மறக்க முடியாத சேர்ந்திசை அனுபவம்!

கார்குழலி வித்தியாசமானவர்; எழுத்தாளர், சேர்ந்திசைக் குழுவில் பாடகி, பன்னாட்டு நிறுவன மேலாளர் என்று தனித்திறன்களைக் கொண்டவர்.
மறக்க முடியாத சேர்ந்திசை அனுபவம்!


கார்குழலி வித்தியாசமானவர்; எழுத்தாளர், சேர்ந்திசைக் குழுவில் பாடகி, பன்னாட்டு நிறுவன மேலாளர் என்று தனித்திறன்களைக் கொண்டவர். இவர் தன்னுடைய முத்திரையை அழுத்தம் திருத்தமாகப் பதித்து, வெற்றியாளராக வலம் வருகிறார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர்கள் அய்யாசாமி- சுபத்ரா தம்பதியின் மகள் கார்குழலி. சென்னை வேளச்சேரியில் தனது கணவர் ஸ்ரீதர், இரு மகள்களோடு வசித்துவருகிறார்.

அவரிடம் பேசுவோம்:

எழுத்து ஆர்வம் எப்படி உருவானது?

சிறுவயதிலேயே பெற்றோரின் ஊக்கம் கிடைத்ததால் எழுத்து, பேச்சுப் போட்டிகளில் ஆர்வமாகப் பங்கேற்றேன். அப்பா அய்யாசாமி எழுத்தாளர் என்பதால், தமிழ், ஆங்கில மொழி இலக்கியங்களில் ஆர்வம் பிறந்தது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் படித்தபோதே பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றேன். கல்லூரியில் படிக்கும்போதே அகில இந்திய வானொலியில் இளைஞர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஹைதராபாதில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றேன்.

பணிக்கு இடையே எழுத்துப் பணியும்... எவ்வாறு முடிகிறது?

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அகில இந்திய வானொலியில் இளைஞர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்றினேன். அம்புலிமாமாவின் ஆங்கிலப் பதிப்பான சந்தமாமாவின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினேன். குழந்தைகளுக்கும் இளம்சிறார்களுக்கும் கதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை, விளையாட்டு எனப் பல படைப்புகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தமிழக வரலாறு குறித்து சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர் கட்டுரை எழுதினேன். அந்த நேரத்தில் இலங்கை வீரகேசரி நாளிதழில் சந்தமாமாவின் கதை, கட்டுரை போன்றவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக் கேட்டனர். சுனாமியில் ஈடுபட்ட களப்பணியாளர்களுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் கையேடுகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடநூல் பதிப்பகங்கள், ஆசிரியர்களுடன் இணைந்து பாடப் புத்தகங்களை எழுதினேன்.
மின்வழிக்கற்றல் தொடர்பான வேலைகளுக்கு அழைப்பு கிடைத்து. பயிற்சியும் வேலைவாய்ப்பும் உருவானது. இந்தப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாகப் பணி.
எழுத்தோடு சேர்ந்த பணியாகவே அமைந்தது. பிற பணிகள் கிடைத்தாலும், எழுதுவதைக் கைவிடவில்லை.

பெண்ணாக இருப்பதால், குடும்பத்தாரின் ஆதரவு எப்படி?

எனது எழுத்து ஆர்வத்துக்குப் பெற்றோரும் ஊக்கப்படுத்தினர். திருமணத்துக்குப் பின்னர், வர்த்தகத்தில் ஈடுபடும் கணவர் ஸ்ரீதர் எனது பணிகளுக்கு உற்சாகம் ஊட்டுகிறார்.

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சொல்ல முடியுமா?

பல்வேறு பதிப்பகங்களின் தமிழ் மொழி பெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான குழந்தைகள் புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன். தமிழக அரசின் சமூக நலத் துறை, உலக சுகாதார நிறுவனம், சேவ் தி சில்ட்ரன், பன்னாட்டு எய்ட்ஸ் தடுப்பு மருந்து முன்னெடுப்பு, துளிர் - குழந்தைப் பாலியல் வன்முறைத் தடுப்பு போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

"கனலி' வெளியிட்டிருக்கும் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளில் மொழியாக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மற்ற சாதனைகள்..?

இளம்வயதில் இசைப்பயிற்சி பெற்று இசையில் ஆர்வம் இருந்ததால் சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவில் இணைந்தேன். இசையமைப்பாளர் அமரர் எம்.பி. சீனிவாசன் சேர்ந்திசை அமைத்த பாடல்களைக் கற்றுக்கொண்டு குழுவுடன் இணைந்து, நாடு முழுவதும் பல இடங்களில் பாடியிருக்கிறேன்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி,யின் புகழ்பெற்ற கென்னடி சென்டர் என்பது கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கிய அரங்கம். 30 நாடுகளில் இருந்து வந்த சேர்ந்திசைக் குழுவினருடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாதது. இந்தியாவில் இருந்து 30 பேர் ஒரு வாரம் நடந்த இசை நிகழ்ச்சியில் உலக அளவில் பன்னாட்டுக் குழுக்களுக்கான சேர்ந்திசையில் பங்கேற்றோம்.

எதிர்கால லட்சியம்..?

2019-ஆம் ஆண்டு முதல் கவிதைகளிலும் கவனம் செலுத்திய எனக்கு சமூக ஊடகமான முகநூல் வரப்பிரசாதமாக அமைந்தது. இங்கு கிடைத்த பாராட்டால் ஊக்கம் பெற்று கதை, கட்டுரை, தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எனக் கேட்டனர். பல தமிழ் இலக்கிய மின்னிதழ்கள், பத்திரிகைகளில் என்னுடைய கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புக் கதைகள் இடம்பெற்றன. புகழ்பெற்ற மூத்த கவிஞர்கள் தொகுத்த பலபுத்தகங்களில் எனது கவிதைகளும் இடம்பெற்றது பெருமையாக இருந்தது.

ஐ.பி.எம். நிறுவனத்தின் கற்றல் மேம்பாட்டுப் பிரிவு உதவி மேலாளர் பொறுப்பில் இருந்தேன். இப்போது காக்னிஸன்ட் நிறுவன மின்வெளிக் கற்றல் பிரிவு மேலாளராகப் பொறுப்பு வகிக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com