கல்லிலே கலைவண்ணம்: பழுவூர் கோயில்கள்

அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்' காவியத்தில் பழுவேட்டரையர்களை அறிந்தோம்.  சோழ மன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
கல்லிலே கலைவண்ணம்: பழுவூர் கோயில்கள்
Published on
Updated on
3 min read

அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்' காவியத்தில் பழுவேட்டரையர்களை அறிந்தோம்.  சோழ மன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளுடன் அறிய முடிகிறது.

பழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த "பழுவூர்'  திருச்சியிலிருந்து அரியலூர் வழியாக கங்கைகொண்டசோழபுரம் செல்லும் சாலையில் சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூர் இன்று கீழப்பழுவூர், கீழையூர், மேலப்பழுவூர் என்று பல பகுதிகளாக அழைக்கப்படுகிறது. 

இந்தப் பகுதியில் உள்ள கோயில்கள் பழுவேட்டரைய மரபினரால் கட்டப்பட்டவை. இங்குள்ள கோயில்களில் கீழையூரில் உள்ள இரட்டைக் கோயில் எனப்படும் "அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்' ஒரு கலைக் காவியமாகத் திகழ்கிறது.

பழுவேட்டரையர்கள்: பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு சேரர் வழிவந்த பழுவேட்டரையர் என்னும் வேளீர் ஆட்சி செய்தனர். பழுவூருக்கும் சேர நாட்டுக்கும் தொடர்பு இருந்தது என்பதை திருஞானசம்பந்தரின் பாடல்களில் அறிய முடிகிறது. 

இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆண்ட பழுவேட்டரையர் வரலாறு கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் தெளிவாகத் தெரியவில்லை. 

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழப் பேரரசர்களுக்கு இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் குலப் பெண்கள் சோழப் பேரரசிகளாகவும் விளங்கும் பேறு பெற்று விளங்கினர்.

கி.பி.  பத்தாம் நூற்றாண்டில் சோழ பேரரசன் பராந்தக சோழனுக்கும், பாண்டிய மன்னன் இராஜநரசிம்மனுக்கும் நடைபெற்ற வெள்ளூர் போரில் பழுவேட்டரையன் கண்டன் அமுதன் என்பவன் சோழனுக்கு படைத்தலைவனாக நின்று பாண்டியனைத் தோல்வியுறச் செய்தான்.

பராந்தக சோழனின் தேவியரில் "அருள்மொழி வேங்கை' பழுவேட்டரைய குலப் பெண் ஆவாள். அவளுக்குப் பிறந்தவரை சோழ மன்னர்களில் ஒருவரான அரிஞ்சய சோழர்.
இராஜராஜ சோழனின் தேவியர்களின் ஒருத்தியான நக்கன் பஞ்சவன் மாதேவி என்பவர் பழுவேட்டரையர் மரபை சேர்ந்தவள்.
குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், குமரன் மதுராந்தகன், கண்டன் மறவன், பஞ்சவன் மாதேவி, அக்கார நங்கை, செம்பியன் மாதேவடிகள் (முன்னை வல்லவரையர் மனைவி) போன்றவர்கள் பழுவேட்டரையர் மரபிலேயே வந்தவர்கள் ஆவர்.

பழுவூர் கோயில்கள்:

பழுவூரில் முடிகொண்ட சோழஈசுவரம், திருத்தோற்றமுடையார் கோயில், திருப்புலக்கீசுவரமுடைய மகாதேவர் கோயில், யோகவனீசுர சுவாமி கோயில், ஸ்ரீகண்ட ஈசுவரம் (பள்ளிப்படை கோயில்) குலோத்துங்க சோழ அக்க சாலை ஈசுவர முடியார், பவித்ர மாணிக்க விண்ணகர் கோயில் போன்ற கோயில்கள் வழிபாட்டில் இருந்து மறைந்து போய்விட்டன. ஆனால் தற்பொழுது பகைவிடை ஈசுவரம், அவனி கந்தர்ப்ப ஈசுவரகிருகம், ஆலந்துரையார் கோயில், மறவன்சுவரம், பெருமாள் கோயில் ஆகியவை மட்டுமே இன்று பழுவேட்டரையர்களின் வரலாற்றுப் பெருமையை எடுத்துக் கூறுகின்றன.

கீழப்பழுவூரில் உள்ள ஆளந்துறையார் கோயில் ஆலமரத்தை தலமரமாகக் கொண்டு விளங்குவதால் ஆலந்துறை என அழைக்கப்படுகிறது. இறைவன் வடமூலநாதர் எனவும், இறைவி அருந்தவ நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். 

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகங்களில் போற்றி பாடியிருக்கின்றார். அவருடைய காலத்தில் இந்தக் கோயில் செங்கல் திருப்பணியாக இருந்திருக்க வேண்டும். பின்னர், பழுவேட்டரைய அரசன் மறவன் கண்டனால் கற்றளியாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோயில் இருக்கும் பகுதி "சிறுபழூவூர்' என்று குறிக்கப்படுகிறது.

அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்: மேலப் பழூவூரை அடுத்துள்ள கீழையூரில் உள்ள "அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்'  எனப்படும் கோயில் பழுவேட்டரையர்களின் கலைச்சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

இக்கோயில் அமைந்திருக்கும் இடம் அவனி கந்தர்வபுரம் என்றும் அவனி கந்தர்ப்பபுரம் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன.

கோயில் வளாகத்தில் இரண்டு கோயில்கள்  உள்ளன.  இக்கோயில் முழுமையும் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம் என அழைக்கப்படுகிறது.

மேற்கு பார்த்த திருக்கோயில் வாயிலில் மூன்று நிலை கோபுரம். கோபுரத்தின் அடித்தளப்பகுதியில் நுழைவு வாயிலின் இருபுறமும் அழகிய துவார பாலகர்கள் காட்சி அளிக்கின்றனர்.

கோயில் திருச்சுற்றில் இரு கோயில்கள் உள்ளன. வடபுறம் இருக்கும் கோயில் "வட வாயில் ஸ்ரீகோயில்' எனவும், தென் பகுதியில் அமைந்துள்ள கோயில் "தென்வாயில் ஸ்ரீகோயில்' எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, கோயில்களை "சோழிச்சுரம்' எனவும் "அகத்தீசுவரம்' எனவும் அழைக்கின்றனர்.
திருச்சுற்றில் ஆறு பரிகார ஆலயங்கள் உள்ளன. கணபதி, முருகன், சண்டிகேசுவரர், ஜேஷ்டை, சூரியன், சப்த மாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள்உள்ளன.

கிழக்கு தேவகோட்டத்தில் முருகனின் அமர்ந்த கோலத்தைக் காண்கிறோம். மேலிரு கரங்களில் வஜ்ரம்-  சக்தி ஆயுதங்களை தாங்கியிருக்க, முன் வலக்கை அபய முத்திரை தாங்கியுள்ளது. திருமேனியின் பின்னால் தீச்சுடர்கள் ஒளிவீசுவது போல காட்டப்பட்டுள்ளது.  விமானம் முழுமையும் கல்லால் ஆனது.  வட்ட வடிவமான சிகரத்தை உடையதாக விளங்கும் கோயில் கலை படைப்பாக விளங்குகிறது.

கோபுர வாயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது தென்வாயில் ஸ்ரீகோயில். கொடிமர பீடம், நந்தி, மகாமண்டபம், இடைநாழிகை, முன்மண்டபம், கருவறை என அமைந்துள்ளது. மகா மண்டபம், கலையழகு மிக்க சிம்மம்- யாளி தூண்களுடன் காட்சி அளிக்கிறது. இத்தூண்களில் கலியுக நிம்மலன், கங்க மார்த்தாண்டன், மறவன் மானதனன், அரையுகன் அரையுளி, ராஜ ராஜ வஞ்சி இளங்கோ என்ற பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயில் வளாகத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தம சோழனது கல்வெட்டில் "மன்னுபெரும் பழூவூர்' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும், பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன் மாதேவி வேண்டுகோளுக்கிணங்கி, நெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது ஆதித்த சோழனது கல்வெட்டுகள். இதில் இடம்பெற்றுள்ள பழுவூர் மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனையும், குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாக இருந்தவர்கள்.

சோழர் கால கலைச்சிறப்புடன் கோயில் பரிவார ஆலயங்களுடன் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கு சான்றாக, பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம் கோயில் உள்ளது. கலைக்காவியமாக விளங்கும் இக்கோயிலை தமிழக அரசின் தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து, போற்றி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com