மூன்று மொழிகளில் துல்கர்
By DIN | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 31st July 2022 06:00 AM | அ+அ அ- |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் படம் "சீதா ராமம்'. துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, சுமந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இதன் ட்ரெயலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் துல்கர் சல்மான் பேசும்போது.... ""நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இது போன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 கால கட்டத்திய அனுபவங்கள் மிகச் சிறப்பாக படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு கடித இலக்கியம், கடிதம் எழுதுவது என்பதே புரியாத விஷயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை. இயக்குநர் எல்லா கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் இயக்குநரின் கற்பனையை படைப்பாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினோம். "சீதா ராமம்' தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன்'' என்றார்.
இதனிடையே "போரூற்றி எழுதிய காதல் கவிதை' எனும் துணைத் தலைப்புடன் வெளியாக இருக்கும் இந்த "சீதா ராமம்' படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார், பி. எஸ். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.