தமிழில் 300 சட்ட நூல்கள்!

இதுவரை 300 சட்ட நூல்களை தமிழில் வெளியிட்டு, மதுரையைச் சேர்ந்த ஏடிசி சட்ட நூல் மையம் சாதனை படைத்துள்ளது.
தமிழில் 300 சட்ட நூல்கள்!

இதுவரை 300 சட்ட நூல்களை தமிழில் வெளியிட்டு, மதுரையைச் சேர்ந்த ஏடிசி சட்ட நூல் மையம் சாதனை படைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில்  தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, சட்ட நூல்கள் தேவையான அளவுக்கு தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றே காரணமாகச் சொல்லப்படுகிறது. இதை முறியடிக்கும் வகையில், பல சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தும்,  சட்ட நூல்களை தமிழ்-ஆங்கிலம் இருமொழி பதிப்பாகவும் வெளியிட்டு வருகிறது ஏடிசி சட்ட நூல் மையம்.

இந்த மைய நிறுவனர் ஏடிசி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

""1986-ஆம் ஆண்டு இந்த மையத்தைத் தொடங்கினோம். தொடக்கத்தில் அரசுத் துறைத் தேர்வுகளுக்கான நூல்களை வெளியிட்டு வந்தோம்.  அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு மாதங்களுக்கு ஒருமுறை தீர்ப்பு திரட்டு என்ற இதழ் வெளியிடப்படும். 

மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான நீதிபதிகள் குழுவானது,  உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தது.  அந்த இதழைப் பார்த்தபோது,  சட்ட நூல்கள் குறித்து ஆர்வம் ஏற்பட்டது. 

இதனிடையே,  தில்லிக்குச் சென்றபோது ஒரு பதிப்பகத்தில் ஆங்கிலம் - ஹிந்தி என இருமொழி பதிப்பாக சட்ட நூல்கள் வெளியிடப்பட்டதை அறிந்தேன். இதை பின்பற்றி, தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியைத் தொடங்கினோம். 

2002-இல் வெளியிட்ட "குற்றவியல் சட்டங்கள்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   "இந்திய தண்டனைச் சட்டம்', "குற்றவியல் விசாரணை முறைச் சட்டம்',  "இந்திய சாட்சியங்கள் சட்டம்' ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்ட நூல்  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சிவில் வழக்குகள் தொடர்பான "உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்',   "பாகப் பிரிவினை,  "பெண்களுக்கெதிரான குற்றங்கள்',  " சிறார் நீதிச் சட்டம்',  " மகளிர் சொத்துரிமை', "வாரிசுரிமை',  "இந்து திருமணச் சட்டம்',  "ஊழல் தடுப்புச் சட்டம்'  உள்ளிட்டவற்றை தமிழில் மொழி பெயர்த்து நூல்கள் வெளியிட்டிருக்கிறோம்.

இடது பக்கம் ஆங்கிலத்திலும் - வலது பக்கம் தமிழிலும் இருக்கும் வகையில் இந்தச் சட்ட நூல்கள் வடிவமைக்கப்படுவதால்,  அனைவருக்கும் எளிதில் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அரசுத் துறையினருக்கு வழிகாட்டுதல்,  வருவாய்த் துறை நிலை ஆணைகள், காவல் துறை  ஆணைகளை தமிழில் மொழி பெயர்த்து நூல்களாக வெளியிட்டுள்ளோம்.  அரசு வழக்குரைஞர் பி.தங்க அரவிந்த்  தலைமையிலான சட்ட நூல் மையமானது சட்ட நூல்கள் வெளிவருவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.  உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்போடு இந்தக் குழுவும் செயலாற்றி வருகிறது.

 மூத்த வழக்குரைஞர்கள் கு.சாமிதுரை,  ஆர்.காந்தி, வி.ஆர்.பூபாலன், ஞானகுருநாதன், எம்.அஜ்மல்கான் உள்ளிட்டோர் மொழிபெயர்ப்புக்கான ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வழக்குரைஞர்கள் மட்டுமல்ல; பொதுமக்களும் சட்ட நூல்களை வாங்கிச் செல்கின்றனர். இதுவரை 200 மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள், 100 இரு மொழிப் பதிப்பு நூல்கள் வெளியிட்டுள்ளோம். இனியும் தொடருவோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com