பசுமை நாயகன்!

பசுமையை விரும்பி  மரங்களைக் காத்து, மரக்கன்றுகளை அன்றாடம் நட்டு பராமரிக்கும் வகையில், கட்டடத் தொழிலாளி ஒருவர் இருந்துவருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பசுமை நாயகன்!


பசுமையை விரும்பி மரங்களைக் காத்து, மரக்கன்றுகளை அன்றாடம் நட்டு பராமரிக்கும் வகையில், கட்டடத் தொழிலாளி ஒருவர் இருந்துவருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர் தமிழக அரசின் 2021- ஆம்ஆண்டுக்கான "பசுமை முதன்மையாளர்' என்ற விருதையும் பெற்றுள்ளார். இந்தப் பெருமைக்கு உரியவர் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஏ.துரைராஜ்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

""நான் கோயில் கோபுரங்களில் சிற்ப வேலை செய்கிறேன். கட்டடத் தொழிலாளியாகவும் பணிபுரிகிறேன்.

2002-இல் நத்தம் பகுதியில் வேலை பார்த்தபோது, பெரிய மரம் ஒன்று மழையால் வேரோடு சாய்ந்தது. அந்த மரத்தில் இருந்த ஏராளமான பறவைகள் தங்களது கூட்டை இழந்து வேறு இடங்களை நோக்கிச் சென்றது எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி மரங்களை வளர்க்க முடிவு செய்தேன்.

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை, சரவணப் பொய்கை, பாம்பன் நகர், அவனியாபுரம் சாலை, கல்வெட்டு குகை கோயில் செல்லும் வழி என பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு, பாதுகாத்து வருகிறேன்.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின் பகுதியில் உள்ள ஆலமரங்களின் விழுதுகள் கீழே ஊன்றுவதற்கு பழைய நெகிழி பைப்புகளைக் கொண்டு, மண் நிரப்பி விழுதுகளை அதன் உள்ளே வைத்து தினமும் நீர் ஊற்றுவேன். இதன்மூலம் விழுதுகள் 45 நாள்களில் வேரூன்றிவிடும்.

மரக்கன்றுகளை வைக்க மழைக்காலமே ஏற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாங்கிநடுவேன்.

அவ்வப்போது அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் அந்தந்த அலுவலர்கள் அனுமதியோடு மரங்களை நட்டும் பாதுகாத்து வருகின்றேன். இவற்றை பாதுகாக்க தினமும் ரூ.300 வரை செலவழித்து, வாகனங்கள் மூலம் மரங்களுக்கு தண்ணீர்விடுகின்றேன்.

பறவைகள், குரங்குகளுக்கு உணவாகப் பயன்படும் வகையில் அத்தி, நாவல், கொடம்புலி, கருங்காலி, கடம்ப மரம், இலுப்பை உள்ளிட்ட மரங்களையும் நட்டு வளர்த்து வருகிறேன். ஒரு மரத்துக்குத் தொடர்ந்து 3 ஆண்டுகள் தண்ணீர் ஊற்றினால் போதும். பின்னர், அவை தானாக வளரத் தொடங்கிவிடும்.

திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரில் மாநகராட்சி சார்பில் குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறேன்.

இதேபோல, நர்சரி அமைத்து அதன்மூலம் பொதுமக்களுக்கு இலவசமாகவும் மரக்கன்றுகளை வழங்கினேன்.

அழிவில் உள்ள கடம்ப மரம், எட்டி, வஞ்சி, பிராயன், புன்னை, மகா வில்வம் உள்ளிட்ட அரிதான மரங்களை வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளேன். எனது சேவையைப் பார்த்து உதவி செய்ய வருபவர்களிடம் பணமாகப் பெறுவதில்லை. மரக்கன்றுகளாக வாங்கி அவர்கள் கூறும் பகுதியிலேயே நட்டு அவற்றையும் பாதுகாத்து வருகிறேன்.

அரசு விருதுடன் கிடைத்த ரூ.1 லட்சத்தை வங்கியில் முதலீடு செய்துள்ளேன். ஆண்டுதோறும் வரும் வட்டியை மரங்களுக்கு செலவழிக்கவே பயன்படுத்துவேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com