தில்லி காந்தி மியூசியம்: ராட்டை அரங்கம்!

உழைப்பின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில்,  மகாத்மா காந்தி தான் வாழும்போது கை ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  
தில்லி காந்தி மியூசியம்: ராட்டை அரங்கம்!

உழைப்பின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், மகாத்மா காந்தி தான் வாழும்போது கை ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதை அனைவரும் அறிந்திட தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் ராட்டை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் காண்போரைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

மகாத்மா காந்தியை நினைத்தாலே அவரது அரையாடை உருவம்தான் நினைவுக்கு வரும். பிறர் எளிமையாக வாழ வேண்டும் என்ற போதனையுடன் நின்றுவிடாமல், அவர் தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர். அவரது நினைவைப் போற்றும் வகையில், தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய கண்ணாடி, எழுதுகோல், புத்தகங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு அரிதான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது புனரமைக்கப்பட்டுள்ள ராட்டை கண்காட்சி அரங்கில், பஞ்சாப், பீகார், ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள கை ராட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், ஜவாஹர்லால் நேரு, வினோபா அடிகள், ஜெ.பி.கிருபாளனி, கஸ்தூர்பா காந்தி, சாரதா தேவி உள்ளிட்ட தலைவர்களும் ராட்டையில் நூல் நூற்கும் அரிய புகைப்படங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

அதிக எண்ணிக்கையில் நூல் நூற்கும் அம்பர் ராட்டைகள் அடங்கிய நவீன இயந்திரங்கள், கைத்தறிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல நெதர்லாந்தைச் சேர்ந்த செங்குத்து கை ராட்டையும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

"கடையனுக்கும் கடைத்தேற்றம்' புத்தகம்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் சாதாரண மனிதரை மகாத்மா காந்தி எனும் நிலைக்கு உயர, அவரது வாழ்க்கையை மாற்றிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' எனும் கடையனுக்கும் கடைத்தேற்றம்' புத்தகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1904-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க ரயில் பயணத்தின்போது, "ஹென்றி போலக்' என்பவர் மகாத்மா காந்திக்கு அளித்தார்.

இந்த நூலைப் பற்றி "ஒரு நூலின் மந்திர சக்தி' என்ற தலைப்பில், தனது சுயசரிதையில் காந்தி எழுதியுள்ளார். மேலும், "சர்வோதயா' என்ற தலைப்பில் "கடையனுக்கும், கடைத்தேற்றம்' என்ற நூலின் சுருக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றின் முகப்பு அட்டைகளும், ஆங்கில நூலின் பக்கங்களும் பெரிதாக்கப்பட்டு பிரத்யேகமாக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சொகுசான வாழ்க்கையிலிருந்து எளிமையான வாழ்க்கைக்கு காந்தியை மாற்றிய அந்த நூலைப் பற்றிய தகவல்கள் குறித்து ஹென்றி போலக் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியை "க்யூ ஆர் கோட்' -ஐ கைப்பேசியில் உள்ள ஸ்கேன் செயலி மூலம் ஸ்கேன் செய்தால், கேட்டறியலாம். இந்தச் சிறிய அரங்கை மியூசிய உதவி நூலகர் திபாளி உஜாலயன், மென்பொறியாளர் ரன்வீர் சிங் ஆகியோர் வடிவைத்துள்ளனர்.

ராட்டைகளின் சிறப்பு: இதுகுறித்து காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை கூறியதாவது:

காந்தியின் அருங்காட்சிகத்தில் ராட்டைக்கு இயல்பாகவே முக்கியத்துவம் உண்டு. அதில், சரித்திரப்பூர்வமாக ராட்டை எவ்வாறு பிரபலமடைந்தது என்பதைக் காட்சிப்படுத்தும் வகையில், அரங்கு புனரமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ராட்டைகளைச் சேகரித்து வருகிறோம். அடுத்தகட்டமாக அதை ஒரே இடத்தில் காட்சிப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

ஆரம்பக் கட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு நூற்கும் ராட்டைகள் பயன்பாட்டில் இருந்தன. அதன்பின்னர், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ராட்டைகள் கையடக்கமாக இருக்கும் வகையில், தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. பின்னர், இயந்திரமும் இணைத்து அம்பர் ராட்டைகள் உருவாக்கப்பட்டன.

தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தி அனைவருக்கும் சென்றடையச் செய்வதுதான் காந்தியின் நோக்கமாக இருந்தது. இதனால், அனைவரும் சக்திமிக்கவர்களாக உருவாக வேண்டும் என்றே காந்தி விரும்பினார். தொழில்நுட்பம் ஒருவரது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதும், தனது மூலதனத்துக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்வதும்தான் ராட்டையின் சிறப்பாகும் என்றார்.


தன்னலமற்ற சேவை


தன்னலமற்ற சேவையே காந்தியிடம் கற்கும் செய்தி என்று அஸ்ஸாம் மாநிலத்துக்கு உள்பட்ட ஜி.சி.  கல்லூரி மாணவர் தேவ்ராஜ் தேவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களை மிகவும் நேசிக்கிறேன். இந்த மியூசியத்தை முதல்முறையாக பார்வையிட வந்துள்ளேன். வாய்மையே வெல்லும் என்ற காந்தியின் வார்த்தைகள் என்னைக் கவர்கின்றன. தன்னலமற்ற சேவையே காந்தியிடமிருந்து நான் கற்கும் செய்தியாகும்' என்றார்.

இதுகுறித்து மும்பை ஐஐடியில் எம்எஸ்சி இயற்பியல் படிக்கும் மாணவர் மோஹித் பட்டேல் கூறுகையில், "சுதந்திரத்துக்கு முன்பு நாடு பிரிந்துகிடந்தபோது, மக்களை ஒன்றுதிரட்ட  இந்தியாவின் சின்னமாக கை ராட்டையை காந்தி பயன்படுத்தியிருக்க வேண்டும்.  ராட்டை எனும் உழைப்புச் சின்னம்  மூலம் மக்களைத் திரட்டியுள்ளார். மேலும், அம்பர் ராட்டை மூலம் உற்பத்தியைப் பெருக்க அவர் விரும்பியதும் கண்காட்சி அரங்கத் தகவல் மூலம் தெரியவருகிறது' என்றார்.

"காந்தியின் சிந்தனைகள் மிகவும் ஈர்க்கிறது' என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் ஓம்கார் பால், ராகுல் நேகி ஆகியோர் தெரிவித்தனர்.

படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com