கால்பந்து ஸ்டார்ட் 1, 2, 3..!

கோடிக்கணக்கான ரசிகர்களை சுமார் ஒரு மாதம் கட்டிப் போடப் போகும் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ.  20-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெறவுள்ளன.
கால்பந்து ஸ்டார்ட் 1, 2, 3..!


கோடிக்கணக்கான ரசிகர்களை சுமார் ஒரு மாதம் கட்டிப் போடப் போகும் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ. 20-ஆம் தேதி தொடங்கி, டிச. 18 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளன.

கிரிக்கெட், வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ், பாட்மின்டன், தடகளம், ரக்பி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் புகழ் பெற்றிருந்தாலும், உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டது கால்பந்துதான். அதிக நாடுகளில் ஆடப்படும் விளையாட்டாகவும் திகழ்கிறது கால்பந்து.

முதன்முதலாக 1872-இல் கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே முதல் சர்வதேச கால்பந்து ஆட்டம் நடைபெற்றது. பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் கால்பந்து பிரபலமடையத் தொடங்கியது. 1900, 1904 ஒலிம்பிக் போட்டிகளில் மாதிரி போட்டியாக நடத்தப்பட்டது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) 1904-இல் தொடங்கப்பட்டவுடன், கால்பந்துக்கு மேலும் ஊக்கம் தர முனைந்தது. 1908-இல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து அதிகாரப்பூர்வமானது.

ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து ஆட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், தானே உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா தீர்மானித்தது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள உருகுவேயில் முதல் உலகக் கோப்பை போட்டி 1930-இல் நடத்தப்பட்டது. 13 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன. முதலிரண்டு ஆட்டங்களில் பிரான்ஸ், அமெரிக்க அணிகள் வென்றன.


முதல் சாம்பியன் உருகுவே: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக மாண்டெவிடோ நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 93,000 ரசிகர்கள் முன்னிலையில் ஆர்ஜென்டீனாவை 4-2 என வீழ்த்தி முதல் சாம்பியன் ஆனது உருகுவே. தொடர்ந்து 1934, 1938-இல் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாம் உலகப் போரால் 1942, 1946-இல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஆப்பிரிக்கா, ஆசியா, வடக்கு, மத்திய, தென் அமெரிக்கா, கரீபியன், ஓசேனியா, ஐரோப்பா என 6 கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 2 ஆண்டுகள் வரை தகுதிச் சுற்று நடைபெறும். போட்டியை நடத்தும் நாடு நேரடியாகத் தகுதி பெற்று விடும். 1938 முதல் 2002 வரை நடப்பு சாம்பியனாக உள்ள அணியும் நேரடியாக தகுதி பெற்று வந்தது. ஆனால் 2006 முதல் நடப்பு சாம்பியன் அணியும் தகுதிச் சுற்றில் பங்கேற்குமாறு விதிகள் திருத்தப்பட்டன.
1950-இல் போட்டிகள் பிரேசிலில் முதன்முறையாக நடைபெற்றன. இதிலும் பிரேசிலை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது உருகுவே.

1934 முதல் 1978-ஆம் ஆண்டு வரை மொத்தம் 16 அணிகளே பங்கேற்றன. ஐரோப்பா, தென் அமெரிக்காவில் இருந்து மட்டுமே பெரும்பாலான அணிகள் பங்கேற்ற நிலையில், ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்தும் சில அணிகள் பின்னர் அனுமதிக்கப்பட்டன. ஆனால் அவை முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறின.


2026-இல் 48 அணிகள்: 1982-இல் 24 அணிகளாக உயர்த்தப்பட்டு, பின்னர்1998-இல் 32 அணிகளாக பங்கேற்கும் நாடுகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. ஆசிய, ஆப்பிரிக்க, வட அமெரிக்க நாடுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. வரும் 2026 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 48-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஜூலியஸ் ரிம்லெட் கோப்பை: 1930 முதல் 1970 வரை சாம்பியன் அணிக்கு ஜூலியஸ் ரிம்லெட் கோப்பை வழங்கப்பட்டது. முதல் உலகக் கோப்பையை நடத்தியவர் ஜூலியஸ் ரிம்லெட். எனினும் 1970-இல் பிரேசில் மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனதால், ரிம்லெட் கோப்பை அந்த அணிக்கே நிரந்தரமாகத் தரப்பட்டது.


புதிய உலகக் கோப்பை வடிவமைப்பு: புதிய உலகக் கோப்பை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. 53 மாதிரிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து, இத்தாலிய டிசைனர்சில்வியோ கஸனிகா வடிவமைத்த மாதிரியை தேர்வு செய்தனர். 36 செ.மீ உயரம், 18 காரட் தங்கத்தில், 6.175 கிலோ எடையில் புதிய உலகக் கோப்பை செய்யப்பட்டது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 4 ஆண்டுகள் மட்டுமே கோப்பையை தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.

பட்டம் வெல்லும் அணிக்கு தங்கப் பதக்கம், ரன்னர் அணிக்கு வெள்ளிப் பதக்கம், மூன்றாம் இட அணிக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

வாக்கெடுப்பு மூலம் போட்டி:

பிஃபா உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி உலகக் கோப்பையை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் நாடுகளில் உள்ள வசதிகள் குறித்து பிஃபா குழுவினர் ஆய்வு செய்வர். பின்னரே முடிவு எடுக்கப்படும். ஐரோப்பாவில் 11, தென் அமெரிக்காவில் 5, ஆப்பிரிக்காவில் 1, ஆசியாவில் 2, வட அமெரிக்காவில் 4 என போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை:

1998-ஆம் ஆண்டு வரை ஐரோப்பா, தென், வட அமெரிக்க நாடுகளுக்கே போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக 2002-இல் ஆசியாவில் தென்கொரியா-ஜப்பான் என 2 நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின. 2010-இல் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தென்னாப்பிரிக்கா போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.

2026-இல் 3 நாடுகள் நடத்தும் போட்டி:

2026-இல் வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட 3 நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளன. இதில் அதிகபட்சமாக 48 அணிகள் பங்கேற்கின்றன. 80 ஆட்டங்களில் 60 ஆட்டங்கள் அமெரிக்காவிலும், கனடா, மெக்ஸிகோவில் தலா 10 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.

அதிக பார்வையாளர்கள் 1.73 லட்சம் பேர்: 1950-இல் பிரேசிலில் மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தைக் காண 1.73 லட்சம் பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அதன்பின்னர், 1986-இல் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற போட்டியில் 1.14 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

சாம்பியன்கள் இதுவரை: 1930-உருகுவே, 1934-இத்தாலி, 1938-இத்தாலி, 1950-உருகுவே, 1954-மேற்கு ஜெர்மனி, 1958-பிரேசில், 1962-பிரேசில், 1966-இங்கிலாந்து, 1970-பிரேசில், 1974-மேற்கு ஜெர்மனி, 1978-ஆர்ஜென்டீனா, 1982-இத்தாலி, 1986-ஆர்ஜென்டீனா, 1990-மேற்கு ஜெர்மனி, 1994-பிரேசில், 1998-பிரான்ஸ், 2002-பிரேசில், 2006-இத்தாலி, 2010-ஸ்பெயின், 2014-ஜெர்மனி, 2018-பிரான்ஸ். அதிகபட்சமாக பிரேசில் 5, ஜெர்மனி 4, இத்தாலி 3, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், உருகுவே, தலா 2, இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறை சாம்பியன் ஆகியுள்ளன.

கத்தாரில் உலகக் கோப்பை 2022 போட்டி: மத்திய ஆசியாவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று கத்தார். 2022-ஆம் ஆண்டில் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்று சாதனை படைத்தது. மேற்கு-கிழக்கு நாடுகள் இணைப்பு மையமாகவும் கத்தார் உள்ளது. அரபு நாடுகளிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நடத்தும் பெருமை கத்தாருக்கு கிட்டியுள்ளது.

எப்போதும் கோடைக்காலத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி கத்தாரில் நிலவும் கடும் தட்பவெப்ப நிலையால், முதன்முதலாக குளிர்காலத்தில் நடைபெறுகிறது.


சாம்பியனுக்கு 38 மில்லியன் யூரோ: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 38 மில்லியன் யூரோவும், ரன்னர் அப் அணிக்கு 28 மில்லியன் யூரோவும், மூன்றாம் இடத்துக்கு 24.45 மில்லியன் யூரோ, நான்காம் இடத்துக்கு 22.64 மில்லியன் யூரோவும் ரொக்கப் பரிசாக தரப்படும். 8 குரூப்களாக 32 அணிகள் பிரிக்கப்பட்டு தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் ஏ-கத்தார், ஈக்குவடார், செனகல், நெதர்லாந்து, குரூப் பி-இங்கிலாந்து, ஈரான், யுஎஸ்ஏ, வேல்ஸ், குரூப் சி-ஆர்ஜென்டீனா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து, குரூப் டி-பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா, குரூப் ஈ-ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், கோஸ்டா ரிகா, குரூப் எஃப்-பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, குரூப் ஜி-பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன், குரூப் ஹெச்-போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா.

சொகுசுக் கப்பல்களில் 4,000 அறைகள்: முதன்முறையாக குரூஸ் எனப்படும் சொகுசுக் கப்பல்களில் பார்வையாளர்கள் தங்குவதற்காக 4,000 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொகுசுக் கப்பலில் தங்க அறை வாடகை 179 அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 450 அமெரிக்க டாலர்களாக வசூலிக்கப்படுகிறது. பட்ஜெட் பார்வையாளர்கள் தங்கும் வகையில், தோஹா நகரின் வெளியே பாலைவனத்தில் கேபின்கள் உள்ளன.

மொத்தம் 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி விட்டன. 12 லட்சம் பார்வையாளர்கள் கத்தாருக்கு வர உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1.3 லட்சம் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் 60,000, ஹோட்டல்களில் 50,000 அறைகள் உள்ளன.

எட்டு மைதானங்கள்: கத்தாரில் மொத்தம் 8 மைதானங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

எந்த சேனலில் பார்க்கலாம்: நியூஸ் ஸ்போர்ட்ஸ் 18, ஸ்போர்ட்ஸ் 18 ஹெச்டி, சேனல்களிலும், ஜியோ சினிமா ஆப்பிலும் ஆட்டங்களைக் காணலாம்.

உலகக் கோப்பையில் இதுவரை...

பீலே1958-இல் பிரேசில்-ஸ்வீடன் அணிகள் இடையிலான ஆட்டத்தில் பிரேசில் அணியில் மிகவும் இளம் வீரராக ஜாம்பவான் பீலே களம் கண்டார்.

டீகோ மாரடோனா

1986- இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா, தன்னந்தனியாக எதிரணி வீரர்களைக் கடந்து சென்று, அற்புதமான கோலடித்தார். இது மிகச்சிறந்த கோலாக கருதப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் மாரடோனா தலைக்கு பதிலாக கையால் பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டனை மீறி தள்ளி விட்டார். இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக எதிர்ப்பை கூறிய நிலையில், நடுவர் அதைக் கவனிக்காததால் கோலானது. இது ஹேண்ட் ஆஃப் காட் என வர்ணித்தார் மாரடோனா.

ஒலேக் சலேங்கோ

1994 உலகக் கோப்பையில் கேமரூனுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷிய வீரர் ஒலேக் சலேன்கோ 5 கோல்களை அடித்தார். அதில் 6-1 என ரஷியா
வென்றது.

ஜினடேன்

2006 போட்டியில் பிரான்ஸ் சிறந்த வீரர் ஜினடென் ஜிடேன். இத்தாலி அணி வீரர் மட்டராஸி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, ஆத்திரமுற்ற ஜினடேன் தலையால் கடுமையாக முட்டினார். இதையடுத்து அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com