வெற்றிக்கு காரணம்?

அல்லயன்ஸ் நூறு ஆண்டுகள் கண்ட பதிப்பகம். பத்தாயிரம் நூல்களுக்கு மேல் பதிப்பித்த பெருமை கொண்ட நிறுவனம்.
வெற்றிக்கு காரணம்?

அல்லயன்ஸ் நூறு ஆண்டுகள் கண்ட பதிப்பகம். பத்தாயிரம் நூல்களுக்கு மேல் பதிப்பித்த பெருமை கொண்ட நிறுவனம். இதன் பதிப்பாளர் - உரிமையாளர் ஸ்ரீனிவாசன். 24, 25, 26-ஆவது புத்தகக் கண்காட்சிகளை பபாசியின் செயலாளராக இருந்து திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இன்று இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சி என்று பெருமைப்படும் அளவுக்கு அடித்தளம் இட்டவர். இன்று நடைமுறையில் உள்ள ஸ்டால் உரிமையாளர், அலுவலர் என இருவருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், கேன்டீன் வசதி, அரங்கம் அமைத்து சிறப்பு சொற்பொழிவு, பட்டிமன்றம், நூல் வெளியீடு போன்ற புதிய திட்டங்களைக் கொண்டு வந்து பதிப்பாளருக்கும் வாசகர்களுக்கும் பெரும் பயனை உண்டாகியவர் ஸ்ரீனிவாசன் தான்.

கார்கள் - இரு சக்கர வாகனங்கள், பார்க்கிங் கூட்டத்தை பெரிய படமாகப் பிரசுரம் செய்து, இது ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த புதுப்படத்தில் முதல் காட்சிக்கு வந்த கூட்டமல்ல- சென்னை காயிதே மில்லத்தில் கல்லூரி புத்தகக் கண்காட்சிக்கு வந்த கூட்டம் என்று அப்போது தினமணி எழுதியிருந்தது. இவ்வாறு அல்லயன்ஸ் வெற்றிக்கு காரணம் என்ன? ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்:

அல்லயன்ஸ் துவங்கியது எப்போது?

முறையான துவக்கம் என்பது 1901-ஆம் ஆண்டு. 1880-ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோமலில் பிறந்த எனது தாத்தா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தனது 16-ஆவது வயதில் 1896-இல் சென்னை வந்திறங்கினார். தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி என்ற பேரில் பென்சில், பேனா, பேப்பர் என்று விற்பனை செய்து வந்தார். அதே கம்பெனி மூலம் 1901-இல் நூல் வெளியீட்டைத் துவங்கினார்.

நூல் பதிப்பில் அவரது உத்தி என்ன?

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களை வினா-விடையாகவே அப்போது வெளியிட்டார். அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.

நவீனங்களை வெளிட ஆரம்பித்து எப்போது?

"பொறுமையுள்ள மனைவி', "தலையணை மந்திர உபதேசம்', "வேணுவின் சம்சாரம்' என்று வாசகர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய தலைப்புகளைக் கொடுத்து நூல்களை வெளியிட்டதோடு வித்தியாசமான விளம்பரங்களையும் வெளியிட்டார்.

மொழி பெயர்ப்பு நூல்கள் பக்கம் திரும்பியது...

பிற மொழி நூல்களைத் தமிழில் தருவது என்ற முனைப்புடன் வங்கத்திலிருந்து பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், கவி தாகூர் ஆகியோர் எழுதிய நூல்களையும் மராத்திலியிருந்து வி.ஸ கண்டேகர் எழுதிய நூல்களையும் பதிப்பித்தார். ஷேக்ஸ்பியரின் நூல்கள் உள்ளிட்ட ஆங்கில இலக்கியங்களையும் தமிழில் கொண்டு வந்தார்.

மொழி பெயர்ப்பு தவிர பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை வெளியீட்டீர்களே?

ராஜாஜி, த.நா.குமாரசாமி, அவரது தம்பி சேநாபதி, கி.வா.ஜ, கு.ப.ரா, அகிலன், லட்சுமி, க.நா.சுப்ரமணியம், தி.ஜ.ர சிதம்பர சுப்ரமணியம் போன்றோரின் நாவல்களையும் பதிப்பித்தார்.

சிறுகதைகள் தொகுதி வெளியீடு...

1934-இல் தமிழின் முதல் சிறுகதை தொகுதியான வ.வே.சு ஐயரின் "மங்கையர்கரசியின்' காதல் என்ற நூலைத் தாத்தா வெளியிட்டார். தொடர்ந்து "தமிழ்நாட்டுச் சிறுகதைகள்' என்ற பெயரில் சிறந்த சிறுகதைகளையும் "இந்தியக் கதைத் திரட்டு' தலைப்பில் மாநில மொழி சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வெளியிட்டார். 1942 -இல் "கதைக்கோவை' என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளையும் பொன்விழா ஆண்டில் வெளியிட ஐந்தாவது தொகுதிக்கான ஆயுத்தங்களையும் செய்து வந்தார்.

சுதந்திரப் போராட்ட காலங்களில் பங்களிப்பு?

நேதாஜி நூல்களை அனுமதி பெற்று தமிழில் வெளியிட்டார். தடை வந்தது. தடையையும் மதியால் வென்றார். காந்தி, பட்டேல், நேரு ராஜேந்திர பிரசாத், சரோஜினி தேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தேசபக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிட்டார். "விவேகபோதினி' என்ற மாதப் பத்திரிகையை 23 ஆண்டுகள் நடத்தினார். அதைப்போன்ற பத்திரிகை இன்றளவும் வெளிவந்ததில்லை.

ராஜாஜியின் நூலை வெளியிட்டது குறித்து...

காங்கிரஸ் பேரியியக்கம் தொடங்கப்பட்டது. அல்லயன்ஸ் கம்பெனிக்கு அடுத்த பில்டிங்கில் தான். காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் அப்போதெல்லாம் அல்லயன்ஸ் திண்ணையில் தான் நடைபெறும். காங்கிரஸ் தலைவர்கள் கமிட்டிக்கு வரும்போதெல்லாம் அல்லயன்சுக்கு வந்துவிட்டு தான் செல்வார்கள். அப்போது தாத்தாவுக்கு அவர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் 1933-இல் அல்லயன்சுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது ராஜாஜி தனது ஆறு நூல்களைக் கொடுத்தார். ராயல்டி தேவை இல்லை என்றும் கூறினார். அவை அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. திருப்புமுனைனையும் ஏற்படுத்தியது.

உங்கள் காலத்தில் அல்லயன்ஸ் எப்படி?

தாத்தா 1949-இல் மறைந்தார். அவரது மூன்று பிள்ளைகள் நிர்வாகத்தை கவனித்து வந்தார்கள். 1953-இல் ஏற்பட்ட பாகப்பிரிவினையில் அல்லயன்ஸ் நிர்வாகம் எனது தந்தை கே..வி.எஸ் மணியிடம் வந்தது. 1985- முதல் நான் பொறுப்பேற்று நிர்வாகம் செய்து வருகிறேன்.

அல்லயன்ஸ் வெற்றிக்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா?

கி.வா.ஜ, எஸ்.வி.வி தேவன், சோ சார், சிவகுமார் எண்டமூரி வீரேந்திரநாத் கோட்டயம் புஷ்பநாத், ரா.கி, ரங்கராஜன் அநுத்தமா, கா.ஸ்ரீ.ஸ்ரீ போன்ற ஏராளமான பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளே முக்கிய காரணம்.

குறிப்பாக அல்லயன்சுக்கு 1933-இல் நெருக்கடி வந்த போது ராயல்டியே வேண்டாம் என்று ராஜாஜி தனது நூல்களைக் கொடுத்து உதவினார். அதே போன்று 1990-களில் எனது காலத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது ராயல்டியே வேண்டாம் என்று சோ சார் தனது நூல்களைத் தூக்கிக் கொடுத்தார். குறிப்பிட்ட காலத்துக்குப் பின் நான் விருப்பப்பட்டு ராயல்டி அவரிடம் தொகையை கொடுத்தேன். வேண்டாம் என்று தான் சோ சொன்னார். வற்புறுத்திக் கொடுத்ததும், அந்தத் தொகையை தமது ஆசிரியர் குழுவில் உள்ளவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். தாத்தா காலத்தில் பதிப்பிக்கப்பட்ட தேசியத் தலைவர்களின் எழுத்துகள் பிறமொழி எழுத்தாளர்கள் பங்களிப்புகள் இவையெல்லாமும், இவர்களுடனான நல்லுறவும் அல்லயன்சுக்கு வெற்றியைத் தேடித் தந்தன.

ஒரு பதிப்பகத்துக்கு முதுகெலும்பு எது?

நிச்சயமாக எழுத்தாளர்கள்தான். அவர்கள் மனம் குளிர்ந்தால் தான் பதிப்பகம் முன்னுக்கு வரும் என்ற கொள்கையை உடையவர் எனது தாத்தா. எழுத்தாளர் -வாசகர்- பதிப்பகம் இவர்களின் கூட்டமைப்பே அல்லயன்ஸ்.

வாசகர்கள் ஏமாறக்கூடாது. அவர்களுக்கு நல்ல மெட்டீரியலைக் கொடுக்கிறோம். தொழிலை அனுபவித்து செய்கிறோம். தொண்டு என்று சொல்ல வில்லை. இது வியாபாரம் தான். வாசகர்கள் கொடுக்கிற 10 ரூபாய்க்கு கூடுதலாக ஒரு பைசாவுக்குண்டான அளவாவது திருப்தி கொடுக்கணும். அப்போது தான் பதிப்பு தொழில் வளரும் என்பது தாத்தாவின் தாரக மந்திரமாக இருந்தது. நானும் அப்படியே நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com