பேசா நோன்பில் தமிழறிஞர்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 4 ஆண்டுகளாக 83 வயது தமிழ்ப் போராளி "இயற்கை வாழ்வகம்' க.இரா.முத்துசாமி பேசாநோன்பு
பேசா நோன்பில் தமிழறிஞர்!


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 4 ஆண்டுகளாக 83 வயது தமிழ்ப் போராளி "இயற்கை வாழ்வகம்' க.இரா.முத்துசாமி பேசாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூர் கருவம்பாளையத்தில் ராமசாமி, முத்தம்மாள் தம்பதியரின் மகனாக கடந்த 1939 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தவர் க.இரா.முத்துசாமி(83), குடும்ப சூழ்நிலையால் 14 வயதிலேயே பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியைத் தொடங்கினார்.

தனது விடாமுயற்சியால் பின்னலாடைத் தொழில்களின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன், கடிகாரத்தின் பெயரில் டிட்டோனி என்ற பின்னலாடை நிறுவனத்தை சொந்தமாக நடத்திவருகிறார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகில் தன்னுடைய 8 ஏக்கர் நிலத்தில் "அன்னைப் பொழில்' என்கிற பெயரில் மூலிகைப் பெருந்தோட்டத்தை அமைத்திருந்தார். இதன் பிறகு கடன் சுமைகாரணமாக அன்னைப் பொழில் கைமாறியதைத் தொடர்ந்து கருவம்பாளையத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வாழ்வகத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலமாக மருந்தில்லாமல் உணவு மூலமாகவே அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். திருப்பூர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் என அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்.

தமிழ் வழிக்கல்வியை வலியுறுத்தி ஐயா நா.அருணாசலத்தின் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் 1999- ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய 102 தமிழ் அறிஞர்களின் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் முதல் போராளியாகப் மொழிப்போர் மறவர் விருதைப் பெற்றுள்ளார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி புலவர் த.சுந்தரராசன் அவர்களின் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் தில்லி நாடாளுமன்றத்தின் முன்பாக 2003- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 -ஆம் தேதி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்று செம்மொழிப் போராளி விருதையும் பெற்றுள்ளார்.

பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் தீவிரமாகக் பங்கேற்றுள்ளார். திருப்பூரில் முதியோர் தடகளப் போட்டிக்கான குழுவை நிறுவியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி திருமடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தனது 80 ஆவது அகவை தொடக்கவிழாவில் பேசா நோன்பைத் தொடங்கினார். அவரிடம் பேசினோம்: (எழுதிக்காட்டியும் சைகையிலுமாக) ""தாய்மொழிக்கல்வியால் நடக்கும் மோசடிகளும், தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் திணிக்கப்படுவதுமாகும். மேலும், ரயில்வே, பொதுத்துறை, வங்கிப் பணிகளில் மற்ற மொழிகள் பயின்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு கொடுக்கப்படாததுமாகும்.

தாய்மொழிக் கல்வி இல்லாமல் தமிழ் இனம் அடிமையாக்கப்பட்டுள்ளது. நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்படுவதால் நான் தாய்மொழியைப் பேசவில்லை என்ற வருத்தம் ஒருபோதும் இல்லை. ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்று கிடைக்கும் என்பது மனித இயல்பாகும்.

நாம் ஒவ்வொருவரும் தாயிடம் இருந்து கற்பதுதான் உண்மையான தாய்தமிழ் மொழிக் கல்வி. இந்த உலகில் படிக்காமல் தாய் மூலமாகவே கல்வி கற்ற ஞானிகள் பலர் உள்ளனர்.

இயற்கையான வாழ்வு முறை பற்றி?

நான் இயற்கையான முறையில் உணவை உட்கொண்டுவருவதால் 83 வயதிலும் நோய் நொடி இல்லாமல் இருக்கிறேன். நான் பசி எடுக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்கிறேன்.

உதாரணமாக இரு நாள்கள் பசி எடுக்கவில்லை என்றாலும் நான் உணவை உட்கொள்வதில்லை. அதே வேளையில், அசைவ உணவை நிறுத்தி 40 ஆண்டுகள் ஆகிறது. காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் உண்டவர்களும் கோல் இல்லாமல் நடக்கலாம்.

சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பவர்கள் நாங்கள் இருவரும்.நாங்கள் இருவரும் சேர்ந்துதான் கொடைக்கானலில் இயற்கை வேளாண்மை நிறுவனத்தை தொடங்கினோம். அவர் வேறு, நான் வேறு கிடையாது. குறிப்பாக தமிழ் தொடர்பான போராட்டங்களில் நம்மாழ்வாரும் பங்கேற்பார்.

பேசா நோன்பு போராட்டம் தமிழகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

தாய் மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் எனது போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதை இதன் வாயிலாக வலியுறுத்த விரும்புகிறேன். தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.

இதன் காரணமாகவே எனது 80 -ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசா நோன்பு போராட்டத்தைத் தொடங்கி (பிப்.7) 1,407 நாள்கள் நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க எனது இறுதி மூச்சு இருக்கும் வரையில் எனது போராட்டத்தைத் தொடர்வேன். இந்தப் போராட்டத்துக்கு என்னைச்சார்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவும் உள்ளதால் விரைவில் வெற்றியடையும் என்று நம்புகிறேன்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com