

""உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் " அஹம் பிரம்மாஸ்மி' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும் போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். பயணங்களின்அருமை புரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...'' ஆர்வத்துடன் பேசுகிறார் இயக்குநர் சதீஷ் ஜி.குமார். குறும்பட உலகத்தில் இருந்து கோடம்பாக்கம் வருகிறார்.
குறும்பட உலகத்தில் இருந்து வருகிறீர்கள்.... வாழ்த்துகள்....
நன்றி. சென்னைதான் நமக்கு எல்லாம். ஒரு கட்டத்தில் படிப்புக்காக யு. கே. போய் விட்டேன். அங்கே எம். எஸ். படிப்பு. கேமிரா, சினிமா, படப்பிடிப்புத் தளம் என எப்போதும் மனசுக்குள் ஒரு அலையடிக்கும். அந்த ஆர்வத்தில் நானே ஒரு கேமிரா வாங்கி, அங்குள்ள பத்திரிகைகளில் பகுதி நேர புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினேன். அதன் பின் சினிமாவின் ஏக்கத்தை போக்க நானே, சில குறும்படங்கள் எடுத்தேன். அந்த அனுபவத்தில் ஆங்கிலத்தில் ஒரு சினிமாவே எடுக்க வேண்டிய நேரம் வந்தது. "நெவர் எண்டிங் லவ் ஸ்டோரி' என்ற பெயரில் ஒரு படம் எடுத்தேன். படத்துக்கு ஏக பாராட்டுக்கள். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்கான உலகம் தமிழ் சினிமாவில் திறந்து விரிந்திருந்தது. தமிழிலும் முழு நீள படம் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கேயும் சில குறும்படங்கள் எடுத்தேன். அதன் பின் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா மூலம் தயாரிப்பாளர் ஆர்.பி.பாலாவின் தொடர்பு கிடைத்தது. அவரிடன் ஒரு ஒன் லைன் சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. இப்போது கும்பமேளா நேரம். இந்தக் கதையை அந்தப் பின்னணியில் எடுக்க முடியுமா.... என்றார். உடனே விமானம் பிடித்து அங்கே கிளம்பி விட்டேன். சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். அந்த கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். இப்போது ஆல் இஸ் வெல்.
"அஹம் பிரம்மாஸ்மி'.... நானே கடவுள் என்பதே இதன் பொருள்... இங்கே என்ன விசேஷம்....
சமயமும், அறிவியலும் பின்னி பினைந்த கதை இது. மதங்களையும், அறிவியலையும் பிரித்து பிரித்துப் பார்க்கிற மனப்பக்குவம் இங்கே நிறைய உண்டு. அப்படி ஒரு மன ஓட்டத்தில் எனக்குள் வந்து விழுந்த விதைத்தான் படம். எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்கு திட்டமிட்டு இருக்கிறமோ, அது அந்தளவுக்கு கிடைத்தே தீரும் என்பதுதான் இங்கே நீதி. ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தை கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்ன கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதும் இதன் உள்ளடக்கம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதை பற்றி சிந்திப்போம். அது எல்லாம் சேர்ந்து அந்த எண்ணம், சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. சமயம், அறிவியல், காலம் என அனைத்தையும் இணைத்து பார்க்கும் முயற்சி.
எல்லோருக்கும் புரிகிற கதை சொல்லியாக இருப்பதுதான்... இங்கே கஷ்டம்....
அச்சம் கொள்ள வேண்டாம். எல்லோருக்கும் கண்டிப்பாக புரியும். சென்னையிலிருந்து கும்பமேளாவுக்கு ஒரு குடும்பம் செல்கிறது. அப்பா, அண்ணன்,, தங்கை, அப்பாவின் நண்பர் என ஒரு நேர்த்திக் கடனுக்காக போகிறார்கள். கும்பமேளாவில் தங்கை காணாமல் போய் விடுகிறார். பல லட்ச மக்கள் கூடியிருக்கிற அந்த இடத்தில் அந்த தங்கையை அண்ணன் எவ்வாறு மீட்டார் என்பது லைன். இதை பின்னணியாக வைத்து கதை சொல்லியிருக்கிறேன். அறிவியல், சமயம் என்பதெல்லாம் கற்பனை, சிந்தனை... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..
"சகமனிதனே கடவுள்...பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்' என்று சொன்னவர்தான் காந்தி. அவரிடம் "ஏன் ராம் என்னும் நாமத்தை உங்கள் பிரார்த்தனைகளில் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது,சக மனிதனை நோக்கிய கருணையே மதம் என்பதுவே காந்தி கண்டடைந்த ஆன்மிகம். அதையே அவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினார். காந்தி குறித்து ஆய்வு செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரைன் டைபோவ்ஸ்கி, காந்தியின் ஆன்மிகம் என்பது வேதாந்த ஆன்மிகம் அல்ல. அது மக்களை ஒரு சமூகமாக இணைக்கும் முயற்சி. முதலில் நாட்டில் உள்ளவர்கள் சகோதர சண்டைகளை விட்டுவிட்டு ஒன்றிணைய மதம் துணையாகும் என்று நம்பினார். அதையே அவர் முன்னெடுத்தார்'' என்கிறார். வாழ்க்கையில மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று உணர முடிந்தது. இந்த உலகில் எது மாறாமல் நிலைத்திருக்குதோ அதுதான் தெய்வத்தன்மையுடையது. நம்முடைய எண்ணங்கள் அபிப்பிராயங்கள், குணங்கள், கோபங்கள், இன்ப துன்பங்கள், மதிப்பீடுகள் எல்லாமே மாறுகிறது. ஆனால் அன்பு மட்டும்தான் மாறாமல் நிலைத்திருக்கிறது. குறிப்பாக, ஓஷோ கடவுளைப் பற்றிப் பேசறதைவிட, கடவுள் தன்மையைப் பற்றித்தான் நிறைய பேசுவார். கதையில் விந்தையாக சில சம்பவங்கள் நடக்கும். அதை அறிவியலாக பார்த்தால் அறிவியல்... ஆன்மிகமாகப் பார்த்தால் ஆன்மிகம்.
கும்பமேளா... படப்பிடிப்பு சவால்கள்...
கும்பமேளாவில் படப்பிடிப்பு நடத்துவது என்பது நினைத்துப் பார்க்காத விஷயம். அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. சுமார் 50 நாள்கள் அங்கேதான் படப்பிடிப்பு. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்ல கூடிய இடம்.... சுமார் 5 கோடி மக்கள் வந்து போகிற திரிவேணி சங்கமத்தில் படப்பிடிப்பு என்பது பெரிய விஷயம். நானே ஒளிப்பதிவு என்பதால், காட்சியை விளக்கி விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விடுவேன். நடிகர்கள் நடித்துக் கொண்டு இருப்பார்கள். சினிமா படப்பிடிப்பு என்று வெளியே தெரிந்தால், மக்கள் கேமிராவைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு தளத்துக்கும் தங்கியிருந்த இடத்துக்கும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம். அதை தினமும் அடைந்து விட முடியாது. அதனால் அங்கேயே படுத்து, தூங்கி, அங்கு கொடுக்கப்படும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு இப்படித்தான் நடந்தது படப்பிடிப்பு. முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்திருக்கிறது. ஆர். எஸ். கார்த்தி, ரேஷ்மிகா, பூ ராம், சுமன்.... இப்படி நம்பிக்கையான நடிகர்கள். எல்லோருக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.