அசத்தும் தம்பதி...!

தோட்டக்கலைப்பண்ணையில் அரிய வகை மரங்கள், பூஜைக்கு உகந்த அரிய பூச்செடிகள், கோயில் விருட்ச மரங்களையும் வளர்த்து சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களுக்கு வழங்கி,  தம்பதியர் அசத்தி வருகின்றனர்.
அசத்தும் தம்பதி...!

தோட்டக்கலைப்பண்ணையில் அரிய வகை மரங்கள், பூஜைக்கு உகந்த அரிய பூச்செடிகள், கோயில் விருட்ச மரங்களையும் வளர்த்து சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களுக்கு வழங்கி, தம்பதியர் அசத்தி வருகின்றனர்.

"ஜெயந்தி தோட்டக்கலை பண்ணை' 1990-ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேரம்பாக்கம் அருகேயுள்ள கூவம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வேளாண் துறையின் உரிம அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

இந்த பண்ணையை நடத்தி வரும் ஜெயந்திகூறியதாவது:

""எனது கணவர் ஓய்வு பெற்ற கிராப்ட் ஆசிரியர் குமரேசன். இருவரும் வேளாண் துறையில் பட்டயம் பயின்றுள்ளோம். செடிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. இதனாலும், கிராமப்புற மகளிர் மேம்பாட்டை கருத்தில் கொண்டும், பண்ணையைத் தொடங்கினேன். ஆர்வமுள்ள மகளிருக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு வருவாயை அளித்து வருகிறோம்.

உலக வெப்பமயமாதலைத் தடுத்து, பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும், மாபெரும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் இந்தியாவில் 47 ஆயிரம் வகையான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரியவகை மரங்களின் விதைகளைக் கொண்டு 1 அடி முதல் 8 அடி வரை உயரமாக வளர்க்கப்பட்ட தாவரங்கள் மிகவும் குறைந்த விலையில், லாப நோக்கமின்றி அடக்க விலையில் வழங்கி வருகின்றோம்.

அரிய வகை மரங்கள், பூஜைக்கு உரிய செடிகள், கோயில்களில் தல விருட்சங்களான நாகலிங்கமரம், வன்னிமரம், வில்வமரம், மகிழமரம், பாரிஜாதம், செண்பகமரம், புன்னைமரம், சரக்கொன்றை ஆகியன உற்பத்தி செய்து வளர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி மரவேலைபாடுகளுக்கு உகந்த உயர்ரக மரவகையான சில்வர் ஓக், ரோஸ் உட், செம்மரம், மகாகனி,இயல்வாகை, பூவரசு, சந்தனமரம், மரமல்லி போன்ற பல்வேறு மூலிகை மரங்களையும் வளர்க்கிறாம்.

ஏற்றுமதிக்குத் தேவையான முதல் தரத் தாவரங்களான சோற்றுக்கற்றாழை, சிரியா நங்கை, மருதாணி, கிருஷ்ணர் துளசி, நித்ய கல்யாணி, ஆடாதோடா, நொச்சி, பேய் மிரட்டி, ஆவாரம்பூ போன்ற மூலிகைச் செடிகளையும் பாதுகாத்து வளர்த்து வருகின்றோம்.

கோயில் பூஜைக்கு உகந்த நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளி, புளுமேரியா ஆல்பா, விருசிப்பூ, ரோஜா, எட்டு அடுக்கு மல்லி, முல்லை, சாதி மல்லி, போன்ற செடிகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிறங்கள் மற்றும் ரகங்கள் வண்ண வண்ண குரோட்டன்ஸ் தாவரங்களை வளர்த்து வருகிறோம்.

கொய்யா, மாதுளை, தென்னை(மஞ்சள்), செவ்வளநீர், தென்னை(பச்சை), மா, பலா, ஒட்டுநெல்லி, முள்சீதா, சாத்துக்குடி, நாவல், சப்போட்டா, போன்ற பழவகைச்செடிகளை இயற்கை உரங்களுடன் வளர்த்து வருகின்றோம்.

இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பரிசளிக்க பூச்செடிகள், உயர் ரக பழ வகைச்செடிகள் மிகவும்தரமானதாக உற்பத்தி வழங்குகிறோம்.

தேசத்தலைவர்கள் பிறந்த நாள், சுதந்திரத் போராட்ட வீரர்கள் நினைவு நாள், சுற்றுச்சூழல்மன்றம், சுதந்திரத் தினவிழா, குடியரசு தினவிழா போன்ற தினங்களில் பூச்செடிகள், நிழல் தரும் மரங்களை இலவசமாக பல ஆண்டுகளாக வழங்கிவருகிறோம்'' என்றார்.

இதுகுறித்து குமரேசன் கூறியதாவது:

இதுவரையில் 10 லட்சம் செடிகளை வளர்த்து லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விநியோகம் செய்து வருகிறோம். செடிகள் நன்றாக வளர்ந்து காய்கள், பூக்கள் பூத்து குலுங்குவதாக கூறுகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோயில்களில் தலவிருட்சமாக திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் பாதிரி மரமும், மயிலாப்பூர் அப்பர்சாமி கோயிலில் ஒன்பது இலை வில்வமரம் வைத்துள்ளோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com