாற்றுப் பின்னணியும்..:

ஆனி பிராங்கைப் பற்றி, அவளது நாள்குறிப்பை தெரிந்துகொள்வதற்கு முன், கொடுமையான அந்தக் காலகட்டத்தின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

ஹிட்லரின் இன வெறி, யூத எதிர்ப்பு, கொடுங்கோல் ஆட்சி எல்லாம் உலகறிந்த செய்திதான். இரண்டாம் உலகப் போருக்கான தருணம் பார்த்துப் போர்மேகங்கள் ஐரோப்பாவை வளைத்துக் கவிழ்ந்து குமறிக் கொண்டிருந்த காலம் அது.

ஹிட்லர், ஐரோப்பாவை மனித வேட்டைக் காடாக்கத் திட்டமிருந்தான். 1933-ஆம் ஆண்டு அவன் யூத எதிர்ப்பு ஆணைகளை வரிசையாகப் பிறப்பிக்கத் தொடங்கினான்.

"யூதர்கள் மனித ஜென்மங்களே அல்ல, பன்றியிலும் கீழான பிறவிகள் என்று ஹிட்லர் தன் "மெயின் காம்ப்' என்ற புத்தகத்தில் பகிரங்கமாக எழுதினார். யூதர்களை ஆடு, மாடுகளைப் போல் விரட்டி, ஒரே பகுதியில் குவித்து, சுற்றிலும் பலவிதமான இரும்பு வேலியை அமைத்து அவர்களது கடைகளை, வியாபாரத் தலங்களையெல்லாம் சூறையாடி, பொருள்களைக் கொள்ளையடித்து, அகதிகளாக்கினார்.

முன்பே திட்டமிட்டு அமைக்கப்பட்ட பிரமாண்டமான மரணக் கொட்டடிகளுக்கு, மூடிய சரக்கு ரயில் வண்டிகளில் கால்நடைகளைப் போல் ஏற்றி அனுப்பினார். உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி எங்கே போகிறோம் என்று தெரியாமல் குழந்தை, குட்டி, வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் அவர்கள் சென்றார்கள். அனைவரும் ஆஸ்விட்ஜ், பெர்ஜன் பெல்சன், டாச்சா, புச்சன்வால்ட் போன்ற பயங்கரமான, பிரம்மாண்டமான கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடிய "சைக்லோன் பி' என்ற விஷப் புகையைச் செலுத்திக் கொன்றார்கள்.

நச்சுப் புகையால் மாண்டு, கால்வாய்களில் ஆயிரக்கணக்கானோர் வெந்து, சாம்பலானார்கள். மேலும், யூதர்களை ஹிட்லர் அவ்வளவு சுலபத்தில் முடித்துவிடவில்லை. நினைத்துப் பார்க்கவே முடியாத கொடிய சித்திரவதைகளை அனுபவித்தார்கள்.

யூதர்களின் பச்சை குத்திய உடல் தோல்கள் உரித்து எடுக்கப்பட்டன. அவை மேஜை விரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன. விஷவாயுவால் கிடந்த உடல் கொழுப்பு சோப்பு தயாரிக்க எடுத்து அனுப்பப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானவர்களின் எலும்புகள் பொடிப் பொடியாக்கப்பட்டு நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தப்பட்டது. யூதர்களின் தலைமுடிகள் ஆயிரக்கணக்கான துணிமூட்டைகளில் அடைக்கப்பட்டு, பனிபூட்சுகளின் ரப்பர்க் கலவைக்காக அனுப்பப்பட்டது. இந்த அரக்கத்தனமான வேலைகளையெல்லாம் செய்து முடித்தவர்கள் ஜெர்மானிய டாக்டர்கள்.

யார் அந்த ஆனி பிராங்க்?

சொல்லொணாத இத்தனைக் கொடுமைகளிலும் சிக்கிச் சீரழிந்த ஒரு யூதக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிதான் ஆனி பிராங்க்.

ஆனியின் தந்தை ஆட்டோ பிராங்க்; ஒரு சிறிய வட்டிக்கடைக்காரர்; நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில், அவர்கள் குடும்பம் வாழ்ந்துவந்தது.

ஜெர்மனியில் சிறிய அளவில் வட்டிக்கடை வைத்து நடத்திவந்தவர். ஹிட்லர் பதவிக்கு வந்ததும்.. இனி நாடும் மக்களும் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை என்று யூகித்து, அவர் ஆம்ஸ்டர்டாமுக்குக் குடிபெயர்ந்தார்கள். ஆட்டோ பிராங்குக்கு மனைவி, இரண்டு மகள்கள் உண்டு. இரண்டாவு மகள்தான் ஆனி பிராங்க். மிகவும் புத்திசாலி. படிப்பில் கெட்டிக்காரி. எல்லோரிடத்திலும் கலகலப்பாகப் பேசுவாள்.

நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்த போர்மேகம் வெடித்தது. 1940-இல் ஜெர்மனி, நெதர்லாந்தின் மீது படையெடுத்து, அதை ஆக்கிரமித்தது. ஆட்டோ பிராங்குக்கு நடக்கப் போவது புரிந்துவிட்டது. பாசிஸ்டுகளின் "கெஸ்ட் போ' கொலைப் படையின் கண்களுக்குத் தப்ப, அவர் தம் குடும்பத்தோடு ஒளிந்து தலைமறைவாகிவிட முடிவு செய்தார்.

ஒரு கால்வாய்க் கரையோரம் தன் கடைக்குக் கீழே இருந்த ஒரு நிலவறைக்குள் அந்தக் குடும்பம் ஒளிந்து கொண்டது. சில நண்பர்களும் குடும்பத்தோடு அங்கு வந்து அடைந்து ஒளிந்து கொண்டார்கள். மொத்தம் 8 பேர். கூடவே ஒரு பூனைக்குட்டியும் இருந்தது. அந்த நிலவரையில் ஒளியையும் காற்றையும் இழந்து, எல்லாவற்றுக்கும் மேலாகச் சுதந்திரத்தை இழந்து புவிக்கடியில் கிடந்தனர்.

தனிமைச் சிறையில் எழுதப்பட்ட டைரி: அங்கேதான் ஆனி பிராங்குக்கு 13-ஆவது பிறந்த நாள் வந்தது. அப்போதுதான் அவள் நாள்குறிப்பு எழுத முடிவு செய்தாள். அவளது இளம் உள்ளத்தின் கள்ளங் கபடமற்ற பார்வையில் இருண்டு கிடந்த வாழ்க்கையை, கொடூரமான ஆட்சியை, ஈசல்களைப் போல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறந்து மடியும் அவலத்தைக் கண்டது, கண்டபடியே எழுதத் தொடங்கினாள். இப்படி 16 மாதங்கள் அவள் தனிமைச் சிறை வாழ்க்கையைப் பற்றி, எழுதிக் கொண்டே இருந்தாள்.

ஆனி பிராங்கின் நாள்குறிப்பு 14.6.1941 (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 1.8.1944 (செவ்வாய்க்கிழமை) அன்று முடிவடைகிறது. அந்தக் குறிப்பு வெறும் செய்தித் தொகுப்பாக இல்லை. அவளுடைய சுய விமர்சனங்கள், அரசியல், நாட்டு நடப்பு, யூதர்களுக்கு நடந்த கொடுமை, பல லட்சம் பேர் கொல்லப்பட்டது. பயம், சந்தோஷம்.. இப்படிப் பல உணர்வுகள் என துல்லியமான தகவல்கள் நிறைந்து வழிகிறது.

இந்த டைரியில் சாதாரணப் பள்ளிப் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்ட ஓர் எளிய நாள்குறிப்பு, மனித குலத்தின் மாபெரும் இலக்கியங்களில் ஒன்றாகிவிட்டது.

1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் ஜெர்மனி காவல் துறையினர் அந்தக் கட்டடத்தைக் கண்டுபிடித்து, அங்குலம் அங்குலமாய் சோதிக்கத் தொடங்கினார்கள். அந்த நிலவறையில் அடைந்து கிடந்த எல்லோரும் சிக்கிக் கொண்டார்கள்.

ஆடு, மாடுகளைப் போன்று "ஆவ் விட்ஜ்' சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்கள். சரியான உணவின்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தாள் ஆனியின் தாய். குடும்பம் தனித்தனியே சிதறடிக்கப்பட்டது. உடனிருந்த நண்பர்கள் உயிரிழந்தார்கள் ஆனியின் தந்தை ஆட்டோ பிராங்கை வேறெங்கோ கொண்டு போய் சிறையிலடைத்தனர்.

சிறுமி ஆனி பிராங்க் ஓர் அசாதாரண தைரியத்தோடு "ஆஸ்விட்ஜ்' சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு உணவு வழங்கப்படவில்லை. கடுமையான பனி, குளிரில் நோய்வாய்ப்பட்டாள். கந்தலான நைந்து போன ஆடைகள், கிழிந்து சிதிலமான காலணிகள், சிறையைச் சுற்றிலும் வெளிப் பகுதியிலும் ஏராளமான யூதர்கள் எரிந்து, கரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தார்கள்.

மாசும், நாற்றமும் நிறைந்த அந்தக் காற்று உயிரோடிருந்தவர்களைத் திணறடித்துக் கொண்டிருந்தது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனியும், அவர் தமக்கையும் மொட்டையடிக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் "பெர்ஜன்- பெல்சன்' என்ற மரணக் கொட்டடிக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே அவர்கள் இருவரும் சொல்லொணத் துன்பங்களை அனுபவித்தனர். உடல் மெலிந்தது. இருவருக்கும் டைபாய்ட் காய்ச்சல் வந்தது. 1945-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆனி பிராங்க் உயிரிழந்தாள். சில நாள்கள் கழித்து, அவள் தமக்கையும் உயிரிழந்தாள்.

உலகையே உலுக்கிய டைரி:

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் படைகள் ஐரோப்பாவை மீட்டன. பல நாடுகள் தன்னாட்சி பெற்றன. எங்கோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டோ பிராங்க், ஆனியின் தந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக விடுதலை ஆனார். ஆட்டோ பிராங்க் மட்டுமே அந்தக் குடும்பத்தில் மிஞ்சியிருந்தவர்.

விடுதலை பெற்ற ஆட்டோ பிராங்க், சுதந்திரம் பெற்ற தமது சொந்த நகரமான ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பினார். உடனே குடும்பத்தோடு சில காலம் வாழ்ந்த அந்தப் பழைய சுரங்க வீட்டை அடைந்தார். பெட்டி, படுக்கை, தட்டுமுட்டுச் சாமான்கள் உள்பட அனைத்தையும் சோதித்துப் பார்த்தார். அப்போது, அவரது கைக்கு "ஆனி பிராங்கின்' டைரி கிடைத்தது. முதலில் அவர் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.

ஒருநாள் ஆட்டோ பிராங்கின் உற்ற நண்பர் ஒருவர் எதேச்சையாக ஆனியின் டைரியை எடுத்துப் படித்துப் பார்த்தபோது, திடுக்கிட்டார். திகைத்தார். அதிர்ச்சியில் உறைந்து போனார். அதில் இருந்த செய்திகளை அவர் ஆட்டோ பிராங்குக்கு விவரமாக எடுத்துக்கூற வியப்பின் எல்லைக்கே போனார்.

"அருமை மகள் ஆனி எத்தனை பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்' என்றெண்ணி அழுதார். அரிய செய்திகள் அடங்கிய அந்த டைரியை புத்தகமாக வெளியிட அவரது நண்பர் தூண்டினார்.

"ஆனி பிராங்கின் டைரி' புத்தகமாய் அச்சிடப்பட்டு வெளிவந்த உடனே பதிப்பாளர்களே திகைக்கும் அளவுக்கு சுமார் இரண்டு லட்சம் பிரதிகள் டச்சு மொழியில் மட்டும் வெளிவந்து விற்றுத் தீர்த்தன. பிறகென்ன? அந்தச் சிறுமி ஆனி பிராங்கின் டைரி ஐரோப்பாவை மட்டுமல்ல; உலகத்தையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

1957-ஆம் ஆண்டு மார்ச் மாதம் "பெர்ஜன்- பெல்சன்' மரண முகாமின் பொது புதைக் குழியோரம் சுமார் 2 ஆயிரம் சிறுவர்கள், சிறுமிகள் கூடியிருக்க, பெருமழை கொட்டியது. அப்போது ஆனிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் சொன்னது: ""சின்னப் பெண்ணான ஆனி கொடுமையான முறையில் இன வெறிக்கு பலியானாள். அவள் செய்த அரிய சாதனைக்கும் தியாகத்துக்கும் இந்த உலகமே என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது' .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com