மனம் இருந்தால்....!

திருப்பத்தூரை பசுமையாக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மன நலம் குன்றியவர்கள் ஈடுபட்டு வருவது வியப்பை அளிக்கிறது.
மனம் இருந்தால்....!


திருப்பத்தூரை பசுமையாக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மன நலம் குன்றியவர்கள் ஈடுபட்டு வருவது வியப்பை அளிக்கிறது.
திருப்பத்தூரில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனமான "உதவும் உள்ளங்கள்' சார்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் சொ.ரமேஷ் தமிழக அரசின் பல்வேறு விருதுகளையும், பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுதல்களையும்பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:

""சிறுவயது முதலே சேவை செய்யும் எண்ணம் தோன்றியது. பட்டம் பெற்றவுடன் ஆர்வம் அதிகரித்தது.
2000-ஆம் ஆண்டு அக். 29-இல் "உதவும் உள்ளங்கள்' எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். பல அன்பர்களின் உதவியால் சேவைகள் தொடர்கின்றன.
அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு தொடர்ந்து வழங்கப்படுகிறது. பொதுமக்களிடம் பயன்படுத்தாத பழைய துணிகளை பெற்று, ஏழைகளுக்கு வழங்குகிறோம்.
இந்த நிலையில், சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது.
இதன்பேரில், 30.6.2005-இல் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.சி.மோகன்தாஸின் முயற்சியால், தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் தமிழக அரசின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உதவும்
உள்ளங்கள் சார்பில் தொடங்கப்பட்டது. பின்னர், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கென 'அனிச்சம்' எனும் பெயரில் மறுவாழ்வு இல்லமும் தொடங்கப்பட்டது.
"உணவு, உடை, இருப்பிடம் - இன்றி சாலையில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மனித நேயத்தோடு அழைத்து வந்து, மறுவாழ்வு வழங்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு செயல்படுகிறோம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், குணமடைந்த 200-க்கும் மேற்பட்டோரின் முகவரிகளைக் கண்டறிந்து, உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
தற்போது 93 ஆண்கள்,60 பெண்கள் என 153 பேர் யாரென்று தெரியாமல், காப்பகப் பராமரிப்பில் உள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கிறோம். இவர்களைச் சேவை உள்ளத்தோடு பயன்படுத்தி, "பசுமை திருப்பத்தூர்'-ஐ உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
இவர்கள் மூலம்,தெருக்களில் உள்ள முள்புதர்கள், குப்பைகளை அகற்றுகிறோம். மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பராமரிக்கிறோம். சாலையோரங்கள், பொது இடங்களில் சிறு பூங்காக்கள் அமைக்கப்பட்டு திருப்பத்தூர் நகரம் முழுவதும் பராமரிக்கப்படுகிறது.
ஒரே இடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டோர் பராமரித்து வருகின்றனர்.
இதுவரை குணமடைந்தவர்களில் குறிப்பாக ஒருவர் தமிழக அரசுப் பள்ளியில் ஆசிரிராகவும், இரு நபர்கள் விஞ்ஞானிகளுக்கு உதவியாளர்களாக பணியில் சேர்ந்துள்ளனர்.
குணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெரிய வியாபாரிகள்,மருத்துவர்கள், வசதியானவர்கள். அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, பெயரை வெளியிட விரும்பவில்லை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com