பல்லவ தேசத்து பயணம் !

""இந்தப் படம் என் சின்ன வயசு கனவு. "அம்புலி மாமா', "முத்து காமிக்ஸ்' படித்து வளர்ந்தவன் நான். அதுவே எழுத்து, இலக்கியம், சினிமா என என் பயணங்களை தீர்மானித்து விட்டது.  இது பல்லவர்களின் பயணம்.
பல்லவ தேசத்து பயணம் !


""இந்தப் படம் என் சின்ன வயசு கனவு. "அம்புலி மாமா', "முத்து காமிக்ஸ்' படித்து வளர்ந்தவன் நான். அதுவே எழுத்து, இலக்கியம், சினிமா என என் பயணங்களை தீர்மானித்து விட்டது.  இது பல்லவர்களின் பயணம். அவர்களைப் பற்றி நான் கண்டடைந்த, வியந்த அனுபவங்களை கொஞ்சம் பலமாக கொண்டு இந்தக் கதையை எழுதி முடித்தேன். இப்போதைய தமிழ் சினிமா சூழலில் ஒரு சூப்பர் மேன் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதை வேறு மாதிரி சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறேன். விறுவிறுப்பும் பரபரப்புமாக படம் வந்திருக்கிறது.'' சிநேகமாகச் சிரிக்கிறார் இயக்குநர் பெருமாள் வரதன். உதவி இயக்குநர், உதவி கேமிராமேன் என பல தளங்களில் பயணித்தவர். இப்போது "நந்திவர்மன்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

பல்லவ தேச பயணத்தில் நீங்கள் கண்டடைந்த அம்சங்கள் என்னென்ன...

கி.மு. 100-ஆம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழ்ந்த  நாடு. கி.மு. 140 - 86 காலம் முதல் அந்நாட்டுடன் வாணிபம் நடந்துள்ளது எனக் காஞ்சிபுரத்தைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கிறார். அதுபோல் கி.பி. 550 - 600 காலத்தில் சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லி அவர்கள், "தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றிருக்கிறார்கள். ஆடவர்கள் அனைவரும் சித்தாந்தம் என்னும் வழிகாட்டி நூலைக் (திருக்குறள்) கற்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

கி.பி. 640-ஆம் ஆண்டில் இந்தியா வந்த யுவான் சுவாங் என்ற சீனப் பயணி அதன் அனுபவங்களை எழுதியிருக்கிறார். கைபர் கணவாய் வழியாக வந்தவர், இங்குள்ள புத்த தலங்களுக்குச் சென்று புத்த மதம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் வந்து தங்கியிருக்கிறார். பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன. பல்லவர்களின் வீரத்துக்கு அடையாளமாகப் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியதை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். சிங்கத்தை நாட்டின் அரசனாகக் கருதுபவர்கள் பல்லவர்கள். பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியதற்கான அடையாளமாகக் கிருஷ்ணர் மண்டபத்தில் நான்கு சிங்கங்கள் அடங்கிய சிற்பங்கள் உள்ளன.சீனாவிலிருந்து யுவான் சுவாங் வந்து சென்றதற்கான அடையாளமாகக் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரியில் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள தூணில் யுவான் சுவாங் சிலை உள்ளது. அவர் வந்ததற்கான கல்வெட்டு ஒன்றும் இருந்துள்ளது. தற்போது அந்தக் கல்வெட்டு எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இப்படி என் பயண அனுபவங்கள் பல... அதையெல்லாம் காத்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கமே இந்தப் படம். 

கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...

இந்திய கலாசார அடையாளங்களுக்கு உலகின் எந்த மூலையிலும் மதிப்பு. வங்கக் கடல் நட்சத்திர ஆமைகள், ஊட்டி தேயிலை, திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருப்பூர் பனியன் என தமிழக தயாரிப்புகள் உலகின் எங்கும் மதிப்பு இருப்பது போல், நம் பழங்கால பொக்கிஷங்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. இங்கிருந்து திருடி, வாங்கி எப்படியாவது அதை தங்கள் நாடுகளுக்கு எடுத்து சென்று விட வெளிநாட்டு தனி மனிதன் முதல் தலைவன் வரை எல்லோருக்கும் ஆசை. அப்படி தமிழக கலாசார பொக்கிஷங்களை அடைய நினைக்கிற ஒரு கும்பலின் கேம் ப்ளான் என்ன ஆனது?   விழுப்புரம் பக்க ஆற்றுப் படுகையில் கிடந்த ராட்சத பாம்பின் படிமங்கள்... கரூர் கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடைத்த சோழர் கால நாணயங்கள்..... திருவாரூர் பக்கம் குக்கிராம ஒன்றில் கிடைத்த புத்தர் சிலைகளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்... செஞ்சி ஆற்றங்கரையில் கிடைத்தது உண்மையிலேயே டைனோசர் முட்டைகள்தானா... கொள்ளிடம் அருகே ஒரே இடத்தில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிக்குள்  என்ன இருந்திருக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு வர இப்போதும் இந்திய வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்... அன்றாட அரசியல் நிகழ்வுகளைத் தவிர்த்து நம் மூளைக்குள் தினந்தோறும் கொலாஜ் ஆகிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை.  அது மாதிரியான ஒரு சராசரி மனிதனின் கேள்விகளே கதை. இதை நம் சம காலத் தமிழ்ச் சூழலில் வைத்து பார்த்தேன்.  அதிலுள்ள முகமூடிகளை எளிமையான சகல மனிதர்களுக்கும் போய் சேர்க்கும் முயற்சியாக கை சேர்ந்திருக்கிறது. 

நடிகர்கள் இன்னும் பளீச்சென இருந்திருக்கலாமோ.... 

நட்சத்திர நடிகர்களுக்காக இந்தக் கதையை நான் யோசிக்கவே இல்லை. எப்போது அழைத்தாலும் அர்ப்பணிப்போடு வந்து நிற்கிற நடிகர்கள் எனக்குத் தேவை.  நடிகர் போஸ் வெங்கட் "கன்னி மாடம் படத்தில் வேலை பார்த்தேன்'. அப்போது இருந்த பழக்கம் அவரை இங்கே கொண்டு வந்து விட்டது. சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ் இவர்கள் எல்லாம் பக்க பலம். அறிமுக இசையமைப்பாளர் ஜெரால்டு, ஒளிப்பதிவுக்கு கனிராஜ் இவர்கள் இருவரும் இன்னொரு பக்க பலம். கைக் கொடுத்து தூக்கி விட்டிருக்கும் தயாரிப்பாளர் அருண்குமாருக்கு ஆயிரம் நன்றிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com