செஸ் ஒலிம்பியாட்: தயாராகிறது மாமல்லபுரம்!

பல்லவர்களின் கண்ணைக் கவரும் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் நகரம்,  உலகின் பிரபலமான செஸ் ஒலிம்பியாட் திருவிழாவுக்கு கோலாகலமாக தயாராகி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்: தயாராகிறது மாமல்லபுரம்!
Updated on
2 min read


பல்லவர்களின் கண்ணைக் கவரும் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் நகரம்,  உலகின் பிரபலமான செஸ் ஒலிம்பியாட் திருவிழாவுக்கு கோலாகலமாக தயாராகி வருகிறது.
பழங்காலத்தில் துறைமுக நகராகத் திகழ்ந்த மாமல்லபுரத்தில்  பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரைக் கோயில்,  அர்ச்சுனன் தபஸ்,  புலிக் குகை,  கலங்கரை விளக்கம் உள்பட பல்வேறு சிற்பங்கள் நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன.  இந்த நினைவுச் சின்னங்களை யுனெஸ்கோவும் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது.
தமிழகத்துக்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண விரும்பும் இடம் மாமல்லபுரம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தைக் காண வருவது வழக்கம்.
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவிலேயே உருவாகி, தற்போது உலகம் முழுவதும் ஆடப்பட்டு வரும் விளையாட்டு செஸ் என்கிற சதுரங்கம்தான்.  ஒலிம்பிக் போட்டியில் செஸ்ஸூக்கு அனுமதி தரப்படாததால், தனியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே)  நடத்தி வருகிறது. 1927-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்தப் போட்டி இந்தியாவில் முதன்முறையாக (44-ஆவது செஸ் ஒலிம்பியாட்) மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.
தமிழக அரசின்  தீவிர முயற்சி: ரஷியாவில் செஸ் ஒலிம்பியாட், போட்டி இருந்தது.  உக்ரைன் மீதான படையெடுப்பால், அங்கிருந்து நீக்கியது ஃபிடே. இதையடுத்து பல்வேறு நாடுகள் கெளரவமிக்க இப்போட்டியை நடத்த போட்டி போட்டன.  அகில இந்திய செஸ் சம்மேளனமும், முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உதவியுடனும்  இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டது.  
"இந்திய செஸ்ஸின் மெக்கா' எனப்படும் சென்னையில் இந்தப் போட்டியை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வந்தார். தமிழக அரசே போட்டிக்கான பிரதான ஸ்பான்ஸராக இருக்கும் என உறுதி கூறினார். இதையடுத்து ஃபிடே அமைப்பு போட்டியை நடத்தும் இடமாக சென்னை அறிவித்தது.
ரூ.92.13 கோடி ஒதுக்கீடு: இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை உடனே ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தனியாக இலச்சினை (லோகோ) மாஸ்காட், போன்றவையும் அறிமுகம் செய்யப்பட்டன. முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டுக்காக ஜோதி தொடர் ஓட்டமும் (டார்ச் ரிலே) இந்தியா முழுவதும் 75 நகரங்களில் நடைபெறுகிறது. புது தில்லியில் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சாதனை பங்கேற்பு: செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்கு தான் 187 அணிகள் ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.  இது ஒரு புதிய சாதனை பங்கேற்பாகும். அதிகபட்சமாக ரஷியா இதில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியா 2020-இல் ஆன்லைனில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றது.  இந்தப் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் உள்பட பல்வேறு பிரபல அயல்நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்திய அணிகள்: விஸ்வநாதன் ஆனந்த்,  போரிஸ் ஜெல்பான்ட்,  ஆர்.பி. ரமேஷ், அபிஜித் குந்தே ஆகியோர் பயிற்சியில் இந்தியா சார்பில் 3 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆடவர் பிரிவில் பிரதான அணியில் விதித் குஜராத்தி, பென்டால ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எல்.நாராயணன், சசிகிரண், பி 
அணியில் நிகால் ஸரின், டி.குகேஷ், 
பி.அதிபன், பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானியும் ஆடுகின்றனர். மகளிர் பிரதான அணியில் ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தனியா சச்தேவ், பக்தி குல்கர்னியும், பி அணியில் வந்திதா அகர்வால், செளமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரெளத், திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோர் தங்கள் திறமையை நிருபிக்க உள்ளனர்.
52,000 சதுர அடியில் அரங்கம்: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சிறப்பு அலுவலரை நியமித்துள்ளது தமிழக அரசு. மாமல்லபுரத்தை மேலும் அழகுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூஞ்சேரியில் 52,000 சதுர அடியில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் மாமல்லபுரமும் அழகுபடுத்தப்படுகிறது.
பார்வையாளர் கட்டணம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டுக்கு வரும் பார்வையாளர்களுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏ.ஐ.சி.எஃப்.) கட்டணம் நிர்ணயித்துள்ளது. எனினும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை. குறைந்தபட்சமாக ரூ.200-ம், அதிகபட்சமாக ரூ.8,000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
பள்ளிகளிலும் செஸ் போட்டி: மிகப் பெரிய செஸ் திருவிழா நடைபெறும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு, மாநகராட்சி,  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியர் மத்தியில் செஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 
ஒலிம்பியாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில், மாணவ, மாணவியருக்கு செஸ் விளையாட்டு குறித்து பயிற்சி தர ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் செஸ் கிளப்,  சங்கங்கள் மூலம் பயிற்சி தரப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயில்வோருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் வெற்றி பெறுவோரை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்று நட்சத்திர வீரர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பங்கேற்பு: செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக,  ஜூலை 28-இல் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருகிறார்.
மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றாலும், தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, போட்டிகளைத் தொடக்கி
வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com