ஞாபகம் வருதே...! ஞாபகம் வருதே...!!

மாறிவரும் இயந்திரமயமான உலகில், கால் நூற்றாண்டைக் கடந்தும், மீண்டும் பள்ளிப் பருவ மாணவர்கள் சந்திக்கின்றனர். பள்ளிப் பருவத்தின் நினைவுகளை பலரும் பகிர்ந்துகொள்கின்றனர்.
ஞாபகம் வருதே...! ஞாபகம் வருதே...!!


மாறிவரும் இயந்திரமயமான உலகில், கால் நூற்றாண்டைக் கடந்தும், மீண்டும் பள்ளிப் பருவ மாணவர்கள் சந்திக்கின்றனர். பள்ளிப் பருவத்தின் நினைவுகளை பலரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

"ஆட்டோகிராப்', "பள்ளிக்கூடம்', "96' போன்ற திரைப்படங்கள் பழைய மாணவர்கள் சந்திப்பை நினைவு கூரும்வகையில் வெளியாகி, பெரிய ஹிட் படங்களாகின.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பழைய மாணவர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைமுடித்தவுடன் வாழ்க்கை ஓட்டத்தில், திசைக்கொருவராகப் பிரிந்து, உலகின் பல பகுதிகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வருகை தருவோர் உள்ளூரில் வசிக்கும் ஓரிருவரை சந்திக்கின்றனர். ஆனால், மொத்த மாணவர்களும் சந்தித்துப் பேச முடிவதில்லை. வெளியூர் சென்று வசிப்போருக்கு, நல்ல நட்பும் அமைவதில்லை. இந்த நிலையில், சந்திப்புக் கூட்டங்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி பங்கேற்கின்றனர்.

கடந்த ஜூன் 5-இல் ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1979-இல் 6-ஆவது முதல் 1986-இல் பிளஸ் 2 வரை படித்தோர் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தது, சேலம் மாவட்டத்துக்குட்பட்ட சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1993-95-ஆம் ஆண்டில் பிளஸ் 2 பயின்றோர் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தது, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தாராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1970 முதல் 1979-ஆம் ஆண்டு வரையில் படித்தோர் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தது... என்று பல சந்திப்புகள் அரங்கேறின. விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்டோம்:

காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியில் 1989-92-ஆம் ஆண்டில் ஆங்கிலப் பொருளாதாரம் படித்த மாணவர் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் வெங்கடேசன் கூறியதாவது:

எங்கள் பிரிவில் நாங்கள் 40 பேர் படித்தோம். கல்லூரி நட்புகள் ஒன்று சேருவது குறித்த ஆலோசனை கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டது.

வாட்ஸ் ஆப் குழுவை ஆரம்பித்து, சில வாரங்களிலேயே 35 பேர் இணைந்தனர். நானும், குழுவின் ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான காரைக்குடி தர்மராஜன் மற்றும் நண்பர்கள் இணைந்து,, காரைக்குடியில் குடும்பத்தோடு கடந்த ஆண்டில் சந்தித்துப் பேசினோம். இதன்தொடர்ச்சியாக, நண்பர்கள் கடந்த மாதத்தில் சந்தித்தோம்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே சிங்கப்பூரில் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றும் துரை. கரிகாலன், துபையில் வியாபாரம் செய்யும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் வெளிநாடுகளில் இருந்து வந்து சென்றனர்.

ஓய்வு கிடைக்கும்போது, கல்லூரி நட்புகளோடு "வாட்ஸ் ஆப்' குழுவில் அரட்டை அடிப்பதில், நெஞ்சில் நிலைத்திருந்த சோகங்கள் மறைந்து மனதில் புத்துணர்வு திரும்புகிறது.

ஆண்டுதோறும் தை முதல் வாரத்தில் கூட்டம் நடத்தி அனைவரும் சந்திக்க உள்ளோம். நண்பர்களுக்குள் நிதி திரட்டி கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு உதவிடுவது, கல்லூரிக்கு உதவி செய்வது, கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது, கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.ஓ.பிளான்ட் வசதியை ஏற்படுத்தித்தருவது என முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

பவானிசாகர் அரசுப் பள்ளியில் கூட்டத்தை நடத்திய பொறியாளர் வி.பி.மூர்த்தி, வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பழனிசாமி, வர்த்தகர் சுரேஷ், ஆசிரியைகள் மயில்விழி, பூங்கொடி, ஈஸ்வரி ஆகியோர் கூறியதாவது:

""உடன்படித்தோரை ஒருவர் விடாமல் தொடர்பு எண்களைப் பெற்று, ஒருங்கிணைக்கவே சில வாரங்கள் ஆகின. வாட்ஸ் ஆப் குழுவொன்று தொடங்கி, குடும்ப ரீதியாக அறிமுகம் செய்துகொண்டோம். சந்திப்பு நாளன்று, ஒவ்வொருவரும் வரும்போது, அவர் சார்ந்த தொழில், ஊர் குறித்து விளக்கி வரவேற்கும் வகையில் பாடல்களைத் தேர்வு செய்து ஒலிபரப்பினோம்.

பள்ளிப் பருவக் குறும்புகள், ஆசிரியர்கள் குறித்த விமர்சனங்கள், நண்பர்களுக்கு உதவிய தருணங்கள்.... என கள்ளங்கபடமில்லாத, வாழ்க்கையில் இறக்கும் வரை மறக்க முடியாத தருணங்கள் ஒவ்வொன்றையும் அசைபோட்டபடி ஒருநாள் பொழுது இனிமையாகவே கடந்தது.

வகுப்பறைகளுக்குச் சென்று பார்த்துவிட்டு, கடந்த காலத்தை மனதில் அசைபோட்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு கால அனுபவங்களை பல மணி நேரத்தில் பேசிவிட்டு, கண்ணீருடன் பிரிந்தோம்.

கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள "பாங்க் ஆஃப் அமெரிக்கா'-இல் அதிகாரியாகப் பணியாற்றும் ரமேஷ், கென்யா நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மூர்த்தி ஆகியோரும் வந்தனர்.

சங்ககிரி பள்ளியில் கூட்டத்தை நடத்திய முன்னாள் மாணவர்கள் சரவணன், சதீஷ், கோவிந்தன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கூறியதாவது:

""ஓரிரு மாதங்கள் போராடி, வாட்ஸ் ஆப் வாயிலாக நண்பர்களை ஒருங்கிணைத்தோம். நண்பர்கள் அரசு, தனியார் பணிகளில் பணியாற்றியவர்கள். தொழில் செய்பவர்கள்தான்.

கல்லூரி கால நட்பு, பணிக் கால நட்புகளைவிட பள்ளிப் பருவ நட்பு சிறந்தது. ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் சென்று குழு புகைப்படம் எடுத்துகொண்டோம். முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினோம். பள்ளிக்கு உடனடியாக ஜெராக்ஸ் மிஷின் வழங்கினோம். பள்ளிக்கு தேவையான கணினிகளை வழங்கவுள்ளோம்.''

தாராபுரம் பள்ளியில் கூட்டத்தை நடத்திய கேபிள் டி.வி. சங்கப் பொருளாளர் சக்திவேல், கண்ணன் ஆகியோர் கூறியதாவது:

நண்பர்களை ஒருங்கிணைக்க 6 மாதங்கள் ஆனது. 55 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். சிலர் வரவில்லை. நியூஸிலாந்து நாட்டில் விவசாயத் துறையில் பணியாற்றும் குமரவேல், கூட்டத்துக்காகவே வந்தார். பள்ளியில் குடிநீர் சரிவர இல்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்து, குடிநீர் இணைப்பை மீண்டும் பெற்று தந்தோம்.

46 ஆண்டுகளுக்குப் பின்னர் சேர்ந்தோம். அந்த நாள் ஞாபகத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். மாணவர் பருவத்தைப் போல மகிழ்ச்சியான பருவம் ஏதுமில்லை. ஒரு பூவின் மலர்ச்சியைப் போல, சந்தோஷத்தைக் கொண்டது. இந்த நினைவுகளை அவ்வப்போது நினைத்து பார்ப்பதன் மூலம் இளமையை மீட்டெடுக்கலாம்''.

தொகுப்பு: ஆர்.வேல்முருகன், தி.நந்தகுமார், ஆர்.தர்மலிங்கம், எஸ்.தங்கவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com