இப்படியும் சில நல்லவர்கள்!

சென்னை பெரம்பூரில் வடலூர் வள்ளலாரின் பக்தர்களில் ஒருவரான சதீஷே்ராஜ் அடிகளார் என்பவரால் கடந்த 1995 ஆம் ஆண்டு அருள் ஜோதி அன்ன ஆலயம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இப்படியும் சில நல்லவர்கள்!

சென்னை பெரம்பூரில் வடலூர் வள்ளலாரின் பக்தர்களில் ஒருவரான சதீஷே்ராஜ் அடிகளார் என்பவரால் கடந்த 1995 ஆம் ஆண்டு அருள் ஜோதி அன்ன ஆலயம் தொடங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஆதரவற்றோர், முதியோர் என 50 பேருக்காவது இலவசமாக உணவு வழங்கலாமே என்ற எண்ணத்தில் இந்த அமைப்பு உருவாகி இருக்கிறது. இந்த அமைப்பில் இப்போது தினசரி இலவசமாக சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து இப்போது 5 ஆயிரமாக பரந்து விரிந்திருக்கிறது.

காஞ்சிபுரத்தில் தினசரி இலவசமாக உணவு வழங்கி வரும் காஞ்சி அன்னசத்திரம் அமைப்பை பார்வையிட வந்த சென்னை அருள்ஜோதி அன்ன ஆலயத்தின் நிர்வாக அறங்காவலரான ச.தனலெட்சுமி அம்மாளை சந்தித்து பேசினோம்:

""எனது மாமனார் வடலூர் வள்ளலார் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.தினமும் வள்ளலாரின் தொண்டர்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு உணவளித்து மகிழ்வார்.அவருக்கு பின்னால் எனது கணவரும் தொண்டர்களுக்கும்,ஆதரவற்றவர்களுக்கும் தினசரி 50 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வந்தார். இதற்காகவே அருள் ஜோதி அன்ன ஆலயம் என்ற அமைப்பையும் உருவாக்கினார். தொடக்கத்தில் 50 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை தினசரி 5 ஆயிரம் பேராகவும் வளர்ந்துள்ளது.இந்த அமைப்பு உருவாக என் கணவர் தான் ஆணிவேர். என் கணவரின் மறைவுக்குப் பிறகு இந்த அமைப்பை நான் அப்படியே தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

மூன்று வேளையுமே இலவசமாக உணவு வழங்குகிறீர்களா...

சென்னையில் கோயம்பேடு, வியாசர்பாடி, பெரம்பூர், திரு.வி.க.நகர், புரசைவாக்கம், பெரியார் நகர் என மொத்தம் 200 வார்டுகளுக்கு தினசரி நேரில் சென்று ஆதரவற்றவர்களை சந்தித்து இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். காலையில் மிளகு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, வெந்தயம், சீரகம் ஆகியனவற்றால் தயாரிக்கப்பட்ட மூலிகைக்கஞ்சி வழங்குகிறோம். இவற்றோடு மா, நெல்லி, எலுமிச்சை ஏதேனும் ஒரு ஊறுகாயும் சேர்த்து தருகிறோம். இக்கஞ்சி தினசரி 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனை அருந்துவதால் நுரையீரல், கல்லீரல் பிரச்னைகள், சளித் தொல்லைகள் வராது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தினசரி மூலிகைக்கஞ்சி 2 ஆயிரம் பேருக்கு வழங்குகிறோம். இது தவிர கலவை சாதம் 500 பேருக்கு தருகிறோம்.

மதிய நேரத்தில் சாதம், சாம்பார், ரசம், உள்ளிட்ட வாழை இலைச் சாப்பாடு தினசரி 500 பேருக்கும், சுமார் 1500 பேருக்கு கலவை சாதமும் தயாரித்து தருகிறோம். சில நாட்களில் மட்டும் வடை,பாயாசத்துடன் உணவு இருக்கும். தினசரி எங்கள் ஆலயத்துக்கு காலை, மாலை இரு வேளையும் நேரில் வந்தும் 100க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடுகிறார்கள். இரவில் ஆலயத்தில் தங்கி இருப்பவர்கள் 20 பேர் உட்பட மொத்தம் 120 பேருக்கு பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் தயாரித்து கொடுக்கிறோம். மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கடந்த ஒரு வாரமாக எங்களிடம் உணவுப் பொட்டலங்கள் தருமாறு கேட்கிறார்கள். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தினசரி 1000 உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்கி வருகிறோம். எது எப்படி இருந்தாலும் தினசரி 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி விடுவோம்.

உணவை 200 வார்டுகளுக்கும் எப்படி எடுத்துச்சென்று விநியோகம் செய்கிறீர்கள்...

எங்களிடம் சமையல் செய்வதற்கென்றே பெரிய, பெரிய பாத்திரங்களும், பாய்லர்களும், 10 சமையல் காரர்களும் உள்ளனர். சமையல் முடிந்தவுடன் ஆலய பணியாளர்கள் மூலமாக எங்களுக்கு சொந்தமான 2 மினி வேன்கள், மூன்று சக்கர ஆட்டோக்கள் 2 மற்றும் வாடகை ஆட்டோக்கள் 5 மூலம் எடுத்துச் சென்று தினசரி தவறாமல் உணவு வழங்குகிறோம். எங்கள் பணியாளர்களும், ஆலயத் தொண்டர்களும் மழை, வெயில் எதுவும் பாராமல் தினமும் உணவுச் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். சமையல்காரர்கள் 10 பேர், அலுவலகப் பணியாளர்கள் 8 பேர், நன்கொடை பெற்று வருபவர்கள் 6 பேர், ஆலயத்தை சுத்தப்படுத்துபவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என மொத்தம் 48 பேர் மாதச்சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர தினசரி ஆலயத்துக்கு வந்து சேவை செய்து விட்டு செல்பவர்களும் இருக்கிறார்கள்.

செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்..

அமைப்பு தொடங்கப்பட்ட போது மாதம் 3 கிலோ அரிசியும், அரைக்கிலோ பருப்பும் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று அருட்கொடையாளர்களிடம் சொன்னோம்.

இப்போது இந்த உதவியை மாதம் தோறும் 5ஆயிரம் தியாக உள்ளங்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் அருட்கொடையாளர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் அருள்ஜோதி என்ற மாத இதழையும் தபாலில் அனுப்பி வைக்கிறோம். நாங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்து, வியந்து பாராட்டிய பலரும் தமிழகம் முழுவதும் எங்களைப் போல உணவுச் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 10 பேரும், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், நாமக்கல், தஞ்சாவூர், கோயம்புத்தூர் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் பலரும் உணவுச் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். எப்படி சிறப்பாக நடத்துவது என்ற விபரங்களையும் தெளிவாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறோம். அதில் ஒன்று காஞ்சிபுரம் அன்னசத்திரம் அமைப்பாகும்.

இதைத்தவிர வேறு சேவைகள் எதுவும் செய்கிறீர்களா..

சென்னை பழவேற்காட்டில் வசிக்கும் 250 மீனவக் குழந்தைகளுக்கு தனியாக குருகுல பாடசாலை ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதில் 80 சதவிகிதம் குழந்தைகளுக்கு இலவசமாகவும், 20 சதவிகிதம் பேருக்கு குறைந்த கட்டணத்திலும் கல்வி கற்றுத் தருகிறோம்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா..., என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்...

மூத்த மகள் நிவேதிதா ஆடிட்டர் படிப்பையும், மகன் கெளதம் பொறியியலில் பட்டமும் பெற்றவர்கள். இருவரையும் வேறு எந்த வேலைக்கும் போகக்கூடாது என்று நான் சொல்லி விட்டேன்.அதனால் அவர்களும் எனது வேண்டுகோளை ஏற்று எனக்கு உதவியாக இருந்து முழுநேரமும் இலவச உணவுச் சேவையில் தங்களை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு சொல்ல விரும்புவது..

மாமிசம் சாப்பிடுவதால் உடலுக்கு, உயிருக்கு, மனதுக்கு, ஆன்மாவுக்கு கேடாகும். புலால் உண்பதை தயவு செய்து விட்டு விடுங்கள். என்னைப் பொறுத்தவரை யாரும் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதே எனது பணிவான வேண்டுகோள் எனவும் ச.தனலெட்சுமி அம்மாள் தெரிவித்தார்.

""சாதாரண வாழ்க்கை வாழ கொஞ்சம் பணம் போதும். அதுபோக மீதுமுள்ளது கஷ்டப்படுகிறவர்களுக்கானது ..'' என்று சொல்வதுடன் நிற்காமல் வாழ்ந்து காட்டிவருகிறார்கள் ஷினோத் பிந்து தம்பதியர்.

கண்ணகி கோயில் இருக்கும் கேரளத்து கொடுங்கல்லூரில் வாழும் ஷினோத் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் உதவி மேலாளராகப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மனைவி பிந்து, பாரதிய வித்யா பவன் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.

"சிறுவயதில் வீடுகளுக்கு அதிகாலையில் நாளிதழ்களை விநியோகம் செய்து அந்தப் பணத்தில் படித்து வளர்ந்தேன். அந்த அளவுக்கு எனது குடும்பம் வறுமையில் சிக்கியிருந்தது. எனக்குப் பதினாறு வயதாகும் போது அப்பா இறந்துவிட குடும்பப் பொறுப்பு எனது தலையில் இறங்கியது. பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குடும்பத்திற்காக கிடைத்த வேலைகளைச் செய்து சம்பாதித்தேன். ஆனால் படிக்க மறக்கவில்லை. படிப்பு ஒன்றுதான் என்னையும், எனது குடும்பத்தையும் காக்கும்.. உயர்த்தும் என்பதில் முழு நம்பிக்கை இருந்தது.

கல்லூரியில் படித்து முடிந்ததும், காவல்துறையில் வேலை கிடைத்தது. பிறகு ஆசிரியர் வேலைக்கு மனு செய்து தேர்வும் பெற்றேன். ஆசிரியராக வேலை செய்யும் போது ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம் என்பதால் அங்கு வேலையில் சேர்ந்தேன். இந்த வேலைகளில் இருக்கும் போதே சம்பளத்தில் ஒரு பகுதியை கஷ்டப்படுபவர்களுக்காக வழங்கி வந்தேன். பிந்து எனது மனைவியானார். இரண்டு மகன்கள். மகன்களும் நன்றாகக் படித்தார்கள். மூத்தவன் பெங்களூரில் நல்ல வேலை. இரண்டாம் மகன் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கடமை முடிந்துவிட்டது.

இருபதாண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு நாங்கள் வாங்கும் சம்பளம் அதிகமாகத் தோன்றியது. எங்களது குடும்ப செலவுகள் போக கையில் அதிகமாகப் பணம் சேர்ந்தது. எங்கள் வாழ்க்கை முறை சாதாரணமாக அமைந்துவிட்டதும் மாத இறுதியில் பணம் மிஞ்ச காரணமாகியது. அத்தியாவசியங்களுக்கு செலவு செய்ய நாங்கள் தயங்கியதில்லை. ஆனால் ஆடம்பர செலவுக்கு நாங்கள் தயாராகவில்லை.

வீட்டில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும், இரு சிலிண்டர்கள் வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் உதவித் தொகை வழங்குவதில்லை.

காலம் செல்லச் செல்ல சம்பளம் எனக்கும் மனைவிக்கும் கூடியது. அதனால் சேமிப்பும் அதிகமானது. இன்னும் பலரை உதவித் தொகை வலையத்திற்குள் கொண்டு வந்தோம். சம்பளம் அதிகமானதினால் கிடைத்த நிலுவைத் தொகை மூன்று லட்சத்தையும் பிரித்து வழங்கினோம்.

ஒவ்வொருவருக்கும் 500 முதல் ரூபாய் முதல் 2000 வரை மாத உதவித் தொகையாக வழங்கி வருகிறோம். நாங்கள் உதவுவதை ஊர் மக்கள் அறிவார்கள். அது போதும் எங்களுக்கு.இப்போது மாதம் சுமார் 75000 ரூபாய் அளவுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம்.. இந்த உதவிகள் தொடரும்'' என்கிறார் ஷினோத்.

சக்ரவர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com