பள்ளி மாணவர் உருவாக்கிய ஃபெம்டோ செயற்கைக்கோள்!

ஹாலிவுட் படங்களின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்திழுப்பது உண்டு.
பள்ளி மாணவர் உருவாக்கிய ஃபெம்டோ செயற்கைக்கோள்!

ஹாலிவுட் படங்களின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்திழுப்பது உண்டு. அந்தக் கதாபாத்திரங்களும், எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அனிமேஷன்கள் சிலரை கண்டுபிடிப்பாளராக மாற்றுவது உண்மை என்பதற்கு சேலம் மாணவர் வி.அக்ஷய்ஓர் எடுத்துக்காட்டு.
வளிமண்டலத்தில் கரியமில வாயு அளவு, கடல் மட்ட அழுத்தம், புற ஊதா கதிர்வீச்சு குறித்த விவரங்களை மதிப்பிடுவதற்காக சேலத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளிச் சிறுவன் வி.அக்ஷய், கடந்த 2 ஆண்டு உழைப்பின் விடாமுயற்சியாக நானோ அளவைவிட
சிறிதான ஃபெம்டோ வகை செயற்கைக்கோளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
ஹாலிவுட் படமான "அயர்ன்மேன்' (இரும்பு மனிதன்) படத்தைப் பார்த்து எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தெரிந்து கொண்டு, ரிமோட் மூலம் பேட்டரி கார்களை மாதிரிகளாக உருவாக்கிய கைகள் இப்போது ஃபெம்டோ செயற்கைக்கோளை உருவாக்கி, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் "க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டிக்கு தனது மாதிரியை அனுப்பிவைத்துள்ளார்.
சேலத்தை அடுத்த குகை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழில் செய்து வரும் ஆர்.வெங்கடேஷ்- வி.லதா தம்பதியின் மகன் வி.அக்ஷய். ஃபெம்டோ செயற்கைக்கோள் தயாரித்தது குறித்து மாணவர் வி.அக்ஷய்நம்மிடம் கூறியதாவது:
சிறு வயது முதல் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். ஆங்கிலப் படமான அயர்ன்மேன் படம் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் மேலும் என்னை ஈர்த்தது.
ரிமோட் மூலம் பேட்டரி கார், பேட்டரியைக் கொண்டு மின்விளக்கை எரிய வைப்பது போன்றவற்றை செய்து வந்தேன். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டேன்.
குறிப்பாக, நானோ செயற்கைக்கோள்களை விட குறைந்த எடையில் அதாவது 100 கிராம் எடைக்குள் ஃபெம்டோ வகை செயற்கைகோள்கள் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தேன்.
இதற்காக 9 -ஆம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட ஆர்வத்துக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஊக்கமாக இருந்தனர். பின்னர் 10- ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளி பாடத்தைப் படித்துவிட்டு, இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை பெம்டோ செயற்கைக்கோள் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன். இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன்.
பெம்டோ செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் சுமார் 5 தடவை தோல்வியைச் சந்தித்தேன். ஒரு முறை ஃபெம்டோ செயற்கைக்கோளை முழுவதும் தயாரித்த நிலையில், அது கீழே விழுந்து உடைந்து சேதமடைந்தது. இரவு, பகலாக உழைத்து தயாரித்த செயற்கைக்கோள் கீழே விழுந்து உடைந்ததாலும் என் முயற்சியை விடவில்லை. தொடர்ந்து முயன்று பெம்டோ செயற்கைக்கோள்களைத் தயாரித்தேன்.
இந்த வகை ஃபெம்டோ செயற்கைக்கோள் 3.5 செ.மீ. அளவில் வெறும் 27 கிராமில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 11 வகை (பாராமீட்டர்) தகவல்களைப் பெற முடியும். 32 ஜி.பி. திறன் கொண்ட டேட்டா கார்டு, சோலார் செல்ஸ் என நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஃபெம்டோ வகை செயற்கைக்கோள் என்பது புவி சுற்று வட்டப் பாதையில் சப் ஆர்பிட் எனப்படும் துணை சுற்றுப்பாதையில் அதாவது தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வானில் செயற்கைக்கோள் ஏவி தகவல்களைப் பெற முடியும். இந்த வகை செயற்கைக்கோள்கள் புவி சுற்று வட்டப் பாதையை சுற்றி வராது. மாறாக 20 கிலோ மீட்டர் உயரத்தில் கரியமில வாயுவின் தாக்கம், கடல் மட்ட அழுத்தம், புற ஊதா கதிர் வீச்சு குறித்த விவரங்களைப் பெற முடியும்.
வளி மண்டலத்தில் சூரிய காந்தப் புயல் ஏற்படும்போது செயற்கைக்கோள்கள் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் செயற்கைக்கோளின் வெளிப்புறத்தை தேக்கு மரத்தால் ஆன சிறிய அமைப்புகளால் உருவாக்கி உள்ளேன். இது சூரிய காந்தப் புயலை தாங்க கூடிய வகையில் தயாரித்துள்ளேன்.
இந்த செயற்கைக்கோளுக்கு எனது தாத்தாவை நினைவுகூறும் வகையில் ராமச்சந்திரன் ஏ1 என பெயர் சூட்டியுள்ளேன்.
இந்த வகை செயற்கைக்கோள்களை சவுண்ட் ராக்கெட் அல்லது ஹீலியம் பலூன்களில் பறக்கவிட்டு பாராசூட் மூலம் திரும்பப் பெறலாம். தரைதளத்தில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து செயற்கைக்கோள்களில் இருந்து பல்வேறு வகை தகவல்களைப் பெறலாம்.
அடுத்த முயற்சியாக ஹீலியம் பலூன் மூலம் செயற்கைக்கோளைப் பறக்கவிட்டு தகவலைப் பெற வேண்டும்.
நாசா விண்வெளி மையத்தின் க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன். அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறேன். பெம்டோ செயற்கைக்கோள் தயாரிக்க பலரும் ஆதரவு கொடுத்தனர். இதற்காக ரூ.1.50 லட்சம் வரை செலவானது. எனக்கு கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சர்வதேச சாதனையாளர் அமைப்பு என பல்வேறு அமைப்புகள் பாராட்டி பரிசும்,
விருதும் வழங்கியுள்ளது.
பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் படிக்க உள்ளேன். தொடர்ந்து விண்வெளி தொழில்நுட்பப் படிப்பை மேற்கொள்வேன். அடுத்து நானோ செயற்கைக்கோளை தயாரிக்க ஆர்வமாக உள்ளேன். பட்டப் படிப்பை முடித்துவிட்டு தனியாக நிறுவனத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com