மூன்று நூற்றாண்டுகளின் சாட்சி!

குடியரசுத் தலைவரின் மாளிகை.
மூன்று நூற்றாண்டுகளின் சாட்சி!

குடியரசுத் தலைவரின் மாளிகை.
பத்மஸ்ரீ விருது விழா நடக்கும் "தர்பார் ஹால்'.
முன் வரிசையில் பிரதமர் மோடி மற்ற அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
சுவாமி சிவானந்தா அவர்களைக் கடந்து போவதற்குப் பதிலாக திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மோடி முன் மண்டியிட்டு... தரையில் நெற்றியை வைத்து வணங்க... திடுக்கிட்ட மோடி பதறிப் போய் நாற்காலியிலிருந்து எழுந்து பின் குனிந்து பதிலுக்கு சுவாமியை வணங்கினார்.
எழுந்த சுவாமி இடது பக்கம் திரும்பி விருது மேடையை நெருங்குவதற்கு முன் மேடையில் அமர்ந்திருக்கும் குடியரசு தலைவர் முன் மீண்டும் மண்டியிட்டு, நெற்றி சிவப்பு கம்பளம் மூடி இருக்கும் தரையைத் தொட... வணங்கினார். பதறிப் போன குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓடி வந்து சுவாமியைத் தூக்கி விட்டு... பத்மஸ்ரீ விருதினை சுவாமிக்கு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது விழாவில் இதுவரை நடக்காத நெகிழ்ச்சியான சம்பவம் அது.

பலருக்கும் அத்தனை தெரியாத சுவாமி சிவானந்தா இன்று உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்தவராகிவிட்டார். "பத்மஸ்ரீ' விருது மூலம் உலக நாடுகளின் கவனத்தை சுவாமி ஈர்த்துக் கொண்டுள்ளார்.

2021 பிப்ரவரி 7-இல் ஓர் நிகழ்வு. சுவாமி அபுதாபி சென்றிருந்தார். அப்போது சுவாமியின் நீண்ட வயதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அபுதாபியிலிருந்து கொல்கத்தா புறப்படும் போது, விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையின் போது சுவாமியின் பாஸ்போர்ட்டில் சுவாமியின் பிறந்த தேதியைப் பார்த்த போது அபுதாபி காவலருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி .
பிறந்த தேதி 1896 ஆகஸ்ட் 8 . உருவத்தைப் பாத்தா 80 க்கு மேலே சொல்ல முடியாது... 124 வயதில் மனுஷன் வாழமுடியுமா... மனுஷன் நடக்கிறார்... தனியாகப் பயணிக்கிறார்...
சுவாமியை அதிசயமாகப் பார்த்த அந்தக் காவலர் சுவாமியுடன் படம் பிடித்துக்கொண்டார். இந்தச் செய்தி அடுத்த நாள் அபுதாபி ஊடகங்களில் இடம் பிடித்தாலும், இந்தியாவில் அப்போதும் சுவாமி குறித்துப் பரவலான செய்தியில்லை.
சுவாமி சிவானந்தா யார்?
அன்றைய கிழக்கு வங்காளம் இந்தியாவின் பாகமாக இருந்தது. அங்கே ஹபிகஞ் மாவட்டத்தில் ஹரிப்பூர் கிராமத்தில் 1896 ஆகஸ்ட் மாதம் எட்டாம் நாள் சிவானந்தா பிறந்தார். பெற்றோர் ஸ்ரீநாத் கோஸ்வாமி - பகவதி தேவி. யாசகம் எடுத்து வாழ்ந்தார்கள். கடும் வறுமையால் வாடிய பெற்றோர்கள் சிவானந்தாவிற்கு அரிசி வேகவைத்த நீரை மட்டுமே தர முடிந்தது. பெரும்பாலான இரவுகள் அந்தக் கஞ்சி நீரும் கிடைக்காமல் பட்டினியால் தூங்கிய நாள்கள்தான் அதிகம்.
சுவாமிக்கு ஆறு வயது ஆவதற்கு முன்னமே பெற்றோர் காலமாக, ஆதரவற்று நின்ற சிவானந்தா மேற்கு வங்காளத்தில் நவதீப் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்டார். அங்கே குருவாக இருந்த ஓம்காரனந்தா கோஸ்வாமியின் அரவணைப்பில் சிவானந்தர் வளருகிறார். குருகுல வாழ்க்கை. வேதங்களை படித்து தெய்வீகப் பணிகளில் ஈடுபடுகிறார். யோகாவையும் கரைத்துக் குடிக்கிறார். பள்ளிக்குப் போனதில்லை. ஆசிரமத்தில் ஆகம வேதங்கள் கூறும் நல்ல மனிதனாக செதுக்கப்பட்டார்.
வாழ்க்கையின் அடிமட்ட மக்களுக்காக காசி, பூரி, நவதீப் போன்ற இடங்களில் சேவை புரிந்து வருகிறார். ஐம்பது ஆண்டுகாலமாக தொழு நோயாளிகளுக்கு எல்லா வித உதவிகளையும் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்துவருவதுடன், பிறரையும் உதவச் செய்கிறார்.
தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பல உடல்நலப் பிரச்னைகள் வரும் என்று பெரும்பாலான மக்கள் இங்கு பயந்த போது 124-ஆவது வயதில் சிவானந்தா கரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு ஒரு முன்மாதிரி ஆனார்.
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சிவானந்தரை பலமுறை உடல் மற்றும் உள்ளுறுப்புகள் குறித்து மருத்துவ சோதனைகள் நடத்தியுள்ளனர். சுவாமி அதிக நாள்கள் வாழ உள் உடல் உறுப்புகள் வித்தியாசமாக அமைந்திருக்கின்றனவா... நீண்ட ஆண்டுகள் வாழ்வதால் உள் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறுநீரகம், எந்த நிலையில் இருக்கின்றன என்று அறிந்து கொள்ளவும் பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. உள் உறுப்புகள் இதர மனிதர்களுக்கு உள்ளது போலவே அமைந்து, எல்லாம் சரிவர வேலை செய்து வருகின்றன என்று அறியப்பட்டது.
முதுமை, உள் உறுப்புகளை பாதிக்கவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெளிவானது. யோகா கலையில் உச்சம் தொட்ட சிவானந்தருக்கு அவரது யோகா அறிவிற்காகவும் அனுபவத்திற்காகவும் "யோகா ரத்னா' விருதும் வழங்கப்பட்டன.
சுவாமிக்கு 125 வயதாகியும் ஏன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவில்லை...என்று கேட்டால்,
"சுவாமிக்கு விளம்பரம் பிடிக்காது. அவர் செய்யும் சேவைகளைக் கூட அவர் வெளியே சொல்வதில்லை... கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் சுவாமிக்கு இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் சுவாமியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதினால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் சுவாமியின் பெயர் இடம் பெற நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறார்' என்கின்றனர் சீடர்கள்.
சுவாமி பிறந்த 19 -ஆம் நூற்றாண்டில் பிறந்தநாள் சான்றிதழ் தரும் வழக்கம் கிடையாது. அந்தக் காலத்தில் கோயில்களில் இருக்கும் லெட்ஜர்களில் பிறப்பு குறித்து எழுதிவைப்பார்களாம். அந்த லெட்ஜர் 125 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது கிடைக்க சாத்தியமில்லை. இப்போதைக்கு சுவாமியிடம் இருக்கும் பாஸ்போர்ட் ஒன்றுதான் சுவாமி வைத்திருக்கும் பிறந்தநாள் சான்றிதழ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுவாமி தரையில் பாய் விரித்துத் தூங்கி வந்திருக்கிறார். தலையணையாக சுவாமி வைத்துக் கொள்வது தடிமனான ஒரு மரப்பலகை.
சுவாமியின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன ? சுவாமியே சொல்கிறார்:
""வேக வைத்த உணவைத்தான் இத்தனை ஆண்டுகளாக உண்டு வருகிறேன். எண்ணெய் சேர்க்கும் காய்கறிகள், பருப்பு என்றாலும் கூட சேர்த்துக் கொள்வதில்லை. ஒதுக்கி விடுவேன். மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு, பால், பழங்கள் எதையும் உண்பதில்லை. உணவுடன் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்வேன். வயிறு நிறைய உண்ணுவதில்லை. வாரத்தில் பல நாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு இந்த உணவே அதிகம். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து, கங்கையில் குளித்து பிறகு ஆசிரமத்தில் யோகா செய்து முடிக்கும் போது பொழுது புலர்ந்துவிடும். பிறகு பூஜை... சேவை என்று நேரம் கடக்கும்.
பிரம்மச்சரியம், தினமும் யோகா... உடல்பயிற்சி, எளிய வாழ்க்கை, இது வேண்டும்... அது வேண்டும் என்கிற ஆசை இல்லாமை, வேளா வேளைக்கு உண்ணும் பாதி உணவு, கடவுளின் அருள் போன்றவை இணைந்து எனக்கு நீண்ட ஆயுளைத் தந்திருக்கின்றன. பார்வை தெளிவாக இருக்கிறது. மூக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் இதுவரை வரவில்லை.
"முன்பெல்லாம் உள்ளதை வைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். போதும் என்ற மனம் அவர்களுக்கு இருந்தது. இப்போது மக்களின் மனநிலை மாறிவிட்டது. மனதில் சந்தோஷமில்லை... உடலில் ஆரோக்கியம் இல்லை... பழக்கவழக்கத்தில் நாணயம் இல்லை ... இந்த குறைகள் எனக்கு வருத்தத்தையும் வலியையும் தருகின்றன' என்கிறார்.
சுவாமி சுமார் 34 நாடுகள் பயணித்திருக்கிறார். 1925 லிருந்து 1959 பிரான்ஸ், கிரீஸ், மால்ட்டா, ஜப்பான் நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இந்தியாவிலும் பல இடங்களில் வாழ்ந்து வந்த சுவாமி தற்போது காசியில் வாழ்ந்து வருகிறார். சுவாமி சிவானந்தாவின் சீடர்கள் சுவாமியை "சிவானந்த பாபா' என்று அழைக்கிறார்கள்.
சுவாமிக்கு இருக்கும் ஒரே ஆசை "மக்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் அமைதியை விரும்புபவர்
களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை' என்கிறார் சுவாமி
சிவானந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com