மக்கள் மனம் வென்ற மணக்குள நாயகி!

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் அரசியாய் வலம் வந்த யானை லட்சுமி இறந்தது,  பல்லாயிரக்கணக்கானோரை கண்ணீரில் ஆழ்த்தியது.
மக்கள் மனம் வென்ற மணக்குள நாயகி!
Updated on
1 min read

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் அரசியாய் வலம் வந்த யானை லட்சுமி இறந்தது, பல்லாயிரக்கணக்கானோரை கண்ணீரில் ஆழ்த்தியது.

1997-ஆம் ஆண்டு ஜூன் 30- இல் புதுச்சேரிக்கு வந்த லட்சுமி, 2022-ஆம் ஆண்டு நவ. 30-இல் விடைபெற்றாள். 1997-இல் அப்போதைய புதுவை முதல்வர் ஜானகிராமன் முன்னிலையில், இந்த யானை கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது.

33 வயதான அந்த யானைக்கு பத்தடிக்கும் மேலான கம்பீர உயரம், பாசத்துடன் தும்பிக்கையை நீட்டி ஆசீர்வதிக்கும் பாங்கு, பக்தர்களை வசீகரிக்கும் பார்வை.. என தெய்வாம்சம் நிறைந்தவளாக வலம் வந்தாள் லட்சுமி. இவருக்கு ஓரடிக்கும் மேலாகதந்தம் வளர்ந்திருந்தது. லட்சுமியைப் பார்த்துவிட்டு வழக்கமான பணிகளைத் தொடங்குவதையே வழக்கமாகவும் பலர் கடைப்பிடித்துள்ளனர்.

5 வயதிருக்கும்போது கேரளத்தில் இருந்து புதுச்சேரியில் அடியெடுத்து வைத்தாள் லட்சுமி. முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பலரும் லட்சுமியின் மீது பாசமழை பொழிந்தவர்கள்தான்!

இதுகுறித்து பாகன் சக்திவேல் கூறியதாவது:

""சில நாள்களிலேயே லட்சுமியால் அனைவரையும் அன்பால் கட்டிப்போடமுடிந்தது. கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக, சகோதரியாக, தாயாக பழகிய நிலையில் லட்சுமியின் மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. ஆரம்பத்தில் குழந்தையைப் போல சுட்டித்தனத்துடன் இருந்தவள், பின்னர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாள்.

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு சாலையில் அழைத்துச் செல்லும்போது எதிர்ப்படுகிறவர்களை ஆசீர்வதிப்பார். மக்கள் தரும் எதையும் மறுப்பதே இல்லை.

கோயிலுக்கு வந்ததும் வெளியிலிருந்தே மூலவரைப் பார்த்து தும்பிக்கையைத் தூக்கி வணங்குவாள். பின்னர், இருப்பிடம் நின்று வருவோரை வாழ்த்துவாள். தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை தூரத்தில் கண்டால் துதிக்கையை நீட்டி வரவேற்பாள்.

தனது இறுதிக்காலத்தை முன்னதாகவே அனுமானித்ததாலோ என்னவோ நடைப்பயிற்சியின்போது யாருக்கும், எந்தப் பொருளுக்கும் தீங்கு ஏற்படக்கூடாது என மெல்லஅசைந்து நடந்து கார்கள், பாகன் என அருகிலிருந்தவர்கள் மீது சாய்ந்துவிடாதபடி சாலையோரம் தரையில் சாய்ந்து அமைதியானாள் லட்சுமி'' என்றார் கண்ணீருடன்!

""லட்சுமியை எனது தோழியைப் போல நினைத்து வந்தேன். லட்சுமியின் மறைவை ஏற்கமுடியாத மனநிலை உள்ளது'' என்று இறுதி மரியாதை செலுத்திய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

செல்லப்பிள்ளையாக, சிறப்புக்குரியவளாக மக்கள் மனதை வென்ற லட்சுமி இடத்துக்கு இனி எத்தனையோ யானைகள் வரலாம்.

"ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும் ஒருநாள் நிற்கும்போது கூடுகிற கூட்டம்தான் சொல்லும் நீ யாரென்று..' என்பது பட்டினத்தார் வாக்கு. அதை தனக்கு அஞ்சலி செலுத்திய பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் வாயிலாக நிரூபித்தாள் லட்சுமி.


படங்கள்-கி.ரமேஷ் (எ) ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com