100 வயது பாரம்பரியம்: தெற்கு ரயில்வே தலைமையகக் கட்டடம்

சென்னைக்கு வரும் பலரும்  எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கி இருப்பார்கள் அல்லது பார்த்திருப்பார்கள்.
100 வயது பாரம்பரியம்: தெற்கு ரயில்வே தலைமையகக் கட்டடம்


சென்னைக்கு வரும் பலரும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கி இருப்பார்கள் அல்லது பார்த்திருப்பார்கள். ஆனால், அங்குள்ள ரயில்களும், ரயில் நிலையங்களும் இயங்கக் காரணமாக இருப்பது தெற்கு ரயில்வே தலைமையகம் எனும் ஒற்றை மூளையால்தான்.

தடங்களில் ஓடும் ரயில்கள் மட்டும் 100 ஆண்டுகளைக் கடக்கவில்லை. அந்த ரயில்களை இயக்க காரணமாகவுள்ள தெற்கு ரயில்வே தலைமையக கட்டடமும் தனது 100 ஆவது வயதை எட்டியிருக்கிறது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் இந்தக் கட்டடத்தை அறிந்திருக்க மக்களுக்கு வாய்ப்பில்லை. இந்தக் கட்டடம், சென்னையின் முக்கியப் பகுதியான பழமையான வால்டாக்ஸ் சாலையை ஒட்டி கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதாவது, சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு அடுத்ததாக மூன்று தளங்களைக் கொண்டது இந்தக் கட்டடம்.

இதில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம், இயக்கக அலுவலகம், வர்த்தக பிரிவு அலுவலகம், தொழிலாளர் நலப்பிரிவு அலுவலகம், நிதிப்பிரிவு அலுவலகம் உள்பட 18 பிரிவுகளின் அலுவலகங்கள் உள்ளன.

இந்தக் கட்டடத்தில் 1,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில ரயில் பாதைகளை முழுமையாகவும், ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளையும் தெற்கு ரயில்வே தனது எல்லைகளாகக் கொண்டுள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தக் கட்டடம் தற்போது நூறு ஆண்டுகளை பதிவு செய்து, பல்வேறு பெருமைகளை தாங்கிநிற்கிறது.

தற்போதைய கட்டமைப்புக்கான அடித்தளம் அப்போதைய சென்னையின் ஆளுநர் லார்ட் பென்ட்லன்ட்டால் 1915-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி போடப்பட்டது. அதாவது, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே (எம் & எஸ்எம்ஆர்) என்ற நிறுவனத்திற்கான தலைமையகத்தை கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டது.

மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே நிறுவனம் 1908-இல் மெட்ராஸ் ரயில்வேயின் ரயில் பாதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது.

தென்னிந்திய ரயில்வேயின் பிரிவுகளை பராமரிப்புக்காக, தெற்கு மராட்டா ரயில்வேயின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, தலைமையக கட்டடம், என்.கிரேசன் என்ற கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான டி.சாமிநாதபிள்ளையால் கட்டப்பட்டது. இந்த கட்டடம், திராவிட இந்தோ- சராசானிக் வகை அமைப்பாகும். தரை மட்டத்திலிருந்து ஐந்து முதல் எட்டு அடி வரை வலுவான கான்கிரீட்டை கொண்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் தூய மணல் அடுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் டன் கிரானைட் கான்கிரீட்டில் பதிக்கப்பட்ட 500 டன் இரும்புக் கம்பிகளைக் கொண்ட அடித்தளத்தை கட்டமைக்க சுமார் ஏழரை மாதங்கள் ஆகின.

இந்த கட்டடம் போர்பந்தர் கற்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. மத்திய கோபுரங்கள் சாலையிலிருந்து 125 அடி 6 அங்குல உயரத்துக்கு வானளாவிய அளவில் எழுந்தது.

இந்தக் கற்கள் எட்டு ஆண்டுகளாக கடல் வழியாக கேரளத்துக்கும், பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கும் கொண்டு வரப்பட்டன. போர்பந்தர் கற்களை குவாரிகளில் எடுப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் எச்எச் வாடியா மற்றும் அவரது சகோதரர் மான்சர்ஸ் ஷா எச் வாடியா ஆகியோர். குஜராத்தில் இருந்து போர்பந்தர் கற்களை எடுத்துவருவதில் முக்கிய பங்காற்றினர். மேலும் இவர்கள் 1913 முதல் 1922 வரை மாஸ்டர் மேசன் பீதாம்பர் ஹீராவின் தலைமையில் போர்பந்தரைச் சேர்ந்த திறமையான கொத்தனார்கள் குழுவுடன் சென்னையில் முகாமிட்டனர்.

இந்த கட்டடத்தின் மூலை கோபுரங்கள் சுமார் 35,000 கேலன்கள் (1.32 லட்சம் லிட்டர்) கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் உள்ளன. ஒன்பது ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் ரூ.30 லட்சத்து 76 ஆயிரத்து 400 செலவில் இந்த தலைமையகம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

பின்னர், 1922-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரின் மனைவி தி லேடி வெல்லிங்டனால் திறக்கப்பட்டது.

1966-ஆம் ஆண்டில் தென் மத்திய ரயில்வே மற்றும் 2003-ஆம் ஆண்டில் தென்மேற்கு ரயில்வே உருவாகும் வரை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பரந்து விரிந்த மிக நீளமான ரயில் பாதைகளின் தலைமையகமாக செயல்பட்டு வந்தது.

இந்த கட்டடம் பாரம்பரிய வடிவமைப்பு என்று அறிவிக்கப்பட்டதால், மத்திய அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி இது பராமரிக்கப்படுகிறது. இதற்காக, ஒரு குழு அமைத்து, பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு தபால் தலை வெளியீடு: தெற்கு ரயில்வேயின் தலைமையக கட்டடத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, சிறப்பு தபால் உறை கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி பி.செல்வகுமார் சிறப்பு தபால் உறையை வெளியிட, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா உறையை பெற்றுக் கொண்டார். இந்த தபால் உறைகள், சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைதபால் அலுவலகத்தில், தபால்தலை பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே: கடந்த 1944-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மற்றும் தென் மராட்டா ரயில்வே நிறுவனம் (எம் மற்றும் எஸ்எம்ஆர்) இந்திய அரசின் கீழ் வந்தது.

இதன்பிறகு, 1951-இல் தென்னிந்திய ரயில்வே மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகியவை மெட்ராஸ் மற்றும் தென் மராட்டா ரயில்வே நிறுவனத்துடன் (ங & நஙத) இணைக்கப்பட்டு, தெற்கு ரயில்வேயாக மாறியது.

இந்திய ரயில்வேயில் முதல் பெரிய ரயில்வே மண்டலமாக தெற்கு ரயில்வே அப்போது உருவானது. 1966-இல் தென் மத்திய ரயில்வே, 2003-இல் தென் மேற்கு ரயில்வே உருவானது. அதுவரை, மிக நீளமான ரயில் பாதைகளுக்கு தலைமையகமாக தெற்கு ரயில்வே செயல்பட்டது.

இன்னும் 100-ஆண்டுகள்!


""இந்த கட்டடம் கட்டுவதில் எங்கள் குடும்பத்துக்கு (குஜாரத்தில் இருந்து சென்னைக்கு போர்பந்தர் கற்கள் கொண்டு வந்ததில்) சிறிய பங்கு இருந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிக பிரபலமாக கட்டடங்
களுக்கு போர்பந்தர் கற்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை தவிர மும்பை, கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்களுக்கு குஜராத், செளராஷ்டிராவில் இருந்து போர்பந்தர் கற்கள் அனுப்பி உள்ளோம். நீண்டகால வரலாற்றில் தெற்கு ரயில்வே தலைமையக கட்டடத்தின் புகழ் ஓங்கி ஒலிக்கும். இந்த கட்டடம் இன்னும் 100-ஆண்டுக்கு மேல் கம்பீரமாக இருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார் அவர்.

போரஸ் தேமுல் வாடியா
(மான்சர்ஸ் ஷா எச் வாடியா பேரன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com