பேசும் கலை சிற்பம்!

"கலைஞனுக்குப் படிப்பு தேவையில்லை. படைப்பாற்றல் இருந்தால் போதும்' என்கிறார் ஜீவா.
பேசும் கலை சிற்பம்!


"கலைஞனுக்குப் படிப்பு தேவையில்லை. படைப்பாற்றல் இருந்தால் போதும்' என்கிறார் ஜீவா. சென்னை பாரிமுனை பகுதியில் "காந்தி சில்ப் பஜார்' என்ற பெயரில் இந்திய கைவினைப் பொருள்களின் கண்காட்சி கடந்த  இரண்டு வாரம் நடந்தது. இதில் இவர் உருவாக்கிய மஹா பெரியவா, பாரதியார், விவேகானந்தர் வீரசிவாஜி போன்ற மரச் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிறப்புகுரிய விஷயமாக வீர சிவாஜிக்குள் பிரதமர் மோடியும் தெரியும்படியான மரச் சிற்பத்தை உருவாக்கியிருந்தார்.

எப்படி இந்தக் கலை ஆர்வம் உருவானது? ஜீவாவிடம் கேட்டோம்:

நான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவன். 10-ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. 2000-ஆம் ஆண்டில் சென்னை வந்துவிட்டேன். ஓவியம் மற்றும் கைவினைக் கலை இரண்டையும் இணைத்து நானே உருவாக்கியது தான் இந்த சிற்பக்கலை. என்னுடைய மானசீக குரு ஓவியர் மணியம் செல்வன். அவருடைய படங்களைப் பார்த்துத்தான் சிறுவயதிலேயே ஓவியம் வரைய ஆரம்பித்தேன். களிமண்ணால் சிற்பங்களை உருவாக்கினேன்.

சென்னை வந்த பிறகு என்னுடைய படைப்புகளை விற்பதற்காக நந்தனத்தில் இருந்து குறளகம் வரை ஒவ்வொரு கடையாகச் சென்று கேட்பேன். மரச்சிற்பம் எளிதில் உடைந்து விடும் என்று ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி விடுவார்கள். காலையிலிருந்து மாலை வரை அலைந்தாலும் என்னுடைய படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கலைபடைப்புகளை உருவாக்கும் அகாதெமி சென்று கேட்டால், என்ன படித்திருக்கிறீர்கள். முறையாகப் பட்டம் பெற்றால் தான் உங்கள் கலை படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், என்னுடைய படைப்புகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டி என்னுடைய பொருள்களை வாங்க ஆரம்பித்தார்கள்.

என்னுடைய கலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு புகைப்படத்தைப் பார்த்து அப்படியே உருவாக்கமாட்டேன். அதில் உயிர்த்தன்மை இருக்கும். காரணம் ஒரு படத்தை உருவாக்கும் முன் முகத்தை மனப்பாடம் செய்துவிடுவேன். அதன் பிறகு கண், மூக்கு,  வாய் போன்றவற்றை மரத்தால் இணைத்து  உருவாக்க திட்டமிடுவதே  எனது வேலை.

சென்னை வந்த புதிதில் லதா ரஜினிகாந்த் "சின்னஞ் சிறு மனிதர்கள் என்ற பெயரில் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் குழந்தை ஒன்றை தூக்கி பிடித்து இருப்பது போன்ற புகைப்படம் இருந்தது. அதனைச் சிற்பமாக உருவாக்கி அவருக்கு பரிசாக அளிக்க நினைத்தேன். என்னுடைய படைப்புகள் பற்றி அந்தப் புத்தகத்தில் உள்ள முகவரிக்குக் கடிதம் எழுதினேன். நேரில் வரச் சொல்லி பதில் வந்தது. நேரில் சென்று லதா ரஜினிகாந்தைச் சந்தித்துப் பரிசளித்தேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

உடனே அவருடைய வீட்டிலேயே இருந்து அவர் சொல்லும் கிராப்ட் வேலைகளைச் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அவருடைய மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் தாங்கள் அணிந்திருந்த வைரத் தோட்டை விட நான் உருவாக்கிய தோடு அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதனை அணிந்து கொண்டார்கள்.

தொடர்ந்து ரஜினி குடும்பம், ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்திற்குக் கிராப்ட் செய்யும் வேலைகளைச் செய்து கொடுத்தேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் உருவாக்கிய மஹா பெரியவா படத்திற்கு அதிகம் வரவேற்பு கிடைத்தது. 2003-ஆம் ஆண்டில் முதலில் மஹா பெரியவா ஓவியத்தை உருவாக்கினேன். அதுவும் ரஜினி வீட்டில் வேலை செய்த கணக்காளர் வெங்கட்ராமன் தான் அதனை உருவாக்க உதவியாக இருந்தார். பொதுவாக மஹா பெரியவா வேலை தான் அதிகம் இருக்கும். மஹா பெரியவா தொடர்பான வேலைகளை ஆரம்பித்த பிறகு  தெய்வீகத்தன்மையை என்னால் உணர முடிந்தது. இன்று எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்து.  இதுவரை என்னுடைய படைப்புகளில் அதிகம் விற்பனையானது மஹா பெரியவா, விவேகானந்தர், பாரதியார் போன்ற ஓவியங்கள் தான்.

இன்றும் மக்கள் மத்தியில் இவர்கள் வாழ்கிறார்கள். அவர்களை குருவாகவும், வழிகாட்டியாகவும் பலர் நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை நான் வெறும் கருவி தான். அவர்களை ஓவியமாகவும், சிற்பமாகவும் வரையும் பாக்கியத்தைத்  தந்து இருக்கிறார்கள்.

இந்தப் படைப்பு சிற்பங்களைப் பொருத்தவரை மக்களுக்கு அத்தியாவசிய பொருள் இல்லை. அதனால் இந்த கரோனா காலகட்டத்தில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பணமதிப்பு இழப்பிலிருந்து இப்போது தான் மக்கள் மீண்டு வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.  ஆரம்பக் காலத்தில் என்னை அடையாளப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டேன்.  என்னை நிராகரித்தவர்கள் தான் அதிகம். இன்று உலகம் முழுவதிலிருந்தும் என்னுடைய இருப்பிடம் தேடி வந்து, காத்திருந்து பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து பிரபலங்களின் வீடுகளிலும் கட்டாயம் என்னுடைய ஒரு படைப்பாவது இடம் பெற்று இருக்கும் என்பது தான் காலம் எனக்குத்  தந்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

காந்தி சில்ப் பஜார் கண்காட்சி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. ஆண்டுதோறும் மத்திய அரசு 3 முதல் 5 கண்காட்சி நடத்துவார்கள். கரோனா தாக்கம் காரணமாகக் கண்காட்சி நடத்தப்படவில்லை. இரண்டு வார காலம் நடைபெற்ற கண்காட்சியில்  எனது ஜீவா கலைக்கூடத்தின் சார்பாக காட்சிபடுத்தியிருந்த வீர சிவாஜி சிற்பத்திற்குப்  பார்வையாளர்கள் அதிக வரவேற்பு தந்தார்கள். ஒரு தம்பதியர், தங்களது படத்தைத் தந்து அதைச் சிற்பமாக்கி வாங்கிச் சென்றார்கள். இதேபோல், விவேகானந்தர் மரச்சிற்பமும் தனித்து விளங்குகிறது. மேலும் திருப்பதி சீனிவாசப் பெருமாளின் சிற்பத்தைப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.

கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எதுவென்று நினைக்கிறிர்கள்?

கலைஞனுக்கு முதலில் பாராட்டு தான் அவசியம். மற்ற விஷயங்கள் எல்லாம் அடுத்தது தான். நான் என்னுடைய அனுபவத்தில் கற்றுக் கொண்டது என்னவென்றால், கலைஞர்கள் அவர்களுக்குப் பிடித்த பொருள்களைச் செய்து பரிசாகக் கொடுப்பதை மிகவும் விரும்புகிறார்கள். அதற்குப் பண மதிப்புக் கிடையாது. இந்த காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில் என்னுடைய படைப்புகளைப் பார்ப்பவர்கள் முகத்தில் அவர்கள் அணிந்து முகக்கவசத்தையும் மீறி ஒரு சந்தோஷத்தை பார்த்தேன். தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக அவர்கள் சொன்ன விஷயம் தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன்'' என்கிறார் ஜீவா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com