கரோனா நான்காவது  அலை வருமா?

கரோனா பரவல் காரணமாக சீனாவில்  மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா நான்காவது  அலை வருமா?

கரோனா பரவல் காரணமாக சீனாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், அண்டை நாடான சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து நான்காவது அலை வருமா? என்ற கேள்வி தற்போது உருவாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் மாகாணத்தில் இருந்து கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதாகச் சொல்லப்பட்டது. பின்னர், பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு கரோனாவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனாவில் மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படுமா? நான்காவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? இது பற்றி முதுநிலை நோய்த்தொற்றுச் சிறப்புச் சிகிச்சை நிபுணர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்:

""சீனாவில் தற்போது பரவும் வைரஸ் இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலே பரவி அதன் தாக்கம் ஏற்படுத்தியது.

முதல் அலை உலகம் முழுவதும் பரவியதும், சீனா, ஹாங்காங், இங்கிலாந்து போன்ற நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைத்தன. அதாவது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்தியது, பொது இடங்களில் மக்களைக் கூடுவதைத் தடுப்பது போன்றவற்றால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்.

முதல் அலையைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இயற்கையாகவே இருந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் வேலை செய்தது. இரண்டாவது அலை மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக ஒமைக்ரான் நோய்த் தொற்று பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பது தான் உண்மை.

ஹாங்காங், தென்கொரியா போன்ற இடங்களில் உருமாறிய வைரஸ் பரவவில்லை என்று சொன்னாலும் அது வேகமாகப் பரவி வருகிறது என்பது தான் உண்மை. இந்தியாவிற்கு இதுவரை வரவில்லை. ஆனால் உருமாறும் போது வரலாம்.

சீனா, ஹாங்காங், இங்கிலாந்து போன்ற இடங்களில் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது நல்லது. காரணம் உருமாறிய வைரஸ் தாக்கம் அதிகரித்தாலும் பெரிய அளவில் பாதிக்காது. எப்படி இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களை ஒமைக்ரான் தாக்கினாலும் எவ்வித உயிரிழிப்புகளையும், ஏற்படுத்தவில்லையே அது போன்று தான் இந்த முறைஏற்படும்.

பொதுவாக மாஸ்க் அணிவது மிகவும் பாதுகாப்பானது. காரணம் கடந்த சில ஆண்டுகளில் மாஸ்க் தொடர்ச்சியாக அணிவதன் காரணமாக காசநோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நான்காவது அலையைப் பொருத்தவரை பூஸ்டர் தடுப்பூசியும், மாஸ்க் அணிவதும் தான் அவற்றைத் தடுக்கும் அரணாக இருக்கும். பொதுவாக வைரஸ் தாக்குமா? தாக்காதா? என்பது தேர்தல் முடிவு போன்றது தான்.

எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். பாதிக்கப்பட்டவர்களின் சாம்பிள் மற்றும் கணக்கீட்டு முறையில் தான் அது பரவும் வேகம் தெரியும். நான்காவது அலை காற்றின் மூலமாகப் பரவுமா, பாதிக்கப்பட்ட நபர் வழியாகப் பரவுமா? என்பதையும் ஆய்வின் மூலமே கண்டறிய முடியும்.

அந்தப் பணிகளை தற்போது மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. உலக நாடுகளும் வைரஸ் உருமாற்றத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

மூன்று கரோனா வைரஸ்களை எதிர்நோக்கிய அனுபவத்தில் தற்போது மருத்துவ உலகினர் தெளிவாக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் புதுவிதமான வாய்வழியாக உட்கொள்ளும் ஆன்டி வைரல் மருந்துகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த மருந்துகள் ஜனவரி மாதமே இந்தியாவில் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரையில் விற்பனைக்கு வரவில்லை. அதே போன்று மேலை நாடுகளில் கண்டுபிடித்த பைசர் போன்ற தடுப்பூசியும் இந்தியாவிற்கு வரவேயில்லை.

நான்காவது அலையின் தாக்கம் ஏற்படும் பட்சத்தில் தடுப்பூசி கைவசம் இருப்பில் இருந்தாலும், மத்திய அரசும், மாநில அரசும் உயிர் காக்கும் மருந்துகள் வாங்கி வைத்து கொள்வது நல்லது. பைசர் போன்ற சிறந்த தடுப்பூசி வகைகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். ஆன்டி வைரல் மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாலே பயப்படத் தேவை இருக்காது.

இனி வரும் காலம் மக்கள், அரசாங்கம் தடுப்பூசி செலுத்தி கொள்வதைக் கட்டாயப்படுத்துகிறது என்பதை விட, தங்களுடைய குடும்ப டாக்டர்கள் கலந்து ஆலோசித்து விட்டு அவர்கள் மூலமாகத் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். அது தான் நம்மையும், நம் குடும்பத்தையும் தற்காத்து கொள்ளும் வழி'' என்றார் சுரேஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com