வரலாறு போற்றும் துலாபாரம்

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயில், கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில், தமிழகத்தில் பல கோயில்களிலும் பிரார்த்தனைக்காக தராசில் தனது எடைக்கு பொருள் நிறுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
வரலாறு போற்றும் துலாபாரம்

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயில், கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில், திருமலை - திருப்பதி போன்று தமிழகத்தில் பல கோயில்களிலும் பிரார்த்தனைக்காக தராசில் தனது எடைக்கு பொருள் நிறுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தராசை துலாக்கோல், துலாபாரம், துலாம் என்றும் அழைக்கப்படுகிறது. அரசனின் நீதிவழுவா தன்மைக்கு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.

சிபி சக்கரவர்த்தி: சோழ மன்னர் சிபி சக்கரவர்த்தி ஒரு புறாவுக்குக்காக தானே தராசில் அமர்ந்து தன்னையே அளித்ததும் உண்டு. இவரது செய்கை சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களிலும் போற்றப்படுகின்றன.

துலாபார தானம்:

மன்னர்கள் தங்களது பிறந்த நாளின் போதும், முடி சூட்டிக் கொண்ட நாளிலும் துலாபாரம் செய்து பொருளைத் தானமாகக் கோயிலுக்கு அளித்தனர்.

பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் தேவி வீரமகாதேவியார், துலாபாரமும் ஹிரண்யகர்ப்பமும் செய்து தானம் அளித்தார். பாண்டிய மன்னர்களில் அரிகேசரி மாறவர்மன், தேர்மாறன், மாறவர்மன் இராஜசிம்மன் ஆகியோர் துலாபாரம் செய்தனர்.

துலாபாரத் தளி:

சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனும், இராசராச சோழனும் துலாபாரம் தானம் அளித்தனர். பராந்தக சோழன் பல கோயில்களுக்கு இத்தகைய தானம் அளித்தார். உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயிலில் உள்ள பராந்தக சோழன் கல்வெட்டில் "துலாபாரத்தளி' என்றே குறிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இராசராசன் தனது 29-ஆவது ஆட்சி ஆண்டில் திருவிசலூர் கோயிலுக்கு விஜயம் செய்து துலாபாரம் செய்தார் என்று கோயிற் கல்வெட்டுக் கூறுகிறது. துலாபாரம் செய்து மீதி இருந்த பொன்னால் தாமரை மலர் செய்து திருவலஞ்சுழி சேத்ரபால தேவருக்கு இட்டு திருவடி தொழுதார் என திருவலஞ்சுழி கோயில் கல்வெட்டு கூறுகிறது.

பொன் வேய்ந்தப் பெருமாள்:

கி.பி. 1251-இல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையில் ஆட்சிப் பீடம் ஏறினார். பிற்காலப் பாண்டியர் காலத்தில் இவரே தலைச்சிறந்தவர்.

பல அரசர்களை வென்று, சிதம்பரம் சென்று ஆடவல்லானைப் போற்றினார். திருவரங்கம் சென்று அரவணையில் துயிலும் அரங்கனைச் சேவித்தார். இவர் "பொன் வேய்ந்த மகிபதி, "பொன்வேய்ந்த பெருமான் என்ற பட்டங்கள் பெற்றான். "எம்மண்டலமும் கொண்டு கோயில் பொன் வேய்ந்த பெருமான் சுந்தர பாண்டிய தேவர் எனக் கல்வெட்டுகளும், திருவரங்கம் கோயிலொழுகும் இவனது புகழ்பாடுகின்றன.

மன்னர்கள் துலாபாரம் செய்ய "துலாபுருஷ மண்டபம்' கட்டுவித்து அதில் துலாக்கோல் மாட்டி இருந்தனர். திருவரங்கத்தில் இருக்கும் நான்கு வீதிகளில் 24 துலாபுருஷ மண்டபங்கள் கட்டுவித்து துலாபாரம் செய்தனர்.

இம்மன்னர் தனது வெற்றிக்கு எல்லாம் துணை நின்ற தனது பட்டத்து யானையுடன் துலாபாரம் ஏற வேண்டும் என விரும்பினார். பெரிய படகுகளைச் செய்வித்தார். தங்கத் தகடுகளால் போர்த்தி அழகு செய்து, காவிரியில் மிதக்கச் செய்தார். ஒரு படகில் தான், தனது பட்டத்து யானை மீது தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்தார். படகு நீரில் அமிழும் அளவை குறிக்கச் செய்தார். மீண்டும் அக்குறியீடு நீரில் அமிழும் அளவு அப்படகில் பொன், முத்து, நவமணிகளை நிரப்பச் செய்தார். அவ்விரண்டு படகுகளையும் நவமணிகளையும் அரங்கனுக்கு அர்ப்பணித்தார்.

தான் கொடுத்த அவ்வளவு பொன்னையும் கொண்டு விமானத்தையும், மண்டபங்களையும், தூண்களையும் துலாபாரம் செய்த பொன்னால் செய்யப்பட்டத் தகடுகளால் போர்த்தி ஒளிவிடச் செய்தார் எனத் திருவரங்கம் கோயிலொழுகு கூறுகிறது.

இந்தக் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றின் கிழக்குச் சுவரில் இரண்டு பக்கங்களிலும் தன் சின்னமான இரண்டு மீன்களைப் பொறித்து, இடையே மிக நீண்ட கல்வெட்டு ஒன்றையும் வெட்டுவித்தார். "ஹேமாச்சாதனராஜா' என்று தன்னைச் சிறப்பாகக் குறிப்பிட்டு, தான் செய்த தங்கத் திருப்பணி அத்தனையையும் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வெட்டில் "பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒரு பெருங் கடவுளும் இனிதுறையும் இருபெருங்க காவிரி இடை நிலத்திலங்கும் திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்ப பன்முறை அணி துலாபாரமேறிப் பொன்மலையெனை பொலிந்து தோன்றவும்' என இவனது திருப்பணிகள் குறிக்கப்படுகின்றன.

இவர் சிதம்பரம் கோயிலில் கனக சபையில் கனக துலாபாரமும், முத்து துலாபாரமும் செய்தார்.

கோப்பெருஞ்சிங்கன் சிதம்பரம் கோயிலில் கிழக்குக் கோபுரத்தை ஏழு நிலை கோபுரமாக எழுப்பித்தார். நான்கு திக்கிலும் உள்ள மன்னர்களை வென்று, கொண்ட பொருளில் துலாபாரம் செய்து இந்தத் திருப்பணிகளைச் செய்வித்தார் என ஒரு கல்வெட்டு கூறுகிறது.

விஜயநகர மன்னர்கள்:

விஜயநகர மன்னர்களும் துலாபாரம் செய்து தானம் அளித்தனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர மன்னர்களின் தலைநகரான ஹம்பியில் துலாபுருஷ தான மண்டபம் உள்ளது. இரு உயர்ந்த தூண்களும், படுக்கை வாட்டில் குறுக்கே ஒரு தூணும் காணப்படுகிறது.

மகாமக குளச்சிற்பம்: பின்னர் வந்த நாயக்க மன்னர்களும் இவ்வாறு துலாதானம் செய்துள்ளனர். கும்பகோணத்தில் மகாமகக் குளத்தின் கரையில் சோடச மகாதானங்கள் என்னும் 16 வகையான தானங்கள் அளித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு அளிக்கப்பட்ட 16 தானங்களுக்கும் 16 மண்டபங்களையும் அத்துடன் இணைந்த 16 கோயில்களையும் கட்டினார்.

தஞ்சை நாயக்க மன்னர்களில் தலைச்சிறந்தவராக ரகுநாத நாயகன். இங்கு காணும் மண்டபங்களில் பெரியது துலாபுருஷ மண்டபமாகும்.

மன்னன் துலாத்தட்டு அமைத்து பொன்தானம் அளித்தார். இக்காட்சி அம்மண்டபத்து உட்புற விதானம் முழுவதும் சிற்பமாக இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமன்றி துலாக்கோல் மாட்டுவதற்காக அமைந்துள்ள கற்பகுதியில் ரகுநாதன் ஒரு தட்டில் அமர்ந்திருப்பது போன்றும், மறுதட்டில் பொற்குவை இருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் ஓவியம்:

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் கோயில் வரலாற்று, கலை, இசைச் சிறப்பு வாய்ந்த இடமாகும். இங்கு தேவாசிரிய மண்டபத்தில், மராட்டியக் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. திருவாரூர் ஓவியத்தில் "விசுவகர்மாவின்' உருவம் காட்டப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா கையில் துலாக்கோலும் ஜலகெண்டியும் பிடித்துக் கொண்டிருக்கிறார். விசுவகர்மாவின் துலாக்கோலில் ஒரு தட்டு கீழும், மறுதட்டு மேலும் உள்ளது. எடை மிகுதியால் கீழே இறங்கி உள்ள தட்டில் "திருவாரூர்' என்றும் மறுதட்டில் "பூ மண்டலம்' என்றும் எழுதப்பட்டுள்ளது. தேவலோகத்தில் உள்ள தியாகராசரை பூலோகத்தில் தாபிக்க திருவாரூரே சிறந்த இடம் என விசுவகர்மா எடை போட்டுத் தேர்ந்தெடுத்ததையே இக்காட்சி விளக்குகிறது.

எனவே புராணங்கள் மட்டுமல்லாமல், வரலாற்றிலும், இன்றைய நம் அன்றாட வாழ்விலும் முக்கியமானப் பொருளாக "துலாக்கோல்', "துலாபாரமும்" விளங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com