உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள்!
By சக்ரவர்த்தி | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 31st July 2022 06:00 AM | அ+அ அ- |

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், உலக அளவில் நான்காவது பெரும் பணக்காரராகும் பெருமை கௌதம் அதானியை வந்தடைந்துள்ளது.
"போர்ப்ஸ்' பத்திரிகை உலக நாடுகள் அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க். அவர் 230 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளின் உரிமையாளர்.
இரண்டாவது பெரும் பணக்காரராக லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டும், மூன்றாவது பெரும் பணக்காரராக அமேசான் வணிக நிறுவனத்தின் ஜெப்பெசோஸூம் கணிக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது பெரும் பணக்காரராக, அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி இடம்பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 114 பில்லியன் டாலர்களாம்!
கடந்த பிப்ரவரியில் நடந்த கணிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி "ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்' என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.
அதானியின் சொத்து பாதிப்பு கூடியிருப்பதால், அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி தற்போது கௌதம் அதானி "ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்' என்ற இடத்தைப் பெற்றதுடன் உலகப் பணக்காரர் பட்டியலில் 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
"அதானி குழுமம்' இந்தியாவின் முன்னணி 3 தொழில் கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மின் சக்தி, துறைமுகங்கள் தளவாடங்கள், சுரங்கம், கனிம வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் 197.49 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒருங்கிணைந்த சந்தை மூல தனத்துடன் இயங்குகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்கள் அதானி குழுமத்துக்குச் சொந்தம்.
இந்தியாவின் பெரும் பணக்காரப் பெண்மணி சாவித்திரி ஜிண்டால். உலக பெரும்பணக்கார்கள் பட்டியலில் சாவித்திரி ஜிண்டால் 91-ஆவது இடத்தில் உள்ளார். சாவித்திரியின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் 2005-இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறக்க, சாவித்திரி நிறுவனங்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அரசியலிலும் ஈடுபட்டார். இவரது சொத்தின் மதிப்பு சுமார் 18 பில்லியன் டாலர்கள். சாவித்திரி ஜிண்டால் உலகின் பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
"நிக்கா' அழகுச் சாதன நிறுவனத் தலைவர் ஃபல்குனி நய்யார், "யுஎஸ்வி' மருந்து நிறுவனத் தலைவர் லீனா திவாரி, "பயோகான்' மருந்து நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் உள்ளிட்டோர் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர்.