வனத்தை கடந்த தூரம்!

"சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது.
வனத்தை கடந்த தூரம்!

"சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித வாழ்வின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை''. 

இதமான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் மகிழ்திருமேனி. "தடையறத் தாக்க', "மீகாமன்', "தடம்' என தனது படங்களில் நேர்த்தியை கொண்டு வரும் இயக்குநர். இப்போது "கலகத் தலைவன்'  படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார். 

உதயநிதி ஸ்டாலின்..... "கலகத் தலைவன்' தலைப்பு.... 

அரசியல் கதையா....?

நிச்சயமாக இல்லை. முதலில் கலகத் தலைவன் என்ற தலைப்பை உதயநிதி ஆதரிக்கவில்லை. மாற்றி விடலாம் என்றிருந்தோம். எத்தனையோ தலைப்புகள் யோசித்தோம். ஆனாலும், இந்தக் கதைக்கு கலகத் தலைவன் என்பதுதான் அத்தனை பொருத்தமாக அமைந்தது. வேறு வழியில்லாமல் வைத்து விட்டோம்.  கலகம் என்றால் இங்கே புரட்சி. இந்த திரைக்கதைக்காக அதிக நாள்கள் எடுத்துக் கொண்டு வேலை செய்தோம். அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது.  எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது.

அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்து கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி.   கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.  

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்...

அரசியலைவிட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். 

அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அது வரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

 உதயநிதி இப்போதுதான் சீரியஸ் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார்.....

உதயநிதி என் நண்பர். அது இல்லாமல் திறமைசாலி. ஒரு நடிகராக இன்னும் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்கள் அவரிடம் நிறைய உண்டு.  வெவ்வேறு கட்ட சினிமாக்களில்  அவரை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு கட்டத்தில் ஆக்ஷன், ஒரு கட்டத்தில் காமெடி, திடீரென்று "நெஞ்சுக்கு நீதி' மாதிரியான படங்கள் என அவர் எல்லாவற்றையும் வரையறுத்து வைத்திருக்கிறார்.  இன்னும் அவருக்கு நல்ல கதைகள் காத்திருக்கின்றன. ஆனால், அவரோ சினிமாவிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறார். அதை கொஞ்சம் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒரு சினிமா என்றாவது அவர் வர வேண்டும். இப்போது அதைத்தாண்டி வேறு ஒரு பரிமாணத்தை காட்ட வேண்டும் என்று ஒரு இயக்குநராக நினைத்தேன். அந்த இடத்துக்கு உதயநிதியை கொண்டு வந்திருக்கிறேன். என்னையும் அடுத்த இடத்துக்கு கொண்டு போகிற படம்.

சினிமாவில் நல்ல முயற்சிகளை பார்க்கும் போது, என்ன தோன்றும்... 

அது மாதிரி நானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றும். சமுதாயம் மாதிரி... அரசியல் மாதிரி... இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ, அப்படியே அரசனும் என்பார்கள்.  அது போல்தான் சினிமாவும். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சினிமாவில் லாஜிக் எதற்கு என்று தப்பிப்பவர்கள், தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு கதையை அதன் எதார்த்த தன்மையோடு சொல்லுகிற நிலை முதலில் வர வேண்டும். அந்த கடப்பாடு இயக்குநர்களுக்கு முக்கியம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களை காட்டுகிற படங்கள் இங்கே தோற்காது என்கிற நிலை வர வேண்டும். இதுதான் தற்போதைய முதல் தேவை என்பதாக உணர்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com