காஞ்சி மகானின் ஸ்பரிச பாக்கியம்

தூய்மைக்கும் துறவறத்துக்கும் இலக்கணம் ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள்.
காஞ்சி மகானின் ஸ்பரிச பாக்கியம்

தூய்மைக்கும் துறவறத்துக்கும் இலக்கணம் ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள்.

ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் கேட்கும் பல பக்தர்களுக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மஹிமைகளைப் பட்டியலிடப்படும்போது, மஹா ஸ்வாமிகள் நினைப்பு தோன்றும். "இந்தக் குணம் ஸ்ரீ பெரியவாளுக்கும் உண்டே' என்று ஒப்பிடத் தோன்றும்.

ஒரு கதாகாலட்சேபத்தில் உபன்யாசகர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பரதாழ்வார் அயோத்திக்கு மீளக் கோரிக்கை விடுக்கும் கட்டத்தை விவரிக்கும்போது, பரதன் கோபத்தில் தாயார் கைகேயியை நிந்தனை செய்தது விவரிக்கிறார்.

தர்மத்திலிருந்து சற்றும் பிசகாத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி உணர்ச்சி வேகத்தில் தன் சகோதரன் செய்த பாவத்துக்காக அவன் மேல் உள்ள கருணையால் ""பரதா, கடும் கோபத்தில் பெற்ற தாயை நிந்தனை செய்துவிட்டாய். இது பெரும் பாவம். இந்தத் தோஷத்திலிருந்து விடுபட உடனடியாக இதோ ஓடும் நதியில் கைகளை நனைத்து என்னை ஸ்பரிசம் செய்து கொள். போதும்'' என்கிறார்.

காருண்யத்தால் ஸ்ரீ ராமரும் இங்கே ஒரு க்ஷணம் தான் ஸ்ரீமன் நாராயணன் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

அப்படிப்பட்ட எளிமையான தோஷ நிவாரணத்தை மிகச் சில பக்தர்களுக்கு காஞ்சி மஹா ஸ்வாமிகளும் வழங்கியிருக்கிறார். ஆரம்பக் காலத்தில் உடல் நலிவுற்றபோது சில நாள்கள் மராத்தி ஸ்வாமிகள் (ஸ்ரீ பெரியவாளைவிடப் பல வருடங்கள் மூத்தவர்) தன்னைத் தொட்டு, தூக்கி, பணிவிடைகள் செய்ய அனுமதித்தார்.

அதே மாதிரி ஸ்ரீ ஸ்வாமிகள் பிராயம் 90-ஐ தாண்டிய கட்டத்திலும் ஐந்தாறு வருடங்கள் சென்னையைச் சேர்ந்த ஒரு நரம்பியல் மருத்துவர் ஒவ்வொரு வாரமும் தன்னை ஸ்பரிசித்து சிகிச்சை செய்ய அனுமதித்தார்.

ஒருமுறை ஸ்ரீ பெரியவாதம் குருமார்ஆராதனைக்கு சில வைதிகர்களிடம் சொல்லி ஏற்பாடு பண்ணியிருந்தார். ஒரு வைதிகரால் ஆராதனைக்குச் செல்ல இயலவில்லை. அவர் சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்குவது கேட்ட ஸ்ரீ பெரியவா பின்னர் அவரைக் கூப்பிட்டார்.

"பெரியவா. நான் சுத்தமில்லாதவன் என்று உணர்கிறேன்' என்று உருகினார்அவர். ஸ்ரீ பெரியவா உடனே ""அட. இது தான் பிரச்னையா. ஒன்னு பண்ணுங்கோ.ஒரு சொம்பு தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணிட்டு என்னை ஸ்பரிசம் செய்யுங்கோ. தோஷம் எல்லாம் போயிடும்'' என்றார்.

இப்படிப்பட்ட ஸ்பரிச பாக்கியம் ஸ்ரீ பிரதோஷ மாமாவுக்கும் கிட்டியது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ஒரு சித்திரை வருஷப் பிறப்பன்று பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ பெரியவா சட்டென்று தன் பாதக் கமலங்களை மாமா சிரசில் வைத்து ஆசிர்வதித்தார்.

இன்னொரு முறை ஸ்ரீ பிரதோஷமாமாவே வேண்ட ஸ்ரீ பெரியவா தம் கால்களை அவர் சிரசில் அமர்த்தி ஆசிர்வதித்தார். மகானின் ஸ்பரிச பாக்கியம் பெற்றவர்கள் எந்நேரமும் சாயுஜ்யத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com