கைக்கு எட்டும் தூரத்தில் எல்லாம்!

வில்லன்,  குணச்சித்திரம்... என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எளிதில் கையாளும்  கலைஞன், வினோத் சாகர். "நான்', "ஹரிதாஸ்', "ஆரஞ்சு மிட்டாய்', "கிருமி', "உறுமீன்',  "முண்டாசுபட்டி', "ராட்சசன்' என  தான் இ
கைக்கு எட்டும் தூரத்தில் எல்லாம்!


வில்லன், குணச்சித்திரம்... என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எளிதில் கையாளும் கலைஞன், வினோத் சாகர். "நான்', "ஹரிதாஸ்', "ஆரஞ்சு மிட்டாய்', "கிருமி', "உறுமீன்', "முண்டாசுபட்டி', "ராட்சசன்' என தான் இருந்தால் அது நல்ல சினிமா என்கிற அளவுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருப்பது இவரின் அசாத்தியம்.
""பள்ளி வாழ்க்கைதான் எனக்குள் இருந்த கலைஞனை வெளிக் கொண்டு வந்தது. அதை கடந்து வந்ததில் அத்தனை அற்புதம். 1-ஆம் வகுப்பில் இருந்து 8-ஆம் வகுப்பு வரைக்குமான பயணத்தில் எனக்குள் இருந்த கலை வெளிப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டே தொடர்ச்சியான பயணம். துபையில் ஆர்.ஜே. பணி பின் மீண்டும் சினிமாவுக்கு வந்தது என நீண்ட பயணம் யாருக்கும் கிடைக்காது. புது தொடுவானங்கள், புதுப் பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் ஏராளம்.
நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளிய விஷயங்கள் உண்டு. ஒருவேளை என்னை கீழே தள்ளினால் மறுபடியும் எழுந்திருக்கும் சக்தியை நானே உணர்ந்த விநாடிகள் உண்டு. வந்து விழுகிற பாராட்டு வார்த்தைகளில் அவ்வளவு அன்பு. இதை கடைசி வரைக்கும் தக்க வைத்து கொள்ள வேண்டும்.'' ஆர்வமாக பேசத் தொடங்குகிறார் வினோத் சாகர்.
நல்ல சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது. என் வாழ்க்கையில் நடிகன் என்பது எனக்கு தகுதியான இடம்தான். வேறு எதற்கும் எனக்கு தகுதியில்லை. அதை நான் உணர்ந்தே வந்திருக்கிறேன். விஜய் ஆண்டனி, இயக்குநர் "முண்டாசுப்பட்டி' ராம் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. அவர்கள்தான் என்னை உணர்ந்து இழுத்து வந்தவர்கள். என்னை புரிந்து கொண்டு தோள் கொடுத்தார்கள். இப்போது வந்து விழுகிற பாராட்டு வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் இயக்குநர்கள்தான் காரணம்.
இதுவரை எனக்கு கிடைத்ததை நன்றாக செய்திருக்கிறேன். பொதுவாக, சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே தளத்தில் பயணமாவார்கள். மாற்றுச் சிந்தனையை அமுக்கி விடுவார்கள். ஆனால், ஐந்து வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றி என்று நான் பார்க்கவில்லை. இது புதிய சிந்தனைகளின் வெற்றி.
மக்களின் ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பாக நடக்கும். இங்கு கதாநாயகர் அரசியல் என்பது தொடர்ந்து வருகிறது. அதையும் தாண்டி இளைஞர்கள் வர வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு இருக்கிற நல்ல நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவர்கள்தான்.
நடிகனாக இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் இந்த மூன்று பேரின் இடங்கள் பெரும் கனவு. ஆனால், அதை சுலபமாக எட்டி விட முடியாது. இப்போது நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். சில உயரங்களைத் தொடும் போது இழப்பதும் அதிகமா இருக்கும். அதற்கு நடிகர்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்கும் அந்த இடம்தான் ஆசை. என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்கு துணையாக இருப்பார் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள்.
இதுதான் அந்த இடத்துக்கு என்னை கொண்டு செல்லும் விஷயம். நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. சிலர் பார்த்த முகமாக இருக்கே... என்று யோசிக்கிறார்கள். இதனால் நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம்.
நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில் இருக்கிறது தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயார் செய்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும்போது, என்னை மாதிரி என நினைத்து கதை செய்கிறார்.... அவர் கையில் இருக்கிறது. அப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனாக எனக்கு எந்தக் குறையும் வராது.
உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமப் போய் விட்டால், இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்து விட்டால், என் பங்களிப்பு போதவில்லை என யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிந்து விடும். சம்பளம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு போய் நிற்பேன். அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.
கலைஞனாக எல்லா எல்லைகளையும் சுற்றி வர ஆசை. இப்போதுதான் அது கனிந்து வந்திருக்கிறது. "ராட்சசன்' படத்தின் தெலுங்கு பதிப்பு, நல்ல பெயரை பெற்று தந்தது. அது தந்த வெளிச்சத்தில் தெலுங்கு, மலையாள சினிமா வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் பகத் பாசில் நடிக்கும் படம், சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் படம்... என இரண்டிலுமே நல்ல வாய்ப்பு. குஞ்சக போபன் இயக்கும் படத்திலும் வாய்ப்பு வந்துள்ளது.
தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தமிழில் அஜித் நடிக்கும் படம் " கொடுவா', இந்தியன் 2 என எல்லாமே எதிர்பார்ப்பில் உள்ளன. சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தால் போதாது. அர்ப்பணிப்பு தேவை. 20, 70 என சினிமா வயது பார்க்காது. திறமை இருந்தால் அதுவாகவே எடுத்துக் கொள்ளும். இது அறிவுரை இல்லை. என் அனுபவம்
நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது'' நம்பிக்கையாக பேசி முடிக்கிறார் வினோத் சாகர்.
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com