அள்ளிக் கொடுக்கும் கரம்

அண்மையில் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களில் தம் வருவாயில் இருந்து சமூகப் பணிகளுக்காக மிக அதிகமாகச் செலவழித்திருப்பதும்,  நன்கொடை அளித்திருப்பதும் யார்? என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அள்ளிக் கொடுக்கும் கரம்

அண்மையில் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களில் தம் வருவாயில் இருந்து சமூகப் பணிகளுக்காக மிக அதிகமாகச் செலவழித்திருப்பதும்,  நன்கொடை அளித்திருப்பதும் யார்? என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் சிவ நாடார்.

தமிழரான இவர்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுக்கு ரூ,1,161 கோடி அளவுக்கு ஏராளமான சமூகப் பணிகளுக்காகச் செலவழித்திருக்கிறார். கடந்த ஆண்டில் முதல் இடம் வகித்தவர் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியை,  இவ்வாண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டார் சிவ நாடார். 

எழுபத்து ஏழு வயதாகும் சிவ நாடார் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட திருச்செந்தூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ல மூலைபொழி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிவசுப்ரமணிய நாடார். தாய் வாமசுந்தரி தேவி.  தினதந்தி அதிபர் சி.பா. ஆதித்தனார் இவரது தாய் மாமா.

கும்பகோணம், மதுரை, திருச்சி என பல்வேறு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த சிவ நாடார் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி.யும், கோவை பி;எஸ்.ஜி. கல்லூரியில் பொறியியல் படிப்பையும் முடித்தவர். புனேவில் ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுமார் ரூ.2  லட்சம் முதலீட்டில் ஹெச்.சி. எல். டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆரம்பக் காலத்தில் டிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்பனையில் துவங்கி,  4 ஆண்டுகளில் சிங்கப்பூரில் கணினி மென்பொருள் துறையில் காலடி வைத்தது. ஹெச்.சி.எல்.அதன் பிறகு பெரும் வளர்ச்சி கண்டது.

மிகப் பெரும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்த ஹெச்.சி எல்.சமூக அக்கறையுடன் கல்வி, உடல் நலம், சமூக மேம்பாட்டில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. 

1996-இல், சென்னையில் எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியைத் துவக்கிய இவர், தன் வசமிருந்த சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெச். சி. எல். நிறுவனத்தின் பங்குகளை அந்தக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்தார். 

அடுத்து, கல்வியில் மிகவும் பின் தங்கிய உத்தரப் பிரதேசத்தில் இரண்டு உயர்தரப் பள்ளிகளைத் துவக்கினார்.  அதில், உ.பி.யின் ஐம்பது மாவட்டங்களில் இருந்து 200 கிராமப்புற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, முழு உதவித்தொகையோடு கல்வி பயில வழி செய்தார்.

உ.பி.யின் 285 கிராம ஊராட்சிகளில் சுமார் ஒன்பது லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய நகரங்களில் வசிக்கும் மக்களில் ஆறில் ஒருவர் குடிசைப் பகுதியில் வசிக்கின்றனர். அவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு ஹெச்.சி. எல். அலுவலகங்கள் உள்ள 11 நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் அவர்களின் நலனுக்கான "உதய்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

உ.பி.யின் முக்கிய தொழில் மற்றும் கார்பரேட் நகரம் நொய்டா. அதனை தூய்மையாக பராமரிப்பதில் ஹெச் சி எல். முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டது உள்ளிட்ட பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இவை எல்லாம் ஹெச். சி. எல். மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளில் ஒருசில மட்டுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com