தன்னம்பிக்கை பெண்!

மகள் இறந்ததற்காகக் கிடைத்த இன்சூரன்ஸ் பணம் ரூ. 10 ஆயிரத்தைப் பெற்று பஞ்சர் ஒட்டும் கடை வைத்தார் ஓர் பெண்.
தன்னம்பிக்கை பெண்!


மகள் இறந்ததற்காகக் கிடைத்த இன்சூரன்ஸ் பணம் ரூ.10 ஆயிரத்தைப் பெற்று பஞ்சர் ஒட்டும் கடை வைத்தார் ஓர் பெண். இன்று அவர் சொந்தமாக டிராக்டர் வாங்கி உழவுக்குத் தானே இயக்கிச் செல்கிறார். அந்தப் பெண் கரூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஐம்பத்து ஆறு வயதான விஜயலட்சுமி. பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் சுறுசுறுப்பான முன்மாதிரி இவர்!

கனரக வாகனங்களில் டயர்களை தனியே கழற்றி பஞ்சர் ஒட்டும் பணி. இடையிடையே டிராக்டர் மூலம் உழவுப் பணியும் செய்து வருகிறார். இதோடு, குடும்பத்தலைவியாக வீட்டு வேலை, தோட்டத்து வேலைகளையும் செய்வதைப் பார்த்தால், பிரமிப்பாகத்தான் உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எட்டாம் வகுப்பு வரையே படித்தேன். கரூர் அருகே தரகம்பட்டி கிராமத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கரூர் வந்தேன். ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகளுடன் கணவர் தங்கவேலுவுடன் மகிழ்வான வாழ்க்கைதான். கணவர் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணி புரிந்து வந்த நிலையில், திடீரென பேருந்து விபத்து ஏற்பட கணவர் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எனது கணவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் எனக் கூற, தைரியம் சொன்னேன். எனது கணவரின் தம்பிகள் வைத்திருந்த பஞ்சர் கடையில் பணி செய்யத் தொடங்கினேன்.

கணவர் மீண்டு வரும் சூழலில், பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மகள் அருகில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் விழுந்து இறந்தாள். மனம் கலங்கினேன்.

குடும்பத்தை ஓட்டுவதற்கே சிரமம் ஏற்பட்டச் சூழலில் தனியாக பஞ்சர் கடை வைக்க முடிவு செய்தேன். ஆனால், பணம் இல்லை. எனது மகள் பள்ளியில் இன்சூரன்ஸ் பணம் கட்டியிருந்ததாகவும், இறந்ததால் ரூ.10 ஆயிரம் பணம் வந்ததாகவும் கூறி ஆசிரியர் சொன்னார். இவ்வாறு கிடைத்தப் பணத்தில், பஞ்சர் கடையைத் தொடங்கினேன்.

வீட்டு வேலை பார்க்கிறேன். ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனங்கள் வந்து செல்வதால் எந்த நேரம் அழைத்தாலும், பஞ்சர் ஒட்டிக் கொடுக்கிறேன்.

கிராமத்தில் அழைத்தால் டிராக்டர் ஓட்டி உழவும் செய்தேன். இப்போது படிப்படியாக முன்னேறி சொந்தமாக டிராக்டர் வாங்கி ஓட்டும் அளவுக்கு முன்னேறி உள்ளேன்.

டிராக்டர் கடன் ரூ.5 லட்சத்தையும் அடைத்துவிட்டேன். ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில் என்று பெண்கள் இருக்காமல், துணிச்சலுடன் களம் காண வேண்டும். மன உறுதியும் தைரியமும் இருந்ததால் சாதிக்கலாம்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com