மண்ணின் மகிமை

"பல  ஆண்டுகளாகவே சேலம்  மாம்பழத்திற்கு பெயர் போனது.
மண்ணின் மகிமை

"பல ஆண்டுகளாகவே சேலம் மாம்பழத்திற்கு பெயர் போனது. உண்மைதான். இப்போது மருத்துவ குணம் நிறைந்த "குக்குமின்' சத்து அடங்கிய தரமான மஞ்சளையும் சேலம் உற்பத்தி செய்கிறது' என்கிறார் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கிருபாகரன். அமெரிக்காவில் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்த கிருபாகரன், சில ஆண்டுகளில் வேலையை உதறிவிட்டு ஆத்தூர் வந்து மஞ்சளை அடிப்படையாக வைத்து உணவுக்கு சுவையும், உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல பொருள்களை மதிப்பு கூட்டி ஆன்லைனில் விற்று வருகிறார்.

கிருபாகரன் தனது வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

""ஊர் திரும்பியதும் என்ன தொழில் தொடங்கலாம் என்று யோசித்த வேளையில் சேலத்தில் விளையும் மஞ்சளை அடிப்படையாக வைத்துத் தொடங்கலாம் என்று முடிவு செய்து, "டிவைன் ஃபுட்ஸ்' என்ற நிறுவனத்தைத் 2019 இறுதியில் தொடங்கினேன். மஞ்சள் இல்லாமல் மங்களகரமான விசேஷங்கள் நடப்பதில்லை. புது ஆடையில் மஞ்சள் தொட்டு வைத்த பிறகுதான் அணிவார்கள். விசேஷங்களுக்கு அழைப்பிதழ்களை விநியோகிக்கு முன் அழைப்பிதழின் மூலையில் மஞ்சள் தடவுவார்கள். கோயில்களில் மஞ்சள் பயன்பாடு உண்டு. வீடுகளில் ஆரத்தி எடுக்கும் போதும் மஞ்சள் பயன்படுத்துவார்கள். மஞ்சள் கிருமிநாசினியும் கூட. எல்லா கோணத்திலும் நமது வாழ்க்கையுடன் தொடர்புள்ளது மஞ்சள். அதனால்தான் "தெய்வீக உணவுகள்' என்று பெயர் வைத்தேன்.

அமெரிக்காவில் வசித்த போது பெரிய அங்காடிகளில் மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் பல பொருள்களை பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை. விலையும் அதிகம். அமெரிக்கர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்கள் அனைவரும் மஞ்சளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் பொருள்களை அவை விலை அதிகமாக இருந்தாலும், விரும்பி வாங்குகிறார்கள். காரணம் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்களை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2020-இல் கரோனாவின் தாக்கம் அதிகமானதுடன் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது.

சேலம் சுற்று வட்டாரத்தில் மஞ்சளில் "பிரதிபா' என்ற வகையைப் பயிரிடுகிறார்கள். சேலம் மஞ்சளில் இருக்கும் "குக்குமின்' வேதியல் பொருளின் அளவு பக்கத்து ஈரோடு பகுதியில் விளையும் பிரதிபா மஞ்சளில் இருப்பதில்லை. இதற்கு காரணம் சேலம் மண்ணின் மகிமை என்றுதான் சொல்ல வேண்டும். "குக்குமின்' புற்றுநோயைக் குணமாக்கும் தன்மை உடையது. அந்த ஒரு காரணத்திற்காகவே வெளிநாடுகளில் குக்குமின்னுக்கு தேவை அதிகம். சூடாக விற்பனை ஆகிறது. அதுவும் கரோனா வந்த பிறகு, மஞ்சளுடன் மதிப்பு கூட்டி விற்கப்படும் பொருள்களுக்கு கிராக்கி அதிகம்.

குக்குமின் தயாரிப்பதில் அதிக அளவு மஞ்சள் தேவைப்படும். மஞ்சளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வெளிவரும் ஆவியை குளிர்வித்து அதில் இருக்கும் குக்குமின்னை பிரித்தடுத்து உலர்த்தி பொடியாக்கி கேப்சூலில் அடைத்து விற்கிறார்கள். இந்த முறையில் செலவு அதிகம் என்பதால் குக்குமின்னின் விலையும் அதிகம். அவித்த மஞ்சளை உலர்த்தி மசாலா பொடி செய்யும் நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். வாங்கியவர்கள் அத்துடன் கொஞ்சம் நயம் மஞ்சளை சேர்த்து பொடி செய்து பாக்கெட்களில் போட்டு விற்கிறார்கள்.

குக்குமின் தயாரிக்கும் முறை செலவு அதிகம் என்பதால், இயற்கை வேளாண்மையில் உற்பத்தியாகும் மஞ்சளை வாங்கி கலப்படம் இல்லாமல் பொடி செய்து சமையலுக்காகவும், ஹார்லிக்ஸ் போன்ற பானங்களுக்கு மாற்று பானமாக மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து தயாரித்து விற்கிறேன். இந்தப் பொடியைப் பாலில் சேர்த்துக் குடிக்கலாம். சிறுவர்களுக்கு மஞ்சளின் சுவை பிடிக்காது என்பதால் தேங்காய்ப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் செரிவுள்ள பொருளையும் சேர்த்து சுவையைக் கூட்டியுள்ளோம். தரமான மஞ்சளில் தயாரித்த சோப்பும் நல்ல விற்பனை ஆகிறது. நாங்கள் தயாரிக்கும் பொருள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது'' என்கிறார் கிருபாகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com