நசித்து வரும்  தோல் பாவை கூத்து!

பொது மக்களுக்கு மண்ணின் கலாசாரத்தையும் மாண்பையும் அவ்வப்போது சொல்லி வந்த கலைகளில் சில மலினப் பட்டுப் போனாலும் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலை, தோல் பாவை கூத்து.
நசித்து வரும்  தோல் பாவை கூத்து!

பொது மக்களுக்கு மண்ணின் கலாசாரத்தையும் மாண்பையும் அவ்வப்போது சொல்லி வந்த கலைகளில் சில மலினப் பட்டுப் போனாலும் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலை, தோல் பாவை கூத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன் பல குடும்பங்கள் தனித்தனியாக நடத்தி வந்த கலை இன்று ஒரு குடும்பக் கலையாக சுருங்கியுள்ளது.

தோல் பாவைக் கூத்தின் உயிர்ப்பாக இருக்கும் முத்து சந்திரன் தோல்பாவைக் கூத்து பற்றியும் அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது குறித்து சொல்கிறார்:

""எங்களது பூர்விகம் தமிழ்நாடு அல்ல. அன்றைய மராட்டியம். சரபோஜி மன்னர் தஞ்சாவூரை ஆண்ட போது மராட்டியத்திலிருந்து தோல்பாவைக் கூத்து கலைஞர்களை தஞ்சாவூரில் குடி அமர்த்தினார். அந்தக் கலைஞர்கள் வாழ பல உதவிகள் செய்து வந்தார். மராட்டியக் கலைஞர்களும் தமிழைக் கற்றுக் கொண்டு தோல் பாவை கூத்தை தமிழில் (கொஞ்சம் தப்பும் தவறுமாய்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் தோல்பாவைக் கூத்தை காட்டி பிழைத்து வந்தார்கள். ஆண்டுகள் கடக்க, கடக்க தமிழை பிழை இல்லாமல் பேச எழுதக் கற்றுக் கொண்டார்கள். சரபோஜி மன்னர் ஆட்சி மாறியதும் தோல் பாவைக் கூத்து கலைஞர்களுக்கு அரசு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் வாழ்வாதாரம் தேடி தெற்கு நோக்கி குடி பெயர்ந்தார்கள். மதுரையில் தங்கினார்கள். சிலர் கன்னியாகுமரிவரை வந்துவிட்டார்கள். அப்படி கன்னியாகுமரியில் வந்தவர்கள்தான் எனது மூதாதையர். நான் குடும்பத்துடன் தோவாளைக்கு அருகில் திருமலைபுரம் கிராமத்தில் வாழ்கிறேன்.

அந்தக் காலத்தில் டி.வி, வானொலி, சினிமா எதுவும் இல்லாத காலம். கிராமம் கிராமமாய் போய் நிகழ்ச்சிகளை எனது மூதாதையர்கள் வழங்கி வந்தார்கள். கிராமத்திலேயே பல நாட்கள் தாங்கிக் கொள்வார்கள். "ராமாயணம்', "ஹரிச்சந்திரா', "நல்லதங்காள்' என்று பல மண் பேசும் புராணக் கதைகளை இரவு முழுவதும் நிகழ்ச்சியாக்கி வழங்குவார்கள். காலம் செல்லச் செல்ல அறிவியல் முன்னேற்றத்தால் சினிமா.. வானொலி... டி.வி ... டி.வி.டி பிளேயர்.. கேபிள் டிவி.. பிறகு அலைபேசியில் காணொளிகள் என்று காலம் பல மாற்றங்களுக்கு உள்ளானதில் பாதிக்கப்பட்ட கலைகளில் தோல்பாவை கூத்தும் அடங்கும்.

இரவு தொடங்கி விடியும் வரை நடக்கும் நிகழ்ச்சி அரை, ஒரு மணி நேர நிகழ்ச்சியாகச் சுருங்கிவிட்டன. தோல்பாவைக் கூத்து குறித்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் இப்போது நடத்தப்படுகின்றன. பயிலரங்குகள், பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கள் வாழ்வாதாரம் "ஆஹா ஓஹோ' என்று இல்லாவிட்டாலும் "ஏதோ ஓடுகிறது' என்று சொல்லலாம். தற்சமயம் தமிழகத்தில் நான்தான் தோல்பாவைக் கூத்தை நடத்திவருகிறேன். எனக்கு கலைமாமணி விருதும் கிடைத்திருக்கிறது.

இந்தக் கலை காரணமாக எனது மூதாதையர்களில் ஐந்து தலைமுறையினரை என் நினைவில் வைத்திருக்க முடிகிறது. சாமிராவ், கிருஷ்ண ராவ், கோபால் ராவ், சுப்பா ராவ், பாலகிருஷ்ணா ராவ் அடுத்ததாக நான். எங்கள் ராமாயணம் வால்மீகி, கம்ப ராமாயணத்திலிருந்து வேறுபட்டிருக்கும். நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் இசைக்கருவிகளின் ஹார்மோனியத்திற்குப் பதில் "கேசியோ' எலெக்ட்ரானிக் பெட்டியைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி மிருதங்கம், கஞ்சிரா கட்டை, சலங்கை, கால் கட்டை அப்படியே இன்றைக்கும் பயன்படுத்துகிறோம். அதுபோல தோலில் வரையப்படும் உருவங்கள் புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் உண்டு.

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்களையும், வசனங்களையும் நிகழ்ச்சிகளில் கலந்து வழங்கி வந்தார்கள். இப்போது பெண் கல்வி, சிறு வயதில் திருமணம், கரோனா, பிளாஸ்டிக் பயன்பாடு, குறித்த சமூக விழிப்புணர்வு செய்திகளையும் நிகழ்ச்சிகளில் கலந்துள்ளோம். அதற்காக ஆசிரியர், காவலர், மருத்துவர் போன்ற உருவங்களையும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறோம்.

திரையின் பின்னால் அமர்ந்து கொண்டு கம்பில் பொருத்தப்பட்டுள்ள உருவங்களை இயக்குவதுடன், திரையில் காண்பிக்கப்படும் உருவத்திற்கேற்ப பல குரல்களில் பட படவென்று மாற்றி மாற்றி பேசிக் கொண்டே அல்லது பாடிக் கொண்டே நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

இசைக்கு மூன்று ஆள்கள் இருப்பார்கள். தோல் பாவைகளை இயக்கி ஆண் பெண் குரல்களில் பாடுவதும், பேசுவதும் நான்தான். எனக்கு 31 குரல்களில் விதம்விதமாகப் பேச வரும். தமிழ்நாட்டில் மட்டும்தான் தோல்பாவைக் கூத்தில் ஒருவர் நிகழ்ச்சியை வழங்குவார். இதர மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் தோல் உருவங்களை இயக்கி பாடுவார்கள்.. வசனம் பேசுவார்கள்.

தோலில் உருவங்கள் நாங்கள் வரைந்து சாயம் பூசுவோம். முதலில் இயற்கை சாயங்களை பூசுவோம். இப்போது இயற்கை சாயங்கள் கிடைக்காததால் செயற்கை சாயங்களை பயன்படுத்துகிறோம். தோல்பாவைக் கூத்து பற்றிய வரலாறை முனைவர் அ.க. பெருமாள் ஆய்வு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலில் எனது மூதாதையர் குறித்த தகவல்கள், தோல்பாவைக் கூத்து தமிழகத்தில் அறிமுகமானது, வளர்ந்தது, இப்போதுள்ள நிலைமை என்று ஆழமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார்.

கிராமங்களில் 1950-60களில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் தோல்பாவைக் கூத்து நடக்கும். "நல்ல தங்காள்' கதைக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். காலம் மாற மாற.. எங்கள் கதைகளும் மாறின. நாங்களும் மின் விளக்கிற்கு மாறிவிட்டோம்.

சுனாமி கன்னியாகுமாரியைத் தாக்கியபோது மனித இழப்புகளை பற்றி நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்தது. சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையையும் கூத்தாக அரங்கேற்றியிருக்கிறோம். அதற்கு எல்லாவகையிலும் உதவியவர் பெருமாள் அய்யாதான்.

எங்கள் இனத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது குடும்பங்கள் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்றன. எங்கள் இனத்திற்குள் பல பிரிவுகள் உள்ளன. நாங்கள் வீட்டில் மராத்தி பேசுவோம். மராத்தி எழுத வராது. நான் மண்டிகர் என்கிற இனத்தைச் சேர்ந்தவன். நாங்கள் ஒரே பிரிவுக்குள் பெண் எடுக்க மாட்டோம். போன தலைமுறைவரை நாடோடியாக வாழ்ந்துவிட்டோம். இப்போதுதான் எங்கள் இனத்தில் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள்.

எனது நான்கு மகன்களும் கல்லூரி - பள்ளிகளில் படிக்கிறார்கள். விடுமுறை நாள்கள் எனது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். நான்கு மகன்கள். கல்லூரியில், பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளி, கல்லூரி இல்லாத போது என்னுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மனைவி ராதா நிகழ்ச்சிக்கு இசை அமைக்கிறார். மத்திய மாநில அரசு உதவிகள் அவ்வப்போது கிடைக்கின்றன. தொடர்ந்து கிடைத்தால் தோல் பாவைக் கூத்து தொடர்ந்து வாழும்'' என்கிறார் முத்து சந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com