சோதனைகளே சாதனைகள்...!

தன்னார்வலர்களுக்கு முன்னுதாரணமாக  இருப்பதோடு, சவாலான சமூகப்பணிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சாதனைகளாக்கி வருகின்றனர்  மதுரையைச் சேர்ந்த சோகோ அறக்கட்டளையைச் சேர்ந்த
சோதனைகளே சாதனைகள்...!

தன்னார்வலர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு, சவாலான சமூகப்பணிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சாதனைகளாக்கி வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த சோகோ அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்குரைஞர் மகபூப் பாட்சா, வழக்குரைஞர் செல்வகோமதி குழுவினர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சோகோ அறக்கட்டளை, 1982-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பழங்குடியின மக்கள், பெண்கள், நிலமற்ற விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளார்களுக்கான சமூக அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், கொத்தடிமைத் தொழிலாளர்கள், கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கான மறுவாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்வது தன்னாôர்வ நிறுவனங்களில் சோகோ அறக்கட்டளைக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

1980-களில் தொடங்கிய சோகோ அறக்கட்டளையின் கொத்தடிமைத் தொழிலாளார்கள் மீட்புப் பணியானது, பல்வேறு தடைகள், எதிர்ப்புகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பல்வேறு வகையிலும் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை ஒவ்வொரு முறை மீட்கும்போது, அவர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அடுத்தடுத்து மீட்புப் பணிகளைத் தொடருவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் சோகோ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.மகபூப் பாட்சா.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

1983-இல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ தாமரைக்கனி, கொத்தடிமைத் தொழிலாளர் குறித்து பேசியது, மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் கட்டுரையாக வெளியானது.

இதைப் படித்துவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர்செண்பகத்தோப்பு பகுதியில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என நேரடி கள ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, பளியர் என்ற பழங்குடி மக்கள் விவசாயத் தோட்டங்களில் கொத்தடிமையாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதிக்கு தந்தி அனுப்பினேன். அதையே, பொது நல மனுவாக விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்காக ஓர் ஆணையத்தை அமைத்தது. அப்போதைய முகவை மாவட்ட ஆட்சியர், டிஐஜி ஆகியோருடன் நானும் விசாரணை ஆணையத்தில் இடம்பெற்றிருந்தேன்.

காவல் துறை அதிகாரி என் மீது சந்தேகத்திலேயே இருந்தார். ஏனெனில், நான் புகார் அளித்த சமயத்தில் அதே பகுதியில் அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து மக்களைத் துன்புறுத்திய செல்வந்தர் ஒருவரை, ஒரு குழு கொலை செய்தது. இதனால், கொலை செய்தவர்களுடன் எனக்கு தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகப்பட்டார். பின்னர், கள ஆய்வின்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் காண்பித்து இது எவ்வளவு எனக் கேட்டார். அதற்கு ஏழு ரூபாய் எனக் கூறினர். அதன் பிறகே அந்த மக்கள் கொத்தடிமையாக இருப்பதை ஏற்றுக் கொண்டார். விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், கொத்தடிமைகளாக இருந்த 50 குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதேபோல, கொடைக்கானலில் தனியார் தொழிற்சாலையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதை அறிந்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியபோது அரசியல் ரீதியாக கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

குறைவான சம்பளம், நாள் முழுவதும் வேலை, தங்குவதற்கு சரியான இடவசதி இல்லாத குடிசை, இரவு நேரங்களில் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க குடிசையில் வைத்து பூட்டி சித்ரவதை என பெரும் கொடுமையை அத் தொழிலாளர்கள் அனுபவித்தனர். குடிசையில் இருந்தும் பெண்கள், இயற்கை உபாதையைக் கழிக்க, கதவைத் தட்டி காவல்காரர்களை அழைத்து அவர்கள் திறந்தபிறகே வெளியே செல்லக் கூடிய நிலை இருந்தது. இருப்பினும் அவர்களது சூழலை, ஒரு சிலஅதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே விடாமுயற்சியின் பலனாக, அங்கிருந்தும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செங்கல் சூளையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பது, பத்திரிகையாளர் மூலமாகத் தெரியவந்தது. அதை உறுதி செய்த பிறகு, அரசு உயரதிகாரிகளின் கவனத்துக் கொண்டு சென்றோம். அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தவர், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் க.சண்முகம். எங்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அவர், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இறங்கினார்.

அதிகாரிகள் வரும் தகவல் செங்கல் சூளைக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதால், நாங்கள் எந்த இடத்துக்குச் செல்கிறோம் என்பதை கடைசியில்தான் கூறினோம். காலை 6 மணிக்குத் தொடங்கி மீட்புப் பணியை முடிக்க இரவு 9 மணி ஆனது. அங்கு கொத்தடிமையாக இருந்த ஒரு பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அவர்களை அனுப்புவதற்காக செங்கல் சூளையினர், அவர்களது மூத்த மகனை பிடித்து வைத்திருந்தனர் என்றார்.

"குடும்பத்துடன் கொத்தடிமைகளாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், வறுமையால் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுவர்கள், கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகின்றனர். அதோடு, வீட்டைவிட்டு ஓடி வரும் சிறுவர்களை குறிவைத்து பிடிப்பதற்கென புரோக்கர்கள் இருக்கின்றனர். இவர்கள் இந்த சிறுவர்களை ஆசை வார்த்தைகளைக் கூறி வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்'' என்கிறார் சோகோ அறக்கட்டளையின் துணை இயக்குநரான வழக்குரைஞர்செல்வகோமதி.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மகாராஷ்டிரம், ஒடிஸ்ஸா, சத்தீஸ்கர்,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முறுக்கு தயாரிக்கும் வேலையில் கொத்தடிமைகளாக இருந்த சிறுவர்கள் சுமார் 200 பேரை இதுவரை மீட்டுள்ளோம்.

வெளிமாநிலங்கள் என்பதால் மொழிப் பிரச்னை, உள்ளூர் பிரமுகர்களின் மிரட்டல், அச்சுறுத்தல் என பல்வேறு இடர்பாடுகள் இருக்கும். ஆனால், தனது மகன் திரும்பி வரமாட்டானா என சோகோ அறக்கட்டளை அலுவலகத்துக்கு வரும் அப்பாவி பெண்களின் நிலையைப் பார்க்கும்போது, இந்த அச்சுறுத்தல்கள் பெரிதாகத் தெரியவில்லை. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்பு எங்களது பெரும் பக்கபலமாக இருந்தது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்த பிழைப்புத் தேடி வருபவர்களைச் சிலர் ஏமாற்றி கொத்தடிமைத் தொழிலாளர்களாக மாற்றிவிடுகின்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்தது. கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட, அவர்களது 3 குழந்தைகளும் சூளையில் மாட்டிக் கொண்டனர்.

ராஜஸ்தான் சென்றபிறகு, எங்களைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை மீட்பதற்கு உதவி கோரினர். எங்களது நடவடிக்கை தொடங்க இரு நாள்கள் ஆன நிலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு, சூளைக்குச் சென்றபோது அங்கு சூளை செயல்பட்டதற்கான தடயமே தெரியவில்லை. நாங்கள் வருவதை அறிந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். பின்னர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு, துறையூரில் இருப்பதைக் கண்டுபிடித்து மூன்று குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தோம்.

கொத்தடிமைகளாக இருக்கும் சிறுவர்களை மீட்கும்போது, அவர்களது நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். அவர்களில் சிலர், இன்னும் சில நாள்கள் அதே நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழந்திருப்பர்.

இவ்வாறு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற சிறுவன், கொத்தடிமையாக இருந்தபோது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவரை மீட்டு, மதுரை அழைத்து வந்தோம். இங்குள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்த அவர், தற்போது அரசு அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ஒரு வகையில், கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பற்றி தகவல் சோகோ அறக்கட்டளைக்கு வந்துவிடுகிறது. இவர்களிடம் சென்றால் தங்களது பிள்ளைகள் கிடைத்துவிடுவார்கள் என்பதால் பெண்கள் எங்களைத் தேடி வந்துவிடுகின்றனர். அவர்களது சூழ்நிலையானது எங்களை தொடர்ந்து சோர்வின்றி உழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவித் தொகை உயர்த்தப்பட்டிருப்பது நல்ல விஷயம். இந்த உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும்என்கிறார் வழக்குரைஞர் செல்வகோமதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com