அரவணைக்கும் அன்பு!

"மனிதர்களைக் கடிப்பதற்காக நாய்களைப் படைக்கவில்லை. நாய்கள் குரைப்பது கடிப்பதற்காக அல்ல.
அரவணைக்கும் அன்பு!

"மனிதர்களைக் கடிப்பதற்காக நாய்களைப் படைக்கவில்லை. நாய்கள் குரைப்பது கடிப்பதற்காக அல்ல. பாதுகாப்பு, அன்பு, புரிதல், ஏக்கம், பாதுகாப்பு உணர்வு என அனைத்தும் அதில் அடங்கி இருக்கும். இதனைப் புரிந்து கொண்டால் போதும். அவற்றின் அன்பு நம்மை அரவணைக்கும்' என்கிறார் மாரிமுத்து.

மதுரை சேர்ந்த இவர் ஓர் ஆங்கிலப் பட்டதாரி. மத்திய அரசுப் பணியை விட்டுவிட்டு,  போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இவரது முக்கியப் பணியே சமூகத்தில் ஆதரவற்று விடப்படும் நாய்கள், சாலையோரங்களில் அடிப்பட்டுக் கிடக்கும் நாய்களை எடுத்து வந்து சிகிச்சை அளித்து அவற்றை வளர்ந்து வருவது தான். இவர் வீடு-அலுவலகம் என எங்குப் பார்த்தாலும் அவர்களின் பட்டாளமே....

""நான் மதுரை மகாத்மா நகரில் வசிக்கிறேன். 10 ஆண்டுகளாக எல்.ஐ.சியில் பணியாற்றினேன். கைநிறைய சம்பளம். ஆனால் மனம் தேடலில் இறங்கியது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு "ஸ்பார்க்' என்ற பெயரில் மனித வள மேம்பாட்டிற்காக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினேன். இது போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம். இதன் மூலம் முதல் தலைமுறை பட்டதாரிகள் 450 பேருக்கு மேல் அரசு பணிக்கு சென்று இருக்கிறார்கள். 

சிறுவயதில் இருந்தே உயிரினங்கள் மீது பிரியம் அதிகம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் அவற்றிற்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினேன். அப்போது "நன்றி மறவேல்' என்ற சமூக நாய்களுக்கான கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கினேன்.  மனிதர்கள் போன்று சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நாய்கள் அதிகம். அதிலும் பெண் நாய்கள் தான் அதிகம் ஆதரவற்று விடப்படும். சாலையோரங்களில் காயப்பட்டுக் கிடப்பதிலும் அதிக எண்ணிக்கையில் பெண் நாய்கள்  தான் அதிகம். அவற்றை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, பராமரிக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

இப்போது என்னுடைய அலுவலகம்- வீடு இரண்டிலும் சேர்ந்து 60 பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு விட்டு வைத்த மீதி இடங்களைத் தான் நான் பயன்படுத்துவேன்.  

என்னுடைய வீட்டில் காலை எழுந்ததும்  முதல் வேலை  நாய்களுக்குச் சோறு ஆக்குவது தான். மூன்று வேளையும் உணவு வழங்கிவிடுவேன். வாரத்திற்கு இரண்டு நாள்கள் அசைவ உணவு உண்டு.சாப்பிட முடியாத, மீதமாகும் உணவுகளைப் போடுவதில்லை. பிறரையும் போட விடுவதில்லை. அன்றாடம் அவற்றிற்கெனத் தயாராகும் உணவுகளை மட்டுமே வைக்கிறேன். சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி விடுவேன். இது போன்ற பராமரிப்பு பணிகளைச் செய்யக் குடும்பத்திலுள்ளவர்கள் முதலில் தயங்கினார்கள். இப்போது யாரும் தடையாக இல்லை.

நான் இது போன்ற சமூகத்தில் ஆதரவற்று விடப்படும் நாய்களைப் பராமரிப்பது தெரிந்து தினமும் 10 நபர்களாவது என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாய்கள் பற்றிக் கோரிக்கைகளை வைக்கிறார்கள். அதாவது சாலையிலுள்ள நாய்களுக்குச் சோறு போட்டால் சண்டைக்கு வருகிறார்கள். நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் என்பதால் வீட்டில் வைத்து அதனைப் பராமரிக்க முடியவில்லை. உங்களிடம் தரலாமா? என்னுடைய மாமனார், மாமியாருக்கு பிடிக்கவில்லை. இதனை எங்கே கொண்டு போய்விடுவது என என்னிடம் யோசனை கேட்பார்கள். தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்து இதுபோன்று வரும் கோரிக்கைகளுக்கு முடிந்த வரை யோசனை சொல்வேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பேன்.

இவற்றை வைத்து எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

நான் வகுப்பு எடுப்பதில் இருந்து வரும் வருமானத்தில் கணிசமான தொகையை நாய்களின் உணவு செலவிற்காக ஒதுக்கி விடுவேன். இது தவிர என்னிடம் படிக்கும் மாணவர்கள், முகம் தெரியாத சிலர் அவற்றைப் பராமரிக்க உதவி வருகிறார்கள். ஒவ்வொரு நாய்களுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும். அந்தக் கதைக்குப் பின்னால் மனித கொடூரம் இருக்கும். மனிதர்களில் ஒரு சிலருக்கு ஈரம் உண்டு. அந்த ஒரு சிலரால் தான் இந்த சேவையை என்னால் செய்ய முடிகிறது. காரணம் நான் வசிக்கும் அலுவலகம், வீடு இரண்டுமே வாடகை தான். என்னுடைய வீட்டு உரிமையாளர்கள் என்னிடம் காட்டும் அன்பு தான்,  இவற்றை அரவணைக்கக் காரணம். நாய்களைப் பொருத்தவரை அன்பை கொட்டி தரும் ஜீவன். நாம் மனித நேயத்துடன் பயணித்தால் நம்மை மனித நேயம் நிச்சயம் அரவணைக்கும். 

சமீபத்தில் தெரு ஒன்றில் இருவரை பெண் நாய் கடித்து விட்டதாக மாநகராட்சியில் புகார் செய்யப் பிடித்துச் சென்று விட்டார்கள். ஒரு பக்கம் குடியிருப்பு வாசிகள் அதற்கு வெறி பிடித்து விட்டதாகவும் அதனை ஊசி போட்டு கொலை செய்ய வேண்டும் என்று சண்டை பிடிக்கிறார்கள். அந்த நாய் குட்டி போட்டு அவற்றைப் பாதுகாத்து வருகிறது. அதனால் தெருவில் வேகமாக பைக்கில் செல்பவர்களைத் துரத்தி இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய குட்டிகளின் பாதுகாப்பு கருதி கடித்தும் விட்டது இது தான் உண்மை. நான் மாநகராட்சியினரிடம் உண்மை விளக்கி சொல்ல அந்த நாயை வாங்கி வந்தேன். சரஸ்வதி என பெயரிட்டேன். அதற்கு உணவளித்துத் தடுப்பூசி செலுத்தி பராமரித்து வருகிறேன். 

நாய்கள் பொருத்தவரை இரவில் குடித்து விட்டுச் செல்பவர்களைச் சரியான அடையாளம் கண்டுபிடித்துக் குரைக்கும் அல்லது பைக்கில் வேகமாகச் செல்பவர்களைத் துரத்தும். இது ஒரு வகையில் பாதுகாப்பு உணர்வுகாகத் தான் இதனைச் செய்கிறது. அது புரியாமல் நாம் அவற்றைக் கல் எடுத்து எறிகிறோம். நாய்களைப் பொருத்தவரை நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண். 

நாய்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டும் போதும் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ளும். மிகுந்த ஒழுக்கம் நிறைந்த உயிரினம். அதற்கு எஜமான் பேசும் எந்த மொழியாக இருந்தாலும் புரிந்து கொள்ளும். அன்பு மட்டும் தான் அது தரும் மறுமொழி. மனிதர்களுக்கு மனக்குழப்பம், பிரச்னை, ஆபத்து என எல்லா விஷயங்களையும் இவற்றின் அன்பால் மறந்து விடுவோம். 

தொடரும் பராமரிப்பு பணிகளால் உங்களால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

இயற்கை எனக்குத் தந்த வாய்ப்பு இது. உயிர் சார்ந்த பணிகளைப் பாக்கியமாகச் செய்வது புத்திசாலிதனமில்லை. இயற்கையின் உள்ளூணர்வு தான் என்னை இயக்குகிறது. நான் இவற்றை வைத்து தொடர்ந்து பராமரிப்பதன் காரணமாக மென்மை பண்பு அதிகமாகி கொண்டே வருகிறது. வாழ்க்கையில் பரந்த புரிதலை ஏற்படுத்தியுள்ளது. 

சுயநலமில்லாமல் பிற உயிர்களை நேசித்து வாழ வேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் இந்த இயற்கை  நம்மைப் பாதுகாக்கும். 20 வயதில் கூட இத்தனை சக்தியுடன் என்னால் வேலை செய்திருக்க முடியாது. ஆனால் 51 வயதிலும் முழுப் புத்துணர்ச்சியுடன் எனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நாய் தொடர்பான பிரச்னைகளில் பண பலம் படைத்தவர்கள். படை பலம் உள்ளவர்கள் பலர் எதிர்த்தார்கள். ஆனால் காலம் மாற்றத்தால் ஒரு கட்டத்தில் என்னைக் கையெடுத்து வணங்கி என்னுடைய சேவையைப் பாராட்டி இருக்கிறார்கள். 

நன்றி மறவேல் பற்றி...?

இது நாய்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு. நாய்களால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டவும்,  மக்களிடம் நாய்களைப் பற்றிப் புரிதலை உருவாக்கி முயற்சியைச் செய்து வருகிறோம். மாநகராட்சியில் நாய்கள் பற்றிப் புகார் வந்தால் அவற்றைக் கமிட்டி போட்டு விசாரித்து அந்தப் புகாரை முறையாகக் கையாள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கேட்பதற்கு யாருமில்லை என்பதால் போன் செய்தவுடன் அவற்றைப் பிடித்துக் கொல்லக்கூடாது. 

மாநில அளவில் முதல்வரை தலைவராகவும், மாவட்ட அளவில் ஆட்சியரை தலைவராகவும் கொண்டு அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறோம். உங்கள் பகுதியிலுள்ள தெரு நாய்களைப் பிடித்துச் சென்றால், கருத்தடை செய்து நான்கு நாள்களில் அதே இடத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது.  அது சரியான முறையில் நடைமுறைப்படுத்த படுகிறதா? என்பதைக் கண்காணியுங்கள். மக்களிடம் நாய்களைப் பற்றிப் புரிதலை ஏற்படுத்தி விட்டாலே போதும் எங்களுடை வேலை குறைந்துவிடும்''என்கிறார் மாரிகுமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com