பிரெஞ்சு இந்தியத் தலைநகர்: புதுச்சேரி உருவான கதை!

இந்தியாவின் இயற்கை வளங்களைக் கேள்வியுற்ற மேலைநாட்டவர்கள் மாதக் கணக்கில் கடலில் பயணித்து, தேடி வந்தனர். முதன்முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள்.
பிரெஞ்சு இந்தியத் தலைநகர்: புதுச்சேரி உருவான கதை!


இந்தியாவின் இயற்கை வளங்களைக் கேள்வியுற்ற மேலைநாட்டவர்கள் மாதக் கணக்கில் கடலில் பயணித்து, தேடி வந்தனர். முதன்முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள். அவர்களது காலனி தலைநகரம் கோவா. அடுத்து வந்தவர்கள் டச்சுக்காரர்கள். அவர்களது தலைநகரம் தரங்கம்பாடி.

மூன்றாவது வந்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அவர்களது தலைநகரம் புதுச்சேரி. கடைசியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களது தலைநகரம் கொல்கத்தா. கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதல் பிரெஞ்சு ஆளுநராக ஆட்சி செய்தவர் பிரான்சுவா மர்த்தேன். புதுச்சேரி நகரை உருவாக்கியது அவர்தான்.

இந்தியக் கடலோர உப்பளங்களில் அபரிதமாக உப்பு விளைந்தது. உள்நாட்டில் மிளகு, சீரகம் போன்ற வாசனை திரவியங்கள் உற்பத்தியாகின. பெரும்பாலும் உப்பு, வாசனைத் திரவியங்களை மேலை நாட்டவர்கள் அவர்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர். பாய்மரக் கப்பல்களில் மூட்டை, மூட்டையாக ஏற்றிக் கொண்டு சென்றனர்.

அப்படி இந்தியாவுக்கு வந்தவர்கள் இந்திய மண்ணை ஆக்கிரமித்து ஆட்சிக்கு அடித்தளமிட்டனர். பிரெஞ்சு காலனியை உண்டாக்கிய முன்னோடிகளில் ஒருவர் பிரான்சுவா கரோன். அவர்களுடைய வணிக மையங்கள் சூரத், மசூலிப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன.

1674-ஆம் ஆண்டில் பிரான்ஸ்சுவா மர்த்தேன் புதுச்சேரியில் ஒரு வணிக மையத்தை உண்டாக்கினார்.

முதலில் அவர் 200 ஐரோப்பிய சிப்பாய்களை தன்னுடைய பாதுகாப்புக்காக அமர்த்தினார். அடுத்து ஒரு கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டையின் பெயர் புர்லாங்.

1693-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் அந்தக் கோட்டையை அழித்துவிட்டனர். பிரான்சுவா மார்த்தேன் தன்னுடைய தலைநகரை உருவாக்க முயற்சி செய்தார். புதியதாக எண்கோண வடிவில் கோட்டையைக் கட்டினார்.

இதற்கு தக்காணத்தை ஆண்ட முஜாபர் ஜங் இடமிருந்து இந்தக் கோட்டையைக் கட்ட அனுமதி பெற்றார்.

புதுச்சேரி நகர அமைப்புக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த பிரெஞ்சு என்ஜினியர் லா மேரஸ் முதல் வேலையாக அவர் புதுச்சேரி நகரை இரு பாகமாகப் பிரித்தார். அதற்கு வடக்கு தெற்காகப் பெரிய வாய்க்கால் வெட்டி, அதனுடைய கிழக்குப் பகுதி கடற்கரை வரையில் ஆங்கிலேயக் குடியிருப்புக்குப் பிரித்த பகுதி. அது ஒயிட் டவுன். மேற்குப் பகுதி உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

சாலைகள் அனைத்தும் வளைவுகள் இல்லாமல், நேர்கோடாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தெருவும் மற்றவைக்கு இணையாக இருக்கும்.

தமிழர் வாழ்ந்த பகுதியில் இருந்த கோயில் குளங்கள் ஒன்றுக்கும் ஒரு தீங்கும் ஏற்படக் கூடாது என்று ஆணையிட்டார். நகர அமைப்புப் பணிகள் முடிந்தவுடன், இங்கு ஒரு வரலாற்றுக் குறிப்பை சொல்ல வேண்டும். ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆட்சி செய்தவர் ஹைதர் அலி. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் அவருடைய மகன் திப்பு சுல்தான். இவர்கள் ஆங்கிலேயருக்குப் பரம எதிரி. திப்பு சுல்தான் போரில் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்று இறந்தார்.

அந்தக் குடிமக்கள் பெரும்பாலும் முகம்மதியர்கள். அவர்கள் ஆங்கிலேயரின் அராஜகத்துக்குப் பயந்து குடிபெயர்ந்து புதுச்சேரியை நோக்கி வந்தார்கள். ஆளுநரிடம் புகலிடம் கேட்டனர். ஆளுநர் எளிதில் உத்தரவு அளிக்கவில்லை. கோட்டைக்கு வெளியே தங்கிக்கொள்ள உத்தரவு அளித்தார். அதுவே இன்று கோட்டைகுப்பம் என்றாகிவிட்டது. அவர்களுக்குத் தேவையான மசூதிகளைக் கட்டிக் கொண்டு, அங்கேயே குடி அமர்ந்தனர். புதுச்சேரி நகரத்தின் மேல் பயணிகள் விமானம் பறக்கும்போது எல்லாம் புதுச்சேரி நகர அமைப்பைப் பார்த்து வியந்து போயினர்.

இந்தக் கோட்டை பிரான்ஸின் துர்னெய் கோட்டையின் மறுபதிப்பாக புதுச்சேரியில் கட்டி முடித்தார். கோட்டையின் நடுவில் அழகிய ஆளுநர் மாளிகை அதற்கு தெற்காக அழகிய பூங்கா. பூங்காவின் நடுவில் ஆயிமண்டபம். புதுவை நகருக்குத் தண்ணீர் கொடுத்த புண்ணியவதி தாசி ஆயி. அதற்கு நன்றியாக பூங்காவின் நடுவில் ஆயி மண்டபம் கட்டினார். அந்தப் பூங்காவில் போகைன்வில்லா பூச்செடிகளை நட்டு வைத்தார். வசந்தக் காலங்களில் அந்த மரங்கள் பூத்துக் குலுங்குவதைக் காணலாம். இதுபோன்ற காட்சி வேறெங்கும் கிடையாது.

இவ்வாறாக, புதுச்சேரி நகரமும் கோட்டையும் கட்டி முடித்தவுடன் தொடக்க விழா ஏற்பாடுகளை ஆளுநர் செய்தார். 1760-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-இல் அய்யர்களை வைத்து, பூஜை செய்து உள்ளூர்வாசிகள் கூடி வர மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. அது அவருடைய வாழ்க்கையில் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அண்டை மாநிலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேய அலுவலர்கள் புதுவை ஆளுநரை 30 ஆண்டுகளுக்கு இவ்வளவு பெரிய சாதனையா! என்று பாராட்டினார்கள்.

ஆளுநர் பிரான்சுவா மர்த்தேனின்வாழ்க்கை வரலாறு 

1634-ஆம் ஆண்டில் பாரீஸில் மளிகைக்கடைக்காரரின் மகனாய் பிரான்சுவா மர்த்தேன் பிறந்தார். அவருடைய தந்தை இறந்துவிடவே, குடும்பத்தை அண்ணன் நடத்திவந்தார். ""வீணாக ஊர் சுற்றாதே. ஏதாவது வேலைக்குச் சென்று சம்பாதி'' என்று அண்ணன் சொல்லவே, மளிகைக் கடையில் வேலைக்கு பிரான்சுவா மர்த்தேன் சேர்ந்தார். அவர் எதிர்பாராத விதமாக மீனவப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதைக் கேள்விப்பட்ட அந்தக் கடைக்காரர் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்.

காதல் மனைவியுடன் பிரான்சுவா மர்த்தேன் இந்தியாவுக்கு வந்த கப்பலில் ஏறி வந்தார். புதுச்சேரியை உருவாக்கும் பணியில் இருந்ததால், குடும்பத்தை மறந்துவிட்டார். ஆளுநர் மாளிகையில் குடியேறிய நாளன்று தன் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறார்.

பாரீஸில் உள்ள தன் உயர் அலுவலர்களுக்கு கடிதம் எழுதி, மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரினார். அவர்கள் ஆளுநரின் மனைவியையும், மகளையும் கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

கடைசியில் ஆளுநர் தன் குடும்பத்தோடு அந்த மாளிகையில் 4 ஆண்டுகள் வாழ்ந்தார். 1706-ஆம் ஆண்டு டிசம்பர் 30-இல் தனது 70-ஆவது வயதில் அவர் மரணம் அடைந்தார்.

புதுச்சேரி மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஆளுநர் இறந்துவிட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

துரதிஷ்டவசமாக அடிக்கடி நடைபெற்ற போர்களால் கல்லறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மக்களுக்குப் பெரிதும் ஏமாற்றம்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com