சமவெளியிலும் பயிராகும் மிளகு ரகங்கள்

மிளகு ரகங்களை சமவெளிப் பகுதிகளில்  பயிரிடும் வகையில் புதிய மிளகு ரகத்தையும் உற்பத்தி செய்து, வேளாண் பெண் விஞ்ஞானி லட்சுமி அசத்தியுள்ளார்.
சமவெளியிலும் பயிராகும் மிளகு ரகங்கள்

மிளகு ரகங்களை சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் புதிய மிளகு ரகத்தையும் உற்பத்தி செய்து, வேளாண் பெண் விஞ்ஞானி லட்சுமி அசத்தியுள்ளார்.

புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி லட்சுமி. தோட்டப் பயிர்களில் பல உயர்ரகங்களைக் கண்டறிந்துவரும் இவர், நவீன வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக, அவரின் தந்தையும் பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் அறிஞருமான வெங்கடபதியும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

சமவெளிப்பகுதிகளில் கொடியாகவும், செடியாகவும் அதிக மகசூல் தரும் புதிய மிளகு ரகத்தைக் கண்டறிந்து, அனைத்துப் பருவங்களிலும் பயிரிடும் வகையில் லட்சுமி அறிமுகம் செய்துள்ளார். இதற்காக, கூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில், புதிய மிளகு ரகங்களை பதியம்போட்டுள்ள லட்சுமி கூறியதாவது:

புதிய மிளகு பயிரிடுவதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள 43,560 சதுரடி இடத்தில், 5-க்கு 5 சதுர அடி இடைவெளியில் 1,742 கன்றுகள் வரை நடலாம். இதற்கான செடிகளை பதியன்போட, அறிவியல் பூர்வமாக டிரேவில் மிளகு கொடியை துண்டாக்கி நிரப்பி தேர்வு செய்த குச்சிகளை, தொற்று நீக்கி ஒவ்வொரு குச்சிகளாக நடப்படும். இந்த பதியன்களை பணியறையில் வைத்து 50 நாள்கள் பராமரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே இதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நோயற்ற கன்றுகள் முளைக்கும். இந்தக் கன்றுகள் 4 மாதங்களில் நன்கு வளர்ந்ததும், நிலத்தில் நடவு செய்யலாம்.

மலைப்பிரதேச சூழ்நிலை ஏற்படும் வகையில், சமவெளியில் மிளகு நடவு செய்யும் நிலங்களின் மண்ணின் தன்மையை பி.எச். அளவு 6, 6.5 என்ற அளவில் மாற்ற வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 3 டன் அளவில் ஜிப்சம் உரமிட்டு உழுது மண் வளத்தை மாற்ற வேண்டும். இதனையடுத்து, 5-க்கு5 சதுர அடி அளவு இடைவெளியில் நிலங்களில் கிளிரேயா அல்லது சூடுகுச்சி, அகத்தி, மலைவேம்பு ஆகிய செடிகளை 5 அடி உயரத்துக்கு வளர்க்க வேண்டும். இதனையடுத்து, நமது புதிய மிளகு ரக கன்றுகளை அதில் வளரச்செய்ய வேண்டும். கோடை காலம் தவிர பிற எந்தப் பருவத்திலும், நமது புதிய மிளகு செடிகளை நடவு செய்யலாம்.

குறுகிய காலத்தில் அறுவடை: மழைக்காலத்தின்போது, மண்ணின் பி.எச். அளவு குறைவதால், அப்போது மட்டுமே நடவு செய்கின்றனர். புதிய மிளகு ரகத்தில் கொடி வளர்ந்து ஒன்றரை ஆண்டில் காய் பிடித்து அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு 1 கிலோ அளவில் மிளகு கிடைக்கும். 5 ஆண்டுகள் வளர்ந்த பின்னர் 5 கிலோ அளவில் காய்ந்த மிளகு கிடைக்கும். தொடர்ந்து 10 கிலோ அளவில் அது உயரும். மிளகு கொடியில் மழைக்காலத்துக்கு முன்பும், பின்பும் தொற்று வராமல் இருப்பதற்கு இயற்கை உரமிட வேண்டும். அதற்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 40 கிலோ கடலை பிண்ணாக்கு, யூரியா, சூப்பர் பாஸ்பேட் சிறிதளவு, 20 கிராம் பொட்டாஷ் ஆகியவையுடன், ஒரு செடிக்கு 5 கிலா மக்கிய சாண எரு இடவேண்டும். ஒரு செடிக்கு 2 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால், சமவெளி பகுதிகளிலும் மிளகு நன்கு வளரும். இந்தச் செடிகளுக்கு இலை வழியாக நுண்ணூட்டச் சத்துகளை வழங்க வேண்டும். அதிகபட்சம் 12 அடி உயரம் வளர்த்தால் போதும். கீழே இருந்து மிளகை அறுவடை செய்யலாம். இந்த கொடிகள், கிளைகளாக பரவாமல் ஒரே நேராக வளர்ந்து செல்வதால் கொத்துக்கொத்தாக அதிக காய்கள் பிடிக்கும். செடியின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரை காய்கள் இருக்கும். ஒரு கிலோ பச்சை மிளகை அறுவடை செய்து காய வைத்தால் 300 கிராம் காய்ந்த மிளகு கிடைக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தில், அறுவடைக்கான 40 சதவீதம் செலவை குறைக்க முடியும்.

கொடி மிளகு, செடி மிளகு, புதிய இனங்கள்: திக்கன் மிளகு, இந்த இனம் கொத்துக்கொத்தாக காய்க்கும் ரகம். ஒரு கொத்தில் 1,800 மிளகுகள் வரை இருக்கும். அதிக மகசூல் வழங்கும் புதிய இனமாகும். மற்றொரு புதிய ரகத்தில் (3-30 செ.மீ.ரகம்) இதில், 1 கிலோ பச்சை மிளகை காய வைத்தால் அரை கிலோ மிளகு கிடைக்கும் நல்ல ரகமாகும். புதிய ரகங்களுக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

இதுமட்டுமின்றி செடி மிளகையும் புதிய ரகமாகக் கண்டறிந்து வளர்த்து வருகிறோம். பழைய மிளகு கொடிகளில் வீரியமிக்க கிளைகளை எடுத்து, அதனை துண்டாக்கி பதியம் செய்து, செடிகளை உற்பத்தி செய்கிறோம். 5 மாதங்கள் பதியம்போட்டு, பிறகு அதனை எடுத்து 4க்கு4 சதுரடி இடைவெளியில் செடிகளை நடவு செய்து, மிளகு செடியை வளர்க்கிறோம்.

இதில், ஒரு ஏக்கரில் 2,700 செடிகளை நடவு செய்யலாம். அதிகபட்சம் 5 அடி உயரத்திலேயே இந்தச் செடிகள் வளர்ந்து காய் காய்க்கும். இந்த மிளகு செடிகள் ஆண்டு முழுவதும் காய் காய்க்கும் திறனுடையது. ஒரு செடி நடவு செய்த 6 மாதங்களில் காய் காய்க்கத் தொடங்கும். 3 வது ஆண்டில் ஒன்றரை கிலோவில் தொடங்கி 3 கிலோ வரை மிளகு காய்க்காய்க்கும். தொடர்ந்து, அறிவியல் பூர்வமாக விவசாயம் செய்து வந்தால் 15 ஆண்டுகள் வரை, அதில் அறுவடை செய்ய முடியும்.

சதுப்பு நிலங்களிலும் மிளகை வளர்க்கலாம்: பொதுவாக மிளகு செடி, கொடிகள், நீர் தேங்கும் பகுதியில் நடவு செய்தால் வேர் அழுகல் ஏற்பட்டு செடி அழுகிவிடும். இதனைத் தடுக்க, தண்ணீரிலும் நிலைத்து நிற்கும் பிற செடியில், இந்த மிளகு செடியை ஒட்டுக் கட்டி வளர்ப்பதால், எவ்வித பாதிப்புமின்றி மிளகு சாகுபடி செய்ய முடியும். காட்டு திப்பிலி செடி ஒயிட் ரகம், மிளகு குடும்பத்தைச் சேர்ந்தது, அதன் வேர் நிலையானது. அதனுடன் மிளகு செடியை ஒட்டுச் செடி வளர்க்கலாம்.

இந்தச் செடிகள் கார அமிலம் உள்ள நிலங்களிலும் நன்கு வளரும், 30 ஆண்டுகள் வரை இருக்கும். வேர்களிலும் நோய் தாக்கம் இருக்காது. இதனால், அதில் ஒட்டுக் கட்டி மிளகை வளர்க்கலாம்.

ஆண்டுக்கு ஏக்கருக்கு 8.5 டன் அளவில் மிளகு உற்பத்தி செய்யலாம். உலக அளவில் மிளகு உற்பத்தியில் வியத்நாம்தான், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னிலை வகிக்கிறது.

நமது நாட்டில் மிளகு உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தைக் கையாண்டு, முதலிடத்தைப்பெற முடியும். அதற்காக புதிய ரகத்தை வழங்கி, இலவசமாகவும் பயிற்சி அளிக்கத் தயார்'' என்றார் லட்சுமி.

மலைப்பிரதேசத்தில்...: குளிர்ந்த மலைப்பிரதேசங்களில், கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் மட்டுமே மிளகு பயிரிடப்படுகிறது. அதற்கு தகுந்த அசிட்டிக் அமில மண் (5 முதல் 6 பி.எச். அளவு) இருப்பதால் நல்ல விளைச்சல் உள்ளது. கேரள அரசு திசு வளர்ப்பு முறையில் நோயற்ற செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. உயரமான தென்னை, ரப்பர் மரங்களில் மிளகு கொடிகளை ஏற்றி வளர்க்கின்றனர்.

இத்தகைய மிளகு இனங்கள் 150 வகைகள் உள்ளன. கேரளாவில் கரிமுண்டா, பன்னியூர் ரகம் உள்ளிட்ட 9 வகை மிளகு பயிரிடுகின்றனர். கரிமுண்டா மிளகு அளவில் பெரிதாகவும், காரத்துடன் இருக்கும். ஏற்றுமதிக்கு உகந்தவையாகும். பன்னியூர் இன மிளகு ரகங்கள் அதிகம் மகசூல் தருவதாக இருக்கும். இந்தச் செடிகளிலும் வேர் அழுகல், மாவுப்பூச்சி போன்ற பாதிப்புகள் உண்டு. மழைக்காலத்தில் இந்த நோய் தாக்குதல் தொடங்கி செடியை அழித்துவிடும்.

இந்த வகையில், மலைப்பகுதிகளில் மிளகு வகைகள் உயர்ந்த மரங்களில் ஏற்றிவிடப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும்போது அறுவடை செய்கின்றனர். ஒரு ஏக்கரில் 800 மரங்கள் வரை வைத்து கொடியேற்றிவிடுகின்றனர். செடிகள் நட்ட 7 ஆண்டுகளில் ஒரு டன் அளவில் காய்ந்த மிளகு கிடைக்கிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com