தங்கர்பச்சானின் புதுப் படம்

மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம்.
தங்கர்பச்சானின் புதுப் படம்


மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம். இந்த வரிசையில் தற்போது அவர் இயக்கவுள்ள படத்துக்கு "கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மற்ற துணை கதாபாத்திரங்கள், முதன்மையான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் தேர்வை தொடங்கியுள்ளார் தங்கர்பச்சான். இப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

முத்துராஜ் தங்கவேல் கலை இயக்குநராகப் பணியாற்றவுள்ளார். ஜூலை 25 -ஆம் தேதி முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

ஜி. வி. பிரகாஷ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத் தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து ஈரம் காயாத விழிகளுடன்..... "கருமேகங்கள் ஏன் கலைகின்றன‘ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?.. என அழுத்தமான மன உணர்வுகளைப் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

தங்கர்பச்சான் பேசும் போது.... ""மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே படத்தின் தயாரிப்பாளர் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்து விட்டார். இது என்னுடைய அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்...'' என்று தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் "டக்கு முக்கு டிக்கு தாளம்" படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதியப் படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com