'நூற்றாண்டின் பந்து'

சுழலும் கிரிக்கெட் பந்துகள்கூடக் கவிதைகளைக் கிளறிவிடும். அதுவும் ஷேன் வார்ன் போன்ற ஜீனியஸ்ஸின் ஒவ்வொரு பந்துமே ஒரு கவிதைதான்!
'நூற்றாண்டின் பந்து'


சுழலும் கிரிக்கெட் பந்துகள்கூடக் கவிதைகளைக் கிளறிவிடும். அதுவும் ஷேன் வார்ன் போன்ற ஜீனியஸ்ஸின் ஒவ்வொரு பந்துமே ஒரு கவிதைதான்!

ஷேன் கீத் வார்ன் "இப்படித்தான் வீசுவார்...' என்று யாரும் கணிக்க முடியாதபடி வீசும் சுழல்பந்து வீச்சாளர். அதேபோல, யாரையும் கணிக்க விடாதபடி "மரணம்' என்ற சுழல் பந்தை 52 -ஆ ம் வயதில் மார்ச் 4 அன்று வீசிவிட்டு ஷேன் கீத் வார்ன் மண்ணுலகை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டார்.
கால்பந்தாட்டத்தில் தீவிரமாக இருந்த ஷேன், 1992-இல் சுழல் பந்து வீச்சாளராகத் தனது கன்னி கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது, இந்திய அணிக்கு எதிராகதான்!

டெஸ்ட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 1001 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஷேன் வார்ன் சாதனை நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா உட்பட உலகின் முன்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது ஷேன் வார்னின் சுழல் பந்து வீச்சு..! ஏழு வயதில் கால்கள் இரண்டையும் உடைத்துக் கொண்ட ஷேன் சக்கர நாற்காலியில் அமர்ந்து கைகளால் உந்தித் தள்ளியதால் ஷேனின் கைகளுக்கு நல்ல பலம் உண்டு. கால் உடைந்துவிட்டதால் விளையாட முடியாத ஷேன் பந்துகளைச் சுழற்றி எறிந்தும் பயிற்சி செய்தார். டெர்ரி ஜென்னர் கிரிக்கெட்டில் ஷேன்னின் குருவாக அமைந்தார். "ஆசான் டெர்ரி இல்லாமல் இந்த ஷேன் இல்லை' என்று ஷேன் அடிக்கடி சொல்வார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2007-இல் ஓய்வு பெற்ற ஷேன் 2008-இல் இந்தியாவின் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆனார். "ஐ.பி.எல்' முதல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜடேஜாவுக்குப் பயிற்சி கொடுத்து வீரராகச் செதுக்கியவர் ஷேன் வார்ன் தான் ..!

ஆஸ்திரேலியாவின் சக கிரிக்கெட் ஆட்டக்காரர் ரோட்னி வில்லியம் மார்ஷ் இறந்ததிற்கு அஞ்சலிப் பதிவினை தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீர் மாரடைப்பு ஷேன்னை வீழ்த்திவிட்டது. ஷேன் இறந்தது தாய்லாந்திலுள்ல உல்லாச விடுதியில். மாலையில், ஷேன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் ஏற்பாடாகியிருந்தது.

ஷேன் இதர கிரிக்கெட் பந்து வீச்சாளர்களைப் போல, தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசமாட்டார். இரண்டு மூன்று ஸ்டேப் போட்டு கையைச் சுழற்றி பந்துவீசுவார். பார்க்க எளிமையாகத் தெரியும் ஷேனின் பந்து, "நாகாஸ்திரம்' போன்றது என்பது கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குத் தெரியும்.

ஷேன் பிறக்கும் போதே அவரது வலது கண் நீல வண்ணத்திலும், இடது கண் பச்சை நிறத்திலும் இருக்கும். ஆனால் பார்வை சக்தியில் குறை ஏதும் இல்லை. ஷேன்னுக்கு ப்ரூக் (24), சம்மர் (20) என்று இரண்டு மகள்களும், ஜாக்சன் (22) என்ற மகனும் வாரிசுகள். ஷேன் மனைவியை விவாக ரத்து செய்துவிட்டதால், ஷேனின் அப்பா, தனது பேரன் பேத்திகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். மனைவி விவாகரத்து செய்ததால், வாரிசுகளுக்கு முழு நேர அப்பாவாக இருக்கவே ஷேன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவின் தவிர்க்க முடியாத அடையாளமாகப் பவனி வந்த ஷேன்னின் நினைவாக, ஷேன் வளர்ந்த விக்டோரியாவில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கு ஷேன் பெயரைச் சூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1993 "ஆஷஸ்' தொடரில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷேன் ஒரு மந்திர ஜாலத்தை நிகழ்த்தினார். இங்கிலாந்து வீரர் மைக் கெட்டிங்கிற்கு, வார்னே பந்து வீசுகிறார். பந்து லெக் சைடில் வைட் போல் சென்று, ஏவுகணை போல சாய்த்தது. பந்து வீச்சில் இப்படி ஒரு மாயாஜாலம் செய்த அதிசயப் பந்தை அதுவரையில் யாரும் பார்த்ததில்லை. கால் பந்து உலகக் கோப்பை போட்டியில் மாரடோனா போட்ட கோல் "நூற்றாண்டின் கோல் ‘ என்று பாராட்டப்படுவது போல, ஷேன் வீசிய அந்தப் பந்து வீச்சை ‘(இருபதாம்) நூற்றாண்டின் பந்து(வீச்சு) என்று இன்றும் போற்றுகிறார்கள்... புகழுகிறார்கள். "எப்படி ஆட்டமிழந்தேன்' என்று தெரியாமல் அதிர்ச்சியிலிருந்து மீள மைக் கெட்டிங்கிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

ஷேனின் அதிரடி அத்துடன் முடியவில்லை. அந்தத் தொடரில் ‘சொல்லிப் பிடித்தது' மாதிரி, ஷேன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்வையாளர்களைச் பரசவம் அடையச் செய்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, உலகமே ஷேன்னைக் கொண்டாடியது. ஷேன்னுக்குக் கிடைத்த புகழைக் கண்ட மற்ற பந்து வீச்சாளர்கள் சுழல் பந்து வீச்சைக் கையாளத் தொடங்கினாலும், ஷேன் மாதிரி வீச முடியவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில், வார்னே இங்கிலாந்து வீரர் ஸ்டரஸ்க்கு (2005-இல்), மைக் கெட்டிங்கிற்கு வீசிய மாதிரி பந்தை வீசி, ஸ்டரஸ்ûஸ ஆடவிடாமல் முடக்கினார். மெல்போர்னில் நடந்த கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்த மூன்று பந்து வீச்சில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களாலான பில் டி ஃபிரைடஸ், டர்ரென் கெள, டேவன் மால்கம் அவுட் ஆக்கி ஹாட்ரிக் எடுத்து ஷேன் சாதனை படைத்தார்.

சென்ற ஆண்டு கரோனா தாக்குதலுக்கு ஆளான ஷேன், மீண்டுவிட்டாலும்.... அவரது இறப்புக்குக் காரணம் கரோனா தாக்கம் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை...!

இந்தியாவின் வளர்ப்பு மகனாக இருந்த ஷேன் வார்ன், "ஷேன்' என்ற ஆவணப்படத்தில் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? "“நான் துல்லியமானவன் அல்ல... மது அருந்துவேன், புகைப்பேன்... கொஞ்சம் "லெக் ஸ்பின்' போடுவேன்... அதனால் சொல்கிறேன்...நான் துல்லியமானவன் அல்ல, எனக்கு சத்தமாக இசையை வைத்து கேட்பது பிடிக்கும். அதுதான் நான்!'

ஒரு போட்டியில் கூட அவர் ஓட்டத்தின் எண்ணிக்கை 100 ஐத் தொட்டதில்லை. ஒரே ஒருமுறை அதிகபட்சமாக, 99 ஓட்டத்தை ஷேன் எடுத்திருந்தார். எதிர் அணி பேட்ஸ்மேன் "ஷேனின் நண்பர்' எனத் தெரிந்தால், அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் அதிரடியாக அச்சுறுத்தலைக் கொடுக்க மாட்டார்கள். நட்பு ரீதியான போட்டியாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் ஷேன்னை மதித்தார்கள்.

சுழல் பந்து வீச்சிற்காக ஷேன் வார்னை உலகம் கொண்டாடியது...! மெல்போர்னில் இருக்கும் ஷேன் வார்ன்னின் சிலை இருக்கும் இடம் கோவிலாகிவிட்டது. ஷேன்னுக்குப் பிடித்த பீர், பூச்செண்டுகளை வைத்து மெழுகுவர்த்திக்கொளுத்தி ஷேனின் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com