கொச்சி டூ காஷ்மீர் லாரி ஓட்டிய பெண்!
By பிஸ்மி பரிணாமன் | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 31st July 2022 06:00 AM | அ+அ அ- |

கொச்சியிலிருந்து சரக்குடன் கூடிய லாரியை காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரம் லாரியை ஓட்டிச் சென்று வந்துள்ளார் ஜலஜா (40).
இதுகுறித்து கேரள மாநிலம், கொச்சி - கோட்டயம் சாலையில் ஏற்றுமானூரைச் சேர்ந்த அவர் கூறியதாவது:
""வாகனங்களை ஓட்டுவது லட்சியமாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகுதான் பழகினேன். மும்பைக்கு லாரியில் கணவர் ரத்தீஷுடன் பலமுறை லாரியை ஓட்டிச் சென்று திரும்பியுள்ளேன். கேரளத்துக்குள் லாரி ஓட்டியிருக்கிறேன். பிறகு புணேவுக்கும் சென்று வந்திருக்கிறேன். அந்தத் தைரியத்தில் காஷ்மீர் போக முடிவு செய்தேன்.
கொச்சியிலிருந்து பிளைவுட் பலகைகளை ஏற்றிச் சென்று புணேவில் சேர்த்துவிட்டு, அங்கிருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஸ்ரீநகர் சென்று ஒப்படைத்துவிட்டு காஷ்மீரைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவதுதான் பயணத் திட்டம்.
என்னைத் தனியாக அனுப்ப கணவர் ரத்தீஷிற்கு விருப்பம் இல்லை. "ஒன்றாகப் போகலாம்' என்றார். "அடுத்த முறை காஷ்மீர் வரை தனியாக லாரியை ஓட்டிச் சென்று திரும்புவேன்' என்பதை அவரும் ஏற்றுக் கொண்டார். அதனால் கணவர், எங்கள் உறவினர் என மூவர் பயணத்தைத் தொடங்கினோம். லாரியை மாறி மாறி ஒட்டினோம்.
இரவு நேரத்தில் பாதுகாப்பான இடங்களில் லாரியை நிறுத்தி, உறங்குவோம். எங்களது பயண விவரங்களைப் பயணச் செய்தியாக "யூ டியூப்' வாயிலாகப் பதிவு செய்து கொண்டே வந்தேன்.
வழியில் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்த இடங்களை நேரில் கண்டோம். உயரமான லாரியில் வழியோரக் காட்சிகளை நன்றாகப் பார்த்து, ரசித்தோம்.
எங்களது பயணம் கர்நாடகம், மகாராஷ்டிரம் , மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைய வேண்டும். நான் லாரியை ஓட்டும் போது எங்கள் லாரியைக் கடந்து செல்லும் ஆண் ஓட்டுநர்களும், வழியில் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
புணே சென்றதும் நாங்கள் ஏற்றிச் சென்ற பிளைவுட் பலகைகளை இறக்கிவிட்டு வெங்காய மூட்டைகளை ஏற்றினார்கள். அடுத்த நாள் எங்கள் பயணம் காஷ்மீரை நோக்கி நகர்ந்தது.
காஷ்மீர் பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் பனி மூடிய குல்மார்க் சென்று வந்ததுதான். பஞ்சாபின் பச்சை வயல்களும் அபாரம்.
திரும்ப வரும்போது, ஹரியாணாவிலிருந்து சரக்குகளை பெங்களூருவுக்குக் கொண்டு வந்தோம். கொச்சியிலிருந்து காஷ்மீர் சென்று திரும்ப 23 நாள்கள் பிடித்தன. குடும்பத்துடன் திரிபுரா லாரியில் செல்லவேண்டும் என்ற பயணத் திட்டம் உள்ளது. கொச்சியிலிருந்து லாரியை கிளீனருடன் காஷ்மீர் வரை தனியாக ஓட்டிச் சென்று திரும்ப வேண்டும் என்பதே லட்சியம்'' என்கிறார் ஜலஜா.