பதின்ம வயதின் உளவியல் சவால்கள்!

குழந்தைகளின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் துரை ஆனந்தகுமார்.
பதின்ம வயதின் உளவியல் சவால்கள்!


குழந்தைகளின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் துரை ஆனந்தகுமார். சார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிறார்கள்எழுதிய நூல்களை வெளியிட்டு பேசப்படும் நபராகிவிட்டார்.

அபுதாபியில் அரசுத் துறையில் "சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல்' நிபுணராக துரை ஆனந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். 2018- ஆம் ஆண்டு முதல் சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல் பணிகளிஹல் ஈடுபட்டுவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

எனது சொந்த ஊர் வேலூர். அபுதாபியில் 2008-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிகிறேன். குழந்தைகள் மன நலத்துக்காக, அவர்களின் ஓய்வு நேரங்களில் வாசிக்க 14 நூல்களை எழுதியுள்ளேன். சிறார்களின் எழுத்துப் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, பல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை நான்கு தொகுப்புகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

கரோனா தொற்று காலத்தில், 27 குழந்தைகளை, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சிறுகதைகளை எழுதவைத்து, "பேனா பிடித்த நட்சத்திரங்கள்' என்ற நூலை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

2022-ஆம் ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், சிறார்கள் எழுதிய "கதைக்கும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் இரண்டாம் தொகுப்பை வெளியிட்டுள்ளேன். 15 கதை சொல்லிகளின் சிறார் கதைகளைத் தொகுத்து "கதைவண்டி' என்ற பெயரில், நூலாக வெளியிட்டேன். நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான "என் பெயர் மாயா', சிறார் நாவலான "மாயத் தூக்கம்' நூல்களையும் வெளியிட்டுள்ளேன்.

ஆர்வம், தேடுதல்களால்தான் குழந்தைகளின் உலகமே நிரம்பி உள்ளது. அவற்றின் வெளிப்பாடுதான் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குக் கிடைக்கும் தெளிவான பதில்கள்தான் குழந்தைகளின் அறிதல், புரிதல், தெளிதல், சாதித்தலுக்கு உதவுகின்றன. குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கதைகள் மூலமாக பதில்களைச் சொல்லியிருக்கிறேன்.

குழந்தைகளை பாலகர்கள் ( 2 வயது வரை), மழலைகள் (3 முதல் 6 வயது வரை), சிறார்கள் (7 - 12 வயது), பதின்ம வயதினர் (13 -17 ) என்று பிரிக்கலாம்.

12 வயது வரை கொஞ்சி, சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெரும்பாலான பெற்றோர்கள் பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளிடம் பேசுவதையும், பழகுவதையும் வழிகாட்டுவதையும் குறைத்துக் கொள்கின்றனர். பதின்ம வயதினர் பெற்றோர்களின் தலையீட்டை விரும்புவதில்லை. இவற்றுக்குப் பல நடைமுறை சிக்கல்கள் காரணமாகின்றன.

பதின்ம வயதில் நுழைபவருக்கு சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் சமூகம் சார்ந்த விஷயங்களில் தெளிவான பார்வையும், விளக்கமும், வழிகாட்டலும் தேவைப்படுகிறது. வழிகாட்டல் பெற்றோரிடமிருந்து கிடைக்காத சூழ்நிலையில் பதின்ம வயதினரின் மனம் அலைபாய்கிறது.

சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய காலம் இது. உடல், மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்து கொள்ளுதல், மன அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலினத்தவரை மதிப்புடன் நடத்துதல் என்று பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள் நிறைய உள்ளன.

மருத்துவரிடம் பேசி, பதின்ம வயதினரின் உளவியல் சிக்கல்களுக்கு எனது நூல்களில் வழிகாட்டியிருக்கிறேன்.

"கிட்ஸ் தமிழ் ஸ்டோரி' எனும் சிறார் குழு மூலம், இணையவெளியில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். வளைகுடா நாடுகள், தமிழ்நாட்டிலிருந்து 150-க்கும் அதிகமான குழந்தைகள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

கதை கேட்பது, கதை சொல்வது, படம் வரைதல், சிறார் பாடல்கள், விடுகதைகள், கேள்வி - பதில்கள் என்று பலவகை பரிமாணங்களில் விருப்பமுள்ளவற்றில் ஈடுபட சிறார்களை ஊக்குவிக்கும் களமாக, இந்த அமைப்பு செயல்படுகிறது.

குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் கதை எழுதுவது மீன் பிடித்துத் தருவது மாதிரி. குழந்தைகளை கதை எழுத வைப்பது குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மாதிரி. நான் குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com