இசைப் பயணம்!

கரோனா காலகட்டத்தில்  நம்பிக்கையோடு வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் பலர்.
இசைப் பயணம்!

கரோனா காலகட்டத்தில்  நம்பிக்கையோடு வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் பலர்.  நம்பிக்கை இழந்த பலருக்கு சாதனை புரிந்தவர்கள் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். அவர்களில்  ஒருவர் மாற்றுத்திறனாளியான மன்மதன்.  இசை ஆசிரியரான இவர் கரோனா காலத்தில் வேலையிழந்தும்,  இணையதளம் வாயிலாகப் பயிற்சியை அளித்து வெற்றியும் கண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசியை அடுத்த முதலிப்பட்டி அருகே வாடியூரில் வசிக்கும்

மன்மதன் (32). பார்வையற்ற இவர்,  இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கரோனா காலத்திலும் தனது ஆசிரியர் பணியை சிறப்பாகச் செய்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். 

இவரிடம் பேசியபோது:

"தந்தை வீட்டை விட்டு பிரிந்துசென்றதால்,  பட்டாசு தொழிலாளியான தாய் கருப்பாயி அரவணைப்பில் வாழ்ந்து வருகிறேன்.

இசையில் ஆர்வம் இருந்ததால் மதுரை பசுமலை அரசு இசை கல்லுôரியில் மூன்றாண்டு வயலின் படித்தேன்.  ஓராண்டு வயலினில் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். 

ஓய்வு நேரத்தில் பியானோ கீபோர்டு வாசிக்கவும், கர்நாடக சங்கீதமும் கற்று கொண்டேன். 

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.   

பின்னர்,  திருத்தங்கல்- நாராணாபுரம் அரசு பள்ளியில் பகுதி நேர இசை ஆசிரியர் பணி கிடைத்தது.  மீதமுள்ள நேரங்களில் தனியார் பள்ளிகளில் மாணவ,  மாணவிகளுக்கு இசை பயிற்சியை அளித்து வந்தேன். 

2020-ஆம் ஆண்டில் கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் தொடர்ந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், என்னுடைய பயிற்சி வகுப்புகள் அனைத்தும் முடங்கின. பொருளாதார அடிப்படையில் மிகவும் சிரமத்தைச் சந்தித்தேன்.

சிவகாசி சாட்சயாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற நண்பர் அசோக்குமார், என்னிடம் இணையதளம் (ஆன்லைன்) வகுப்பு மூலம் இசை பயிற்சியை அளிக்க ஆலோசனை கூறினார். 

பின்னர், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் "டாக் பேக்' முறையில் முறையாகப் பயன்படுத்த கற்று கொண்டேன். பின்னர்,  கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) வாயிலாக இணையதள வகுப்புகளைத் தொடங்கினேன். 

ஆரம்பத்தில் என்னிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இசை பயிற்சியை அளித்தேன். அவர்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோருக்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து முதலான வெளிநாட்டவர்களுக்கும் இசை பயிற்சியை அளித்து வருகிறேன். 

வறுமையில் வாடிய எங்கள் குடும்பம், இணையதள இசை பயிற்சியால் பொருளாதாரப் பிரச்னை முடிவுக்கு வந்தது. 

"பண் இசை' எனும் யூ டியூப் சேனலை உருவாக்கி,  மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளைப் பதிவேற்றி வருகிறேன்.  தற்போது இணையதள வகுப்பு மூலம் 30 மாணவர்கள் இசை பயின்று வருகின்றனர்.  

என்னுடைய இசை பயிற்சியை ஆரஞ்சு புக் ரெக்கார்டு, வெர்சுவல் வேர்ல்டு ஆப் புக் ரெக்கார்டு அமைப்பினர் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com