இயற்கைக்கு ஆதரவான முடிவு!

எரித்ரியா - கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலை ஒட்டியுள்ள நாடு .  நீண்ட நெடிய ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னர் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் நுழைய முயற்சி செய்யும் நாடு.
இயற்கைக்கு ஆதரவான முடிவு!
Updated on
2 min read

எரித்ரியா - கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலை ஒட்டியுள்ள நாடு .  நீண்ட நெடிய ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னர் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் நுழைய முயற்சி செய்யும் நாடு.  இந்தப் பணிக்கு  உறுதுணையாக இருக்கிறார் தமிழ்ப் பெண் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி.

கன்னியாகுமரி அருகே உள்ள கரும்பாட்டூரில் ஸ்டான்லி சுபமணி- கமலா பேபி தம்பதியின் மூத்த மகள்.   இவர்  கடந்த 22 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் வசித்து வருகிறார்.  வதோதரா தமிழ்ச் சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராகவும் உள்ளார். 

இளங்கலை தாவரவியல் பட்டப் படிப்பை தூத்துக்குடி புனித மேரி கல்லூரியிலும், முதுகலைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்,  எம்.ஃபில். ஆய்வுப் பட்டப்படிப்பை பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி- கடலியலில் கல்லூரியிலும்,  முனைவர் பட்டத்தை பூண்டி புஷ்பம் கல்லூரியிலும், முதுகலை முனைவர் பட்டத்தை மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தில் பயின்றார். கடல் கடந்து சாதனை படைக்கும் இவரிடம் ஓர் பேட்டி:

இந்தியாவில் பணிபுரிந்த அனுபவம்...?

2000-ஆம் ஆண்டு முதல் 2004 வரை குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெஸெர்ட் எக்காலஜி,  குஜராத் எக்காலஜி கமிஷன் ஆகிய அரசு நிறுவனங்களில் பணிபுரிந்தேன். பின்னர் "எக்கோபாலன்ஸ் கன்சல்டன்சி'  என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். கடற்கரையில் பாறாங்கற்களை அடுக்குவதற்குப் பதில்,  மணல் மேடுகளை அழியாமல் பாதுகாப்பதால் கடல் அரிப்பைத் தடுக்கலாம்.  

ஏற்கெனவே அழிக்கப்பட்ட,  அரிக்கப்பட்ட மணல் மேடுகளை சீரமைத்துவருகிறோம்.  மணல் மேடுகளை மீண்டும் காற்று கலைத்து விடாமல் இருக்க,  கொடிவகை தாவரங்களை மணல் மீது வளர விடுகிறோம். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் முன்னோடி திட்டங்களாகும்.  ஒருங்கிணைந்த கடற்சார் சூழலியல் மேலாண்மை வல்லுநராகவும், இந்திய தர நிர்ணயத்தில் ஒப்புதல் பெற்ற சூழலியல், பல்லுயிர் நிபுணராகவும் ஆனேன்.

எரித்ரியா நாட்டு  பணிகள் குறித்து...?

எரித்ரியா நாட்டின் மீன் வள பாதுகாப்பு,  மீன் வளர்ப்புத் திட்டத்தில் தற்போது பணியாற்றி வருகிறேன்.

ஆசிய வளர்ச்சி வங்கி,  ஐக்கிய நாடுகளின் உணவு- வேளாண் நிறுவனத்துடன் இந்தியா உள்பட வடகொரியா, தென்கொரியா, கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எரித்ரியா, மியான்மர், வங்கதேசம்,  மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த காடுகள், மீன்வளம், சதுப்பு நிலம், விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு,  மணல் மேடுகள், உணவுப் பாதுகாப்பு,  பருவ நிலை மாற்றம், கடலோர சூழலியல்கள் பாதுகாப்புப் புணரியக்கம், பேரிடர் மேலாண்மை, உள்பட இயற்கை வள மேம்பாட்டு பிரிவுகளில் ஆராய்ச்சி, மேலாண்மை வல்லுநராகப் பணிபுரிந்து உள்ளேன்.

எரித்யாவில் தற்போது நிலவும் நிலைமை..?

முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டம்,  பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் மோசமான உணவு, நீர், மின் தட்டுப்பாட்டுகள் நிறைந்த சூழலில் சிக்கிய நாடாக உள்ளது. தற்போது மீன்வளப் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு, சதுப்பு நிலம், கடலோரப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி டிசம்பர் வரை இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...?

ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண் நிறுவனத்துடன் இணைந்தது 2008- ஆம் ஆண்டாகும். மியான்மர் நாட்டின் ரக்கைன்வுன் பைக் சதுப்புநிலக் காடுகள் குறித்த ஆராய்ச்சி,  கடலோர மக்களின் உணவுப் பாதுகாப்பு குறித்த திட்டத்தில் தான் பணி.

மியான்மர் நாட்டின் சதுப்புநிலக் காடுகள் குறித்து  சதுப்புநிலக் காட்டு மரங்கள்,   மீன் வளம்,  பாதுகாப்பு - மேம்பாடு ஆகியன குறைத்து, 3 புத்தகங்களை எழுதியுள்ளேன். பல செயல்திட்டத்தை கூட்டாக வகுத்து அளித்துள்ளேன்.

இதரத் தனித்திறன்கள், விருதுகள் பற்றி...?

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்துக்காக,  4 அத்தியாயங்களும், ஆசிய வங்கி நிதி உதவியுடன் எழுதப்பட்ட  "இந்திய கடலோர பாதுகாப்பு, மேலாண்மை சார்ந்த பருவ நிலைத் தகவமைப்பு நெறிமுறைகள் - 2017', "மணல் மேடுகள் மேலாண்மை கையேடு 2020" என்ற புத்தகங்களின் இணை நூலாசிரியாக உள்ளேன்.

அலுவல் சாராமல்,  "ஆண் உலகம்: உடல் மனம் ஆரோக்கியம்'  என்ற மருத்துவ நூலை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன்.  "சலியாத தீண்டல்கள்' எனும் கவிதை தொகுப்பை 2019- இல் வெளியிட்டேன்.பல விருதுகளைப்  பெற்றுள்ளேன்.

இயற்கை வளங்கள் குறித்து உங்கள் கருத்து..?

தமிழகத்தில் குறிஞ்சி,  முல்லை,  மருதம்,  நெய்தல்,  பாலை என ஐவகை நிலப்பரப்புகளும்,  பாதுகாப்புச் சட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வளங்கள் என குறியீடுகள் உள்ளன.

நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுகின்றன;  ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தனிநபர் உரிமையும்  பொறுப்புமாகும்.

"சதுப்பள மீளுருவாக்கம்'  என்ற பெயரில் நடும் மரக்கன்றுகள் வனப் பகுதிகளாகத் தழைப்பதில்லை. 

கால்வாய் ஓரத்தில் மரக்கன்று நடுவது மட்டும் அல்ல;  சதுப்பு நில வன மீளுருவாக்கம்,  மரங்கள்,  நீரோட்டம், நீர்க் கொள்ளளவு, மீன்கள், நண்டு, நிலம், பாசிகள், இலைஅழுகுதல், ஒளிசேர்க்கை என ஒரு முழுதான சதுப்பள சூழலியல் செயல்பாட்டியலை உருவாக்குவதாகும். இனியாவது தவறான முறைகளை மறுத்து இயற்கைக்கு ஆதரவான முடிவுகளை எடுப்போம்.

தொழில் வளர்ச்சிக்கு  ஈடு  கொடுக்க சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவுக்கு வளர வேண்டும். இருக்கும் வளங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். பகுத்தாய்ந்து அளவோடு உபயோகிக்க வேண்டும். கழிவுகளின் உற்பத்தியைக் குறைப்போம். புதிய வளங்கள் உருவாக்கும் முறைகளை பெருக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com